செவ்வாய், 9 ஏப்ரல், 2019

நாட்டை கொழுத்திய .. அத்வானி .. முரளிமனோகர் ஜோஷி.. தன்வினை தன்னை சுடும் !

savukkuonline.com : எல்.கே. அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் ஒதுக்கப்பட்டதைக் காணுகையில் கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது
பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரையும் ஆர்எஸ்எஸ் – பாஜக தலைமை பொட்டல்வெளியில் நிறுத்தியிருப்பதைப் பார்த்து யாருக்கேனும் ஒரு மனநிறைவும், இவர்களுக்கு இது தேவைதான் என்ற எண்ணமும் அடுத்தடுத்து ஏற்படும் தான். ஆனாலும், இந்த இருவரும் இப்படி வெளியேற்றப்படுவதைக் காணப் பலரும் விரும்பியிருப்பார்கள். கட்சியின் வழிகாட்டிகள் என்று போற்றப்பட்ட இந்த இருவருக்கும் அரசியல் வனாந்திரத்திற்கு வழிகாட்டப்பட்டதன் அவமதிப்பு, முதுகில் குத்தப்பட்ட புறக்கணிப்பு, அவர்களது ஆத்திரம், சீழ் வடியும் காயம் என்ற இந்தச் சூழலைக் கொண்டாடப் பலரும் விரும்புவார்கள்.

இந்த நாடகத்தில் ஒரு கோமாளிப் பாத்திரமாக வருகிறது வரலாறு. அது திடுமெனத் திரையை விலக்கி அரங்கத்திலிருப்போரைப் பார்த்து “இப்ப உங்களுக்கெல்லாம் சந்தோஷம்தானா” என்று கேட்கத்தான் செய்கிறது.
இந்திய மக்களாகிய நம்மில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதற்குப் பிறகு பிறந்தவர்கள். அப்படியொரு நிகழ்வு மனதில் பதிய முடியாத அளவுக்குக் கோடிக்கணக்கானவர்கள் அப்போது மிக இளைய வயதினராக இருந்திருப்பார்கள். எஞ்சியிருக்கிறவர்களைப் பொறுத்தமட்டில், ‘செங்கல் பூஜை’, ‘போலி மதச்சார்பின்மை’, ‘சங் பரிவாரம்’ போன்ற வார்த்தைகள் பொதுப் புழக்கத்திற்கு வருவதற்கு முந்தைய காலகட்டத்தை நினைவுகூர்வதற்குப் பெரு முயற்சி தேவைப்படும். 1980ஆம் ஆண்டுகளின் இடைக்கட்டத்தில்தான் ஆர்எஸ்எஸ் – பாஜக தலைவர்களாலும் அவர்களது பல்வேறு உதிரிக் கும்பல்களாலும் பாபர் மசூதி பெரும் பிரச்சினையாகக் கிளப்பப்பட்டது. அது வரையில் காலிஸ்தான் இயக்கம், போபால் விஷ வாயு சோகம், எய்ட்ஸ், போபோர்ஸ் வழக்கு, கணினிமயமாக்கல், பெரும் நிறுவனங்களைக் கண்காணிப்பதற்கான அதிகாரபூர்வ விதிகளை திருபாய் அம்பானி உறுத்தலே இல்லாமல் உதறித் தள்ளிய அலட்சியம், மண்டல் அறிக்கை, பல்வேறு இட ஒதுக்கீடுகளின் தாக்கங்கள், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டுவர முயன்ற பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என நாட்டின் பல உண்மையான  பிரச்சினைகள் பொதுமக்களின் மனங்களில் குடியேறியிருந்தன.
அதிகாரத்தை அடையக் குறுக்கு வழி
இன்றைய பல சவால்கள் அன்றைக்கும் இருந்தன. ஊழல், மக்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வு, முறையான கல்வி வாய்ப்பின்மை, அனைவருக்குமான சீரான மருத்துவ வசதியின்மை, பரவலான வேலையின்மை, இயற்கைச் சூழலுக்கு ஏற்படுத்தப்பட்ட சீர்குலைவுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் அப்போதும் இருந்தன. அந்தப் பிரச்சினைகளின் அடிப்படையில் காங்கிரஸ் அரசைக் கீழிறக்குவதற்கான வாய்ப்புகளும் இருந்தன. பல கட்சிகள் காங்கிரஸ் வெளியேற்றப்பட்ட இந்தியாவாக இல்லாவிட்டாலும், காங்கிரஸ் பின்னுக்குத் தள்ளப்பட்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று விரும்பின. அப்படியொரு இந்தியா ஒரு மகிழ்ச்சிகரமான, சமத்துவத்துக்கான கூடுதல் வாய்ப்புள்ள நாடாக இருக்கும் என்று கருதின. ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முற்றிலும் மாறுபட்டதொரு வழியை ஆர்எஸ்எஸ் – பாஜக தலைவர்கள் கண்டுபிடித்தனர். கல்வி, மருத்துவம், பெண்ணுரிமை போன்ற உண்மைப் பிரச்சினைகளை மறக்கடித்து, அயோத்தியில் ராமர் கோவில் என்னும் பாத்திரத்தில் இந்துப் பெருமை என்பதைப் போட்டுக் கொதிக்க வைக்கும் வழி அது. உண்மையான பக்தியைத் திரித்து அடிப்படையாக மதவாத உணர்வுகளைக் கிளறிவிட்டு என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று முயன்று பார்க்கிற வழி அது. அத்வானி, ஜோஷி இருவருமே முதலில் குறிப்பிட்ட பிரச்சினைகளையும் வாய்ப்புகளையும் விட்டுவிட்டு, மதப் பகைமையை வளர்ப்பதிலும் சிறிய – பெரிய வன்முறைகளைத் தூண்டுவதிலும் கவனம் செலுத்தினார்கள். தந்திரம் நிறைந்த அந்த இரண்டு பேருமே தாங்கள் செய்வது என்ன என்று தெரிந்தேதான் செய்தார்கள்.
திட்டமிட்ட சூதாட்டம்
ராமர் கோவில் பிரச்சினை எடுத்துக்கொள்ளப்பட்டது ஒரு சூதாட்டம்தான். ஆனால் திட்டமிட்ட சூதாட்டம். ஆர்எஸ்எஸ் – பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத் கூட்டம் காங்கிரஸ் கட்சி உட்பூசல்களால் கிழிந்து கிடப்பதைத் தெரிந்து வைத்திருந்தது. காங்கிரஸ் பேசிய மதச்சார்பின்மை வலுவற்றதாக இருந்ததைத் தெரிந்துவைத்திருந்தது (காங்கிரஸ் போலித்தனத்தின் மீது இலக்குத் தவறாமல் பாய்ந்த அம்பாக இருந்தது அத்வானியின் போலி மதச்சார்பின்மை பற்றிய கூச்சல்). வளர்ந்துவந்த மாநிலக் கட்சிகளுக்கு ஒரு தேசமாக இந்தியாவின் ஒட்டுமொத்த நலன்களில் அக்கறையில்லை என்பதைத் தெரிந்துவைத்திருந்தது. ஆட்சியின் மீது வெறுப்போடு இருந்த, வேலைவாய்ப்புகள் கிடைக்காத பெருந்திரளான ஆண் இளைஞர்கள் – குறைந்தபட்சம் மத்திய இந்தியாவிலும் வட இந்தியாவிலும் இருந்த அப்படிப்பட்ட ஆண் இளைஞர்கள் – ஒரு வெடிமருந்துக் கிடங்காக இருந்ததைத் தெரிந்துவைத்திருந்தது. அந்தக் கிடங்கை வெடிக்கவைப்பதற்கு, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தோரை எதிரிகளாகச் சுட்டிக்காட்டி, மதவெறி எண்ணையை ஊற்றிப் பற்றவைக்கப்பட்ட ஒரு சின்னஞ்சிறு காகிதத்துண்டு போதும் என்பதைத் தெரிந்துவைத்திருந்தது. காங்கிரசின் போலி மதச்சார்பின்மை வாதத்தை வீழ்த்துகிற வலுவான வாய்ப்பு தங்களது போலி இந்துமத வாதத்திற்கு இருக்கிறது என்று நீண்ட காலமாகக் கொம்புசீவப்பட்டு வந்த அவர்களது உள்ளுணர்வுகள் தெரிவித்தன. பசு வட்டாரங்கள் எனப்பட்ட மாநிலங்களிலாவது அதற்கான சாத்தியம் இருக்கிறது என அந்த உள்ளுணர்வுகள் கூறின.
மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் – இந்தத் தலைவர்களுக்குத் தங்களது ரத யாத்திரைகளும், அயோத்திக்கு வண்டி வண்டியாக எடுத்துச்செல்லப்பட்ட பூஜைக்குரிய செங்கல்களும் வழியெங்கும் ரத்தம் கொட்ட வைக்கும் என்று நன்றாகத் தெரியும். அது தெரியும் என்பது மட்டுமல்ல, அவர்களது அந்தச் சூதாட்டத்தின் வெற்றியே, நாட்டின் விரிவான பகுதிகளில் மக்களை மத அடிப்படையில் கூறுபோடுகிற வன்முறைகளைத்தான் சார்ந்திருந்தது. பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்ட பிறகு அதுதான் நடந்தது.
நமக்கு மறதி ஏற்படக்கூடும். கவனத்தில் கொள்ளாமல் விட்டிருக்கக்கூடும். ஆயினும், அத்வானிக்கும் ஜோஷிக்கும் அவர்களுக்கு அடுத்த மட்டத்தில் இருந்த அஷோக் சிங்கால், கே.என். கோவிந்தாச்சார்யா, உமா பாரதி, சாத்வி ரிதம்பரா, ஜஸ்வந்த் சிங் ஆகியோரிடமிருந்து உணர்ச்சிபூர்வமான உறுதியான பேராதரவு கிடைத்தது. அது மட்டுமல்ல, யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, அருண் ஷோரி போன்றவர்களின் ஆதரவும் அப்போது இந்த இருவருக்கும் கிடைத்தது. (தாங்கள் ஊட்டி வளர்த்த ஒரு கொடூரப் பிறவியால் இவ்வளவு மோசமான பிரச்சினைகளா என்று இன்று இந்த மூவரும் கவலைப்படுகிறார்கள் என்பது வேறு விஷயம்.)
அவர்களுக்கு அடுத்த படிகளில் இருந்த நரேந்திர மோடி, பிரவீண் தொகாடியா உள்ளிட்ட அமைப்பாளர்கள், கர சேவகர்களில் ஒருவராக அயோத்திக்குச் சென்றவரான மனோகர் பரிக்கர் போன்ற இளம் தலைவர்களும் இந்த இரு தலைவர்களுக்கும் ஆதரவளித்தார்கள்.
பாஜகவின் இன்றைய தலைவர்களுக்கும், மரியாதையே இல்லாமல் இடிபாடுகளோடு ஒதுக்கிவைக்கப்பட்டுவிட்ட இந்த   இருவருக்கும் இடையே சில வேறுபாடுகள் இருக்கக்கூடும்தான். ஆனால் வித்தியாசம் என்பது செயல்படும் பாணியில்தான், சாரத்தில் அல்ல என்பது முக்கியம். பள்ளிப் பாடப் புத்தகங்களில் உண்மைகளைத் திரித்து எழுதியது, பண்பாட்டு அமைப்புகள் மீதும் கல்வி நிறுவனங்கள் மீதும் முதல் கட்டத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டது ஆகிய செயல்கள் அன்றைய மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில்தான் நடத்தப்பட்டன. அதே போல் அன்றைய துணைப் பிரதமர் அத்வானி, தன்னால் முடிந்த அளவுக்கு, கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்திருந்த நிலைமையின் வரம்புகளுக்குள், பெரும்பான்மை மதவாத அரசியல் திட்டங்களைச் செயல்படுத்தினார்.

தொடரும் பீதிகள்
2002ல் குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட வன்முறைகள் அரங்கேற்றப்பட்ட பிறகு, அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி இருவரது ஜனநாயக மாண்பாளர் முகமூடிகளும் கழன்று விழுந்தன. அன்றைய வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தங்களை உயர் பீடத்தில் வைத்துக்கொண்ட இருவரும், தங்களை விடவும் சாமர்த்தியமாக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிறவரான திருவாளர் மோடியைக் கையாள வேண்டியவர்களானார்கள். குஜராத் கலவரங்கள் காரணமாக மோடியை முதலமைச்சர் பதவியிலிருந்தே தூக்கிவிட வாஜ்பாய் முயன்றிருக்கலாம். ஆனால் மோடியின் செயலை நியாயப்படுத்தினார் அத்வானி. ஆகவே வாஜ்பாய்க்குத் தனது முடிவைச் செயல்படுத்தும் துணிவு வரவில்லை. அத்வானியின் சீடரோ வாய்வீச்சில் அவரையே விஞ்சியதோடு, இன்று அவரை அப்புறப்படுத்தவும் துணிந்துவிட்டார். அந்தச் சீடர் வளர்வதற்கு அன்று அந்த முக்கியமான தருணத்தில் விதையூன்றியவர் அத்வானியேதான் என்று தெரியவருகிறபோது, இதெல்லாம் வேண்டியதுதான் என்ற ஒரு திருப்தி ஏற்படத்தான் செய்கிறது.
திருவாளர்கள் அத்வானி, ஜோஷி இருவருக்கும் கட்டாய சந்நியாசம் அளிக்கப்பட்டு, அரியணையில் அமர வேண்டும் என்ற அவர்களது பெருங்கனவு நிறைவேறாமலே போய்விட்டது என்பதை நினைக்கிறபோது அந்தத் திருப்தி பல மடங்காகிறது. அதேவேளையில், இந்த இருவருக்கும் இறுதியாக வரலாற்றின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதைக் கண்டு ஏற்படுகிற பெருங்களிப்பை மட்டுப்படுத்துவதாக, இவர்கள் இருவரும் உச்சத்தில் இருந்தபோது இந்த நாட்டிற்கு ஏற்படுத்திய பீதிகள் பற்றிய நினைவுகள் சூழ்கின்றன.
அந்தப் பீதிகள் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை என்பது மட்டுமல்ல; முன்னெப்போதையும் விடப் பெரிதாக வளர்ந்திருக்கின்றன!
ருச்சி ஜோஷி
(ருச்சி ஜோஷி இலக்கியப் படைப்பாளி, திரைப்பட இயக்குநர், அரசியல் கட்டுரையாளர்)
நன்றி: தி இந்து
https://www.thehindu.com/opinion/op-ed/leaders-who-ignited-a-deadly-fire/article26725236.ece?homepage=true
தமிழில்: அ. குமரேசன்

கருத்துகள் இல்லை: