செவ்வாய், 9 ஏப்ரல், 2019

ரஃபேல்: மோடி அரசு அளித்த சலுகைகள்!


அம்பலமாக்கிய பிரெஞ்சு அதிபர்
ரஃபேல்: மோடி அரசு அளித்த சலுகைகள்! மின்னம்பலம்:   7.87 பில்லியன் யூரோ மதிப்புள்ள ரஃபேல் ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதியன்று கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்காக பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழு பல விதிவிலக்குகளையும், சலுகைகளையும் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விதிவிலக்குகள் அனைத்தும் முன்னெப்போதும் யாருக்கும் வழங்கப்படாதவை. ராணுவக் கொள்முதல் செயல்முறைகளில் முக்கிய விதிமுறைகளிலிருந்து விலக்கு உட்பட முக்கிய சலுகைகள் டசால்ட் ஏவியேஷன், எம்பிடிஏ ஆகிய இரண்டு பிரெஞ்சு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சலுகைகள் அனைத்தும் இறுதிகட்ட ஆய்வுக்கும், ஒப்புதல் பெறுவதற்கும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ராணுவ கொள்முதல் நடைமுறைகளில் பல்வேறு குளறுபடிகளும், மீறல்களும் இருப்பதாக உணர்ந்த பாரிக்கர் ஒப்புதல் அளிப்பதற்கு தயக்கம் காட்டினார்.

பாதுகாப்பு கொள்முதல் செயல்முறைகளில், தகாத செல்வாக்கை பயன்படுத்தவும், ஏஜெண்டுகள்/ஏஜென்சிகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரஃபேல் விவகாரத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் விநியோக நிறுவனங்கள் விதிமீறல்களில் ஈடுபடும்போது வழங்கப்பட வேண்டிய தண்டனைகளும் அமைதியாக நீக்கப்பட்டுவிட்டன. இவையனைத்தும் நீக்கப்பட்டதற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் குழுவின் ஒப்புதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்த ஆவணங்களில் மேற்கூறிய உண்மைகள் தெரிவிக்கப்படவில்லை.
இவையனைத்தும் முக்கிய கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களாகும். இந்திய பேச்சுவார்த்தைக் குழு 2016ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வெளியிட்ட இறுதி அறிக்கையில் இந்த உண்மைகள் அம்பலமாகியுள்ளன. இந்த ஆவணத்தை தி இந்து ஊடகம் பெற்று இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

பேச்சுவார்த்தையின் ஆரம்பகட்டத்தில், ஆஃப்செட் என்ற வார்த்தையை பயன்படுத்தும்படி இந்திய தரப்பு அறிவுறுத்தியும் பிரெஞ்சு பேச்சாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். ஆப்செட் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் ‘மேக் இன் இந்தியா’ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளதாக இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் இறுதி அறிக்கை கூறுகிறது.
ஆஃப்செட் ஒப்பந்தங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடுவர் மன்ற விதிகளை சேர்க்கும்படி டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், எம்பிடிஏ நிறுவனமும் முன்மொழிந்துள்ளன. அதன்படி, இரு தரப்புக்கும் இடையே ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் அதைத் தீர்ப்பதற்கு நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்படும். 24 மாதங்களுக்குள் பேச்சுவார்த்தையால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாவிட்டால் நடுவர் மன்றம் அமைத்து தீர்வு காணப்படும்.
விநியோக உடன்படிக்கை பிரிவு 21இல், எல்லா பிரச்சினைகளும் பேச்சுவார்த்தையால் தீர்க்கப்படும்; 24 மாதங்களுக்குள் தீர்வு காணாவிட்டால் ஐநா சர்வதேச வர்த்தக சட்ட நடுவர் மன்ற விதிமுறைகளின் கீழ் மத்தியஸ்தம் செய்து தீர்வு காணப்படும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆஃப்செட் ஒப்பந்தங்களில் ராணுவக் கொள்முதல் செயல்முறைகளின் பிரிவு 9ஐ கடைப்பிடிக்கும்படி இந்திய பேச்சுவார்த்தைக் குழு தொடர்ந்து வலியுறுத்தியும் பிரெஞ்சு தரப்பு மறுத்துள்ளது. 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்திலய பேச்சுவார்த்தையால் இவ்விவகாரத்தில் இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் அனைத்து முயற்சிகளும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து 2016 ஜூலை மாதத்தில், ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரு மாதங்களுக்கு முன்பு, ஆஃப்செட் ஒப்பந்தங்களில் பிரிவு 9 கடைப்பிடிக்கப்படாத விவகாரத்தை அரசிடம் தெரிவிக்க பாதுகாப்பு கையகப்படுத்தல் குழு முடிவு செய்தது. 2016 ஆகஸ்ட் மாதத்தில் இவ்விவகாரத்தில் இரண்டு பிரெஞ்சு நிறுவனங்களுக்கும் விலக்கு அளிக்க பாதுகாப்பு அமைச்சரவைக் குழு தீர்மானித்தது.
பாரிஸில் ரஃபேல் ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் 2015 மார்ச் 28 அன்று ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் லிமிட்டெட் நிறுவனம் 2015 ஏப்ரல் 24 அன்று பதிவு செய்யப்பட்டது. 2016 அக்டோபர் மாதத்தில் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் நிறுவனமும் கூட்டணி அமைத்தன. இந்த கூட்டணி நிறுவனம் 2017 பிப்ரவரியில் பதிவு செய்யப்பட்டது. இந்த கூட்டணி நிறுவனத்துக்கு டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் ரகசியமாக அனில் அம்பானியை உள்ளே கொண்டுவந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சர்ச்சை 2018 செப்டம்பர் மாதத்தில் எழுந்தது. அப்போது, ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்தை முன்மொழிந்தது இந்திய அரசுதான் எனவும், அம்பானியுடன் டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிரான்ஸின் முன்னாள் அதிபர் பிரான்கோஸ் ஹாலண்ட் தெரிவித்தார்.
பின்னர் ஊடகங்களும் இதுதொடர்பாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தன. பாஜக அரசும், அனில் அம்பானியும், டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துவருகின்றனர்.

கருத்துகள் இல்லை: