வெள்ளி, 12 ஏப்ரல், 2019

விவேக் ஓபராய், ஷங்கர் மகாதேவன் மற்றும் பலர் பாஜகவின் பே லிஸ்டில்

மோடி ஆதரவு: அணி சேரும் பாலிவுட் கலைஞர்கள்!மின்னம்பலம் : மோடிக்கு எதிராக திரைப்படம், நாடகம், இசை, இலக்கியம் என பல்வேறு துறைகளைச் சார்ந்த 800 கலைஞர்கள் கையெழுத்திட்டுள்ள நிலையில் நேற்று (ஏப்ரல் 10) பாலிவுட்டைச் சேர்ந்த 907 திரைக் கலைஞர்கள் மோடி ஆட்சியே தொடரவேண்டுமென அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேஷன் பர்ஸ்ட் கலக்டிவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலைத்துறையைச் சேர்ந்த நாங்கள், எந்த அழுத்தமும் முன் தீர்மானங்களுமின்றி புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுத்து வாக்களிக்க எங்கள் சக குடிமக்களுக்கு முறையிடுகிறோம். கடந்த ஐந்தாண்டுகளில் நமது தேசம், ஊழலற்ற வளர்ச்சி சார்ந்த நிர்வாகம் கொண்ட நல்ல அரசை பார்த்தது. இந்த காலத்தில், உலகளவில் இந்தியா அதிக மரியாதை பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொடர்ச்சியானது இந்த நேரத்தில் அவசியமானது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இது தவிர, பயங்கரவாதம் போன்ற சவால்கள் நம் அனைவருக்கும் முன்னிருக்கும் போது, நமது தேவை வலிமையான அரசுதானே தவிர வலிமையற்ற அரசல்ல. எனவே நம் தேவை தற்போதைய அரசை தொடர வைப்பது” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் விவேக் ஓபராய், ஷங்கர் மகாதேவன், கொய்னே மிட்ரா, பாயல் ரோஹட்கி, ராகுல் ராய், அலோக் நாத் உள்ளிட்ட பாலிவுட்டை சேர்ந்த 907 கலைஞர்கள் மோடி அரசுக்கு ஆதரவாக கையிழுத்திட்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் டி.எம். கிருஷ்ணா, க்ரிஷ் கர்னாட், வெற்றி மாறன், பா. ரஞ்ஜித் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த 800 கலைஞர்கள், மோடி மற்றும் பா.ஜ.க விற்கு எதிராக ‘வெறுப்பரசியலை வெளியேற்றுவோம்’ என ஏற்கனவே கையொப்பமிட்டது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 4ஆம் தேதி, ஆர்டிஸ்ட் யுனைட் இந்தியா மன்றத்தின் கீழ், “அன்பு மற்றும் இரக்கத்துக்கு, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு, இருள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான சக்திகளை தோற்கடிக்க வாக்களிப்போம்” என 600 தேசிய நாடக கலைஞர்கள் மோடிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: