செவ்வாய், 9 ஏப்ரல், 2019

பிரதமர் மோடி கோவை வருகை: கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

கோவை: கோவையில் இன்று நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவருடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
கோவை, கொடிசியா கண்காட்சி வளாகம் அருகே உள்ள மைதானத்தில், இன்று(9ம் தேதி) மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய நான்கு லோக்சபா தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா, த.மா.கா., தலைவர் வாசன், சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார், கொ.மு.க., தலைவர் பெஸ்ட் ராமசாமி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, பா.ம.க., நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். மேடையில்இரு வரிசைகளில் 30 பேர் அமரும் வகையில் இருக்கை போடப்படுகிறது.
 மூவாயிரம் போலீஸ்

பிரதமர் மோடி, தனி விமானம் மூலம், இன்று மாலை 6.30 மணியளவில் வருகிறார். தமிழக முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர். இதன்பின், பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இரவு 8.45 மணியளவில், தனி விமானத்தில் டில்லி திரும்புகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, கோவை விமான நிலையத்தில் இருந்து, கொடிசியா வரை, போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: