மின்னம்பலம் :
கருந்தேள் ராஜேஷ் :
தங்கப்
பதக்கம் திரைப்படத்துக்குக் கதை வசனம் எழுதுகிறார் இயக்குநர் மகேந்திரன்.
படம் பிரம்மாண்ட வெற்றி அடைகிறது. ஆனால் அதன் பின் ஒரு வருடத்துக்குத்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் யாருமே அவரைத் தேடி வரவில்லை. காரணம்,
தங்கப் பதக்கம் வெற்றி அடைந்தது, சிவாஜி கணேசனின் நடிப்பால்தான் என்று
பலரும் எண்ணி, கதை வசனம் எழுதியவரைப் பற்றி முற்றிலும் மறந்துபோனதே.
தானாகச் சென்று வாய்ப்புக் கேட்க அவரது தன்மானம் அனுமதிக்காததால், தங்கப் பதக்கம் படத்தின் வெற்றி விழாக் கேடயம், விழாவில் சிவாஜி அணிவித்த தங்கப் பதக்கம் ஆகியவற்றில் இருந்த வெள்ளியை விற்றே குடும்பம் நடத்துகிறார்.
அந்த ஒரு வருட முடிவில் அவரது வீட்டுக்கு எஸ்.எஸ். கருப்பசாமி என்று ஒருவர் வருகிறார். ஒரு திரைப்படம் தயாரிப்பதாகவும், அப்படத்தைப் பழம்பெரும் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு ஆகியவர்கள் இயக்கப்போவதாகவும், அதற்கு மகேந்திரன்தான் கதை வசனம் எழுத வேண்டும் என்றும் கேட்கிறார். மகேந்திரன் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டு எழுதிய அந்தப் படம் ‘வாழ்ந்து காட்டுகிறேன்’. படம் நன்றாக ஓடுகிறது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 25 படங்கள் கதை, வசனம், திரைக்கதை என்று எழுதிக் குவித்ததாகவே சொல்கிறார் மகேந்திரன்.
எப்போதும் தயார் நிலையில்
அந்தச் சம்பவம் பற்றி எழுதும்போது, ஒரு வருடம் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தாலும், எஸ்.எஸ். கருப்பசாமி வந்து கதவைத் தட்டியபோது சும்மா தூங்கிக்கொண்டிருக்காமல், அப்போதும் தயார் நிலையில் இருந்ததால்தான் அந்தப் பட வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லி, வாய்ப்பு என்பது எப்போது வந்தாலும், தயார் நிலையில் இருந்தே ஆக வேண்டியது நமது கடமை என்று தனது ‘சினிமாவும் நானும்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார் மிஸ்டர் மகேந்திரன் (அவர் எல்லாரையும் அப்படியே அழைப்பது வழக்கம்).
மகேந்திரனின் கதை சொல்லும் விதம், அவர் எடுத்த படங்களின் தாக்கம் என்று எத்தனை எழுதினாலும் போதாது. காரணம், அவரே சொல்லியபடி, எப்போதும் தயார் நிலையிலேயே இருந்திருக்கிறார் மகேந்திரன். அவரை ஆறு மாதங்கள் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு சென்னையில் பாஃப்டா திரைப்படக் கல்லூரியில் கிடைத்தது. டைரக்ஷன் துறைக்கு அவர் HOD. நான் திரைக்கதைத் துறையில் டைரக்டராகச் சேர்ந்திருந்தேன். என் துறைக்குத் தலைவர் பாக்யராஜ். அற்புதமாக வகுப்புகள் எடுப்பார் மகேந்திரன். கூடவே, நூலகத்தில், தன்னைச் சுற்றிலும் மாணவர்களை வைத்துக்கொண்டு, புத்தகங்களின் அருமை பற்றிப் பலசமயங்கள் பேசியிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அவரை அங்கே அணுகிப் பேச முடியும்.
சிரித்த முகத்தோடு பொறுமையாகவும், இனிமையாகவும் அவருக்கே உரிய வேகமான உடல்மொழியோடு பேசி, நமது சந்தேகங்களைத் தெளிவு செய்வது அவரது வழக்கம். எப்போது பேசினாலும், ஏதேனும் ஒரு புதிய படமோ, புத்தகமோ பற்றிச் சொல்லி, நம்மையும் பார்க்கும்படி / படிக்கும்படி தூண்டுவார். சிறுகதைகள், நாவல்கள், உலகப் படங்கள் என்று பல புதிய விஷயங்களைச் சொல்லுவார். பாஃப்டாவின் நூலகத்தில் அவரது பரிந்துரையின் கீழ் பல புத்தகங்களும் படங்களும் வாங்கி வைக்கப்பட்டன.
அவருடன் பேசும்போதெல்லாம், இத்தனை எளிமையாகப் பேசும் இவரா உதிரிப் பூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, மெட்டி, நண்டு, பூட்டாத பூட்டுக்கள் போன்ற படங்களை இயக்கியவர் என்ற சந்தேகம் வராமல் இருக்காது.
படைப்பாளியாகிய விமர்சகர்
மகேந்திரன் அடிப்படையில் ஒரு விமர்சகராகவே தனது வாழ்க்கையைத் துவங்கினார். நாடோடி மன்னன் வெற்றி விழாவில் கலந்துகொள்ள 1958இல் மதுரை வந்த எம்.ஜி.ஆர்., காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் அசோசியேஷனின் திறப்பு விழாவுக்கு வருகிறார். அந்த விழாவில் தமிழ் சினிமா பற்றி மூன்றே நிமிடங்கள் பேசும் வாய்ப்பு மாணவராக இருந்த மகேந்திரனுக்குத் தரப்பட்டது. தனது பேச்சுத் திறமையால் மொத்தம் 45 நிமிடங்கள் பேசி, கரகோஷம் வாங்கி, எம்.ஜி.ஆரிடம் பாராட்டுப் பெறுகிறார்.
அதன் பின் கல்லூரி முடித்து, சென்னையில் சட்டக் கல்லூரியில் சேர்கிறார். அவருக்குப் பணம் அனுப்பிப் படிக்கவைத்த அத்தை திடீரென ஏழே மாதங்களில், பணம் இல்லை என்று சொல்லிவிட, வேறு வழியில்லாமல் ஊருக்கே கிளம்பத் தயாராகிறார் மகேந்திரன்.
சட்டக் கல்லூரியை விட்டு வெளியே வருகையில், காரைக்குடியைச் சேர்ந்த கண்ணப்ப வள்ளியப்பன் என்பவர் எதிரே வந்து, மகேந்திரனிடம் பேசுகிறார். இருவருக்கும் முன்கூட்டியே பழக்கம் உண்டு. மகேந்திரன் அன்று ஊருக்குத் திரும்ப முடிவு செய்திருப்பதை அறிந்து, ‘இன முழக்கம்’ என்ற பெயரில் தான் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கப்போவதாகச் சொல்கிறார். பத்திரிக்கையில் சினிமா விமர்சனம் எழுதச் சொல்லி, உதவி ஆசிரியர் வேலையையும் கொடுக்கிறார். மகேந்திரன் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறார்.
இன முழக்கம் என்பது திமுகவைச் சேர்ந்த பத்திரிக்கை. திமுகவைச் சேர்ந்தவர்கள் வேலை செய்த படங்களையும்கூட மிகக் கடுமையாகவும் கறாராகவும் விமர்சித்தார் மகேந்திரன். இதழ் ஆசிரியர் சி.பி. சிற்றரசுவுக்கு நெருக்கடி வரும் அளவு எழுதினார்.
எம்.ஜி.ஆருடன் மீண்டும் சந்திப்பு
அப்போது ஒரு முறை எம்.ஜி.ஆர். பத்திரிகையாளர்களைச் சந்திக்க விரும்ப, இன முழக்கத்தின் சார்பாக எம்.ஜி.ஆர் வீட்டுக்குச் சென்றார். ஒரு ஓரமாக நிற்கும் மகேந்திரனைக் கச்சிதமாக அடையாளம் கண்டுபிடிக்கிறார் எம்.ஜி.ஆர். கல்லூரியில் அவர் பேசியதை நினைவுகூர்ந்து, மறுநாள் லாயிட்ஸ் ரோடு வீட்டுக்கு வரச்சொல்லி, ஒரு நல்ல வேலை கொடுக்கப்போவதாகச் சொல்கிறார்.
உதவி ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, மறுநாள் காலை எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் செல்கிறார் மகேந்திரன். அங்கே, முதல் மாடியில் ஒரு அறையைக் கொடுத்து, பொன்னியின் செல்வன் புத்தகத்தின் ஐந்து பாகங்களையும் கொடுத்து, அந்த நாவலுக்குத் திரைக்கதை எழுதச் சொல்கிறார் எம்.ஜி.ஆர்.
திரைக்கதை என்றால் என்ன என்றே தெரியாத மகேந்திரன், எழுதும் வேலையை ஆரம்பிக்கிறார். மூன்று மாதங்களில் முடிக்கிறார். எம்.ஜி.ஆரை திருடாதே படத்தின் படப்பிடிப்பில் சந்தித்து, திரைக்கதையைக் கொடுக்கிறார். அப்போதுதான், வீட்டிலிருந்து மகேந்திரனுக்கு எந்தப் பணமும் வரவில்லை; மூன்று மாதங்களாக, தினமும் ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டு, ஒரு நண்பனின் உதவியால் சமாளித்து மகேந்திரன் வாழ்ந்ததை எம்.ஜி.ஆர். அறிகிறார். உடனடியாகக் கண் கலங்கிய அவர், தன்னைத்தானே திட்டிக்கொண்டு, மறுநாள் ஆயிரம் ரூபாயை அளிக்கிறார்.
இதன் பின் எம்.ஜி.ஆருக்கு அனாதைகள் என்று ஒரு நாடகம் எழுதித் தருகிறார் மகேந்திரன். அதைப் படமாக எடுக்க விரும்பி, மூன்று நாள் படப்பிடிப்பும் நடக்கிறது. ஆனால் ஃபைனான்ஸியர் இறந்ததால் நின்றுவிடுகிறது அப்படம் (வாழ்வே வா - இயக்குநர் : டி. யோகானந்த்).
இதன் பின்னர் காஞ்சித் தலைவன் (சிவகாமியின் சபதத்தைத் தழுவிய படம்) படத்தில் உதவி இயக்குநராக மகேந்திரனைச் சேர்த்துவிடுகிறார் எம்.ஜி.ஆர். அப்படம் முடிந்ததும், எம்.ஜி.ஆருடனேயே மகேந்திரன் இருந்ததால் அறிமுகமான கே. பாலன், மகேந்திரனிடம் கதை கேட்க, அவர் சொல்லிய கதை பிடித்துப்போய் ‘நாம் மூவர்’ என்று படம் ஒன்று தயாரிக்கிறார். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் ஆகியவர்கள் நடிக்க, அப்படம் வெற்றிபெறுகிறது. இதுதான் மகேந்திரனின் முதல் படம். கதையாசிரியராக. இதற்குப் பின்னர் வரிசையாகப் பல படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.
ஆனால், அவருக்கு அப்போது இருந்த ஒரே ஆதங்கம் - எதைப் பிடிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுதினாரோ, அதேபோன்ற படங்களையே எழுத வேண்டியிருக்கிறதே என்பதுதான். அந்த ஆதங்கம் சிறுகச் சிறுக வளர்ந்து, ஒரு தருணத்தில் துக்ளக் பத்திரிக்கையில் சோவிடம் வேலை செய்வதில் போய் நிற்கிறது. அதன் பின்னர் வேணு செட்டியார் தேடி வந்து ஒரு படம் இயக்கக் கேட்டுக்கொள்ள, நாவல்களிலிருந்துதான் படம் எடுப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று மகேந்திரன் எடுத்த படம்தான் முள்ளும் மலரும்.
திட்டமிடாத வாழ்க்கை
மகேந்திரனின் வாழ்க்கையே முற்றிலும் தற்செயல்களால் ஆனது. சினிமாவுக்கு வர வேண்டும் என்று நினைத்துக் கூடப் பார்க்காத நபராகவே கல்லூரியில் இருந்தவர், பின் சென்னையில் சட்டம் படிக்க வந்தது, அது பாதியில் நின்று, ஊருக்குக் கிளம்பும் நேரத்தில் இன முழக்கத்தில் விமர்சனங்கள் எழுதும் வேலை கிடைத்தது. பின் எம்.ஜி.ஆர். இவரைத் தற்செயலாகப் பார்க்க, பொன்னியின் செல்வன் எழுதினார். அதன் பின் அதன் மூலமே சினிமாவில் கதை எழுதும் வேலை கிடைத்தது. பின்னர் துக்ளக்கில் வேலை, அதன் பின்னர் அந்த அலுவலகத்தில் பார்த்த ஒரு ஜான் வேய்னின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தங்கப் பதக்கம் உருவானது. அதன் பின் ஒரு வருடம் யாருமே அழைக்காமல், பின்னர் ஒரு படம் கிடைத்தது. அதன் பின்னர் பல படங்களுக்குக் கதை, வசனம் திரைக்கதை எழுதியது. பின்னர் முள்ளும் மலரும் இயக்கியது… என்று பல தற்செயல்கள்.
இறுதிவரை திட்டம் போட்டு வேலை செய்யாமல், வாழ்க்கையின் தற்செயல்களையே எதிர்கொண்டவர் மகேந்திரன். இதனை அவரது புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். அப்படியே, ‘என்னைப்போல் இருக்க வேண்டாம். வாழ்க்கையை ஒழுங்காகத் திட்டமிட்டு வாழுங்கள்’ என்றும் நமக்குச் சொல்லியும் இருக்கிறார்.
(மகேந்திரனின் படங்கள் பற்றிய அலசல் மாலைப் பதிப்பில்…)
(கட்டுரையாளர் கருந்தேள் ராஜேஷ், திரை விமர்சகர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ என்னும் நூலின் ஆசிரியர். திரைக்கதைகளை மேம்படுத்தித்த உதவும் திரைக்கதை ஆலோசகர். திரைப்படக் கல்லூரிகளில் திரைக்கதை பற்றிய வகுப்புகளை எடுத்துவருகிறார். அவரைத் தொடர்புகொள்ள: rajesh.scorpi@gmail.com)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக