சனி, 1 டிசம்பர், 2018

சபரிமலையில் சரிந்த வருமானம்!

விகடன் - சிந்து ஆர் : அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கும் விவகாரத்தை யொட்டி ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து, ஐயப்பன் கோயிலில் கணிசமாக வருமானம் குறைந்துள்ளது.
இது தொடர்பாக, ஆளும் தரப்பினரும் பி.ஜே.பி-யினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள். ஐயப்பன் கோயிலில் வருமானம் குறைந்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு வட்டாரத்தில் பேசினோம்.
 “கேரளத்தில் திருவிதாங்கூர், கொச்சி என இரண்டு தேவசம்போர்டுகள் உள்ளன. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கீழ் 1,249 கோயில்கள் உள்ளன. அவற்றில், சபரிமலை உள்ளிட்ட 61 கோயில்களில் மட்டுமே வருமானம் கிடைக்கிறது. திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு 2017-18 நிதியாண்டில் ரூ.683 கோடி வருவாய் வந்தது.
அதில் அனைத்துக் கோயில்களுக்கான செலவுகள், ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் என ரூ.678 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கையிருப்புத் தொகையை வைத்துக்கொண்டு, இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியும்.

ஓய்வூதியம் உள்ளிட்ட வேறு தேவைகளுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்படும்” என்று கூறினர்.

கடந்த ஆண்டு, மண்டல மகரவிளக்கு சீசனின்போது, 11 நாள்களில் சுமார் ரூ.41 லட்சம் வருவாய் வந்திருக்கிறது. இந்த ஆண்டு இதே காலகட்டத்தில், சுமார் ரூ.16 லட்சம் வருவாய் வந்துள்ளது. இது, தேவசம்போர்டுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. புத்தக விற்பனை மட்டும் கடந்த ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. அப்பம், அரவணை விற்பனை, உண்டியல் வருமானங்கள் என 50 சதவிகிதத்துக்கும் கீழாகக் குறைந்திருக்கிறது.

சன்னிதானத்தில் நாமஜபம் செய்தவர்களைக் கைது செய்ததற்காக மாநில அரசுக்குக் கண்டனம் தெரிவித்த கேரள உயர் நீதிமன்றம், ‘சன்னிதானத்துக்கு எப்போதும் பக்தர்கள் செல்லலாம். அங்கு தங்கலாம், நாமஜபம் செய்யலாம்’ என்றது. இதையடுத்து, ‘இரவு 8 மணிமுதல் அதிகாலை 2 மணிவரை பக்தர்கள் மலை ஏறக்கூடாது’ என்ற விதியை கேரள அரசு தளர்த்தியுள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றும் ரஹானா ஃபாத்திமா, சபரிமலைக்கு சென்றதைத் தொடர்ந்து, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் இரண்டுமுறை இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், ஐயப்பன் பக்தர்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையில் தன் முகநூல் பக்கத்தில் புகைப்படம் பதிவேற்றம் செய்த வழக்கில், கடந்த 27-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் இருந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். ரஹானா கைது செய்யப்பட்டதை, தங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாக பி.ஜே.பி-யினர் கொண்டாடுகிறார்கள். இச்சூழலில், மகரவிளக்கு மண்டலகால சீசனுக்கு சபரிமலை வருவதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த சுமார் 800 இளம் பெண்களில், யாருமே சபரிமலைக்கு வரவில்லை.

சபரிமலை போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பி.ஜே.பி மாநில பொதுச்செயலாளர் சுரேந்திரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை, “பி.ஜே.பி நிர்வாகிகளுக்கு எதிராகவும், பக்தர்களுக்கு எதிராகவும் செயல்படும் கேரள அரசுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவிருக்கிறோம்” என்றார்.
சபரிமலையில் வருவாய் குறைந்ததற்கு காவல்துறைதான் காரணம் என்று குற்றம்சாட்டிய திருவிதாங்கூர் தேவசம்போர்டு கமிஷனர் என்.வாசு, ‘‘மகா காணிக்கை உண்டியலுக்கு முன்பு போலீஸ் தடுப்புகள் வைக்கப் பட்டிருப்பதால் பக்தர்கள் காணிக்கைச் செலுத்தத் தயங்குகின்றனர். சபரிமலையில் வருவாய் குறைந்ததால் அரசுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஆனாலும், தேவசம் போர்டு ஊழியர்களுக்கான ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவை இதனால் பாதிக்கப்படும்” என்றார்.

அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், “சபரிமலை வருவாயைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகள் செயல்படுகின்றன. கடந்த ஆண்டும் இதை சங் பரிவார் செய்தது. அரசு தலையிடுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டால், பிறகு அதுபற்றி பார்க்கலாம்” என்றார்.

- ஆர்.சிந்து

கருத்துகள் இல்லை: