அஜ்மீர் நகருக்கு ரயிலில் வந்து சேர்கிறான் குர்மித். அவனை வரவேற்று வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான் ரசாக். வீட்டிலிருந்து மொய்னுதீன் சிஸ்தி பள்ளிவாசலுக்குக் கூட்டிப்போய் சுற்றிக்காட்டுகிறான். ஆண்டுதோறும் அந்தப் பள்ளிவாசல் சார்பாக நடைபெறும் உர்ஸ் (நாகூரின் சந்தனக்கூடு போல) திருவிழா பற்றியும் அதில் எல்லோரும் கலந்துகொள்வது பற்றியும் சொல்கிறான். அங்கேயிருந்து அதாய் தின் கா ஜோப்டா என்ற நினைவுச் சின்னத்திற்குப் போகிறார்கள். அதாய் தின் என்றால் இரண்டரை நாள் என்ற அர்த்தமும் உண்டு. “இரண்டரை நாளில் இந்தக் கட்டடத்தைக் கட்டியிருக்க முடியுமா?” என்று கேட்கிறான் குர்மித். அவனை, ராஜ்புத் மன்னன் பிருத்விராஜ் சௌஹான் நினைவிடம் இருக்கிற தாரா கோட்டைக்குக் கூட்டிப்போகிறான் ரசாக். அப்புறம் அனா சாகர் அணையைப் போய்ப் பார்க்கிறார்கள். அதன் பின் வேறு எங்கும் போக முடியாத அளவுக்குச் சோர்ந்துபோய் வீடு திரும்புகிறார்கள்.
இது, ராஜஸ்தான் மாநிலப் பள்ளிகளில் 3ஆம் வகுப்பு இந்திப் பாடப்புத்தகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த கதை. 2016 ஜூலையில் மாநில அரசு புதிய பாடநூல்களைக் கொண்டுவருகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் பாடநூல்கள் மாற்றப்படுவது புதிதல்ல. 3ஆம் வகுப்புக்கான புதிய புத்தகத்திலும் இந்தக் கதை வருகிறது. ‘அஜ்மீர் கி சைர்’ (அஜ்மீர் சுற்றுலா) என்ற தலைப்பு ‘அஜ்மீர் கி யாத்ரா’ (அஜ்மீர் யாத்திரை) என்று மாற்றப்பட்டிருக்கிறது. தலைப்பின் சொல்லாடலில் தொடங்கும் மதம் சார்ந்த மாற்றம் உள்ளேயும் தொடர்கிறது. புதிய கதையிலும் அஜ்மீருக்கு வருகிறான் குர்மித். அவனை ரசாக் அழைத்துச் செல்கிறான். ஊரைச் சுற்றிக்காட்டுகிறான். ஆனால் உர்ஸ் விழா பற்றி விரிவாகச் சொல்லவில்லை. பேரரசர் பிருத்விராஜ் அன்று பாரதத்தை ஊருருவிய முகமது கோரியைப் பலமுறை தோற்கடித்தார் என்று விளக்கப்படுகிறது. இந்து மக்களின் புனிதத் தலமாகிய புஷ்கார் நகருக்கு நண்பனை அழைத்துச் செல்லும் ரசாக், அங்குள்ள பிரம்மன் கோவில், மகாபாரத நாயகர்களான பாண்டவர்கள் கட்டியதாகக் கூறப்படும் ஐந்து அணைகள் ஆகியவற்றைக் காட்டுகிறான்.
“அந்தப் பாடப் புத்தகத்தில் முஸ்லிம்களை ஆக்கப்பூர்வமாகச் சித்தரித்த ஒரே பாடமும் இப்படிக் குதறப்பட்டுவிட்டது,” என்கிறார் ஜெய்ப்பூர்வாசியான கல்வியாளர் தேவயானி பரத்வாஜ். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பல கல்வியாளர்களும், குழந்தைகள் மனதில் இந்து மதக் கண்ணோட்டம் பதிக்கப்படுவதும்சிறுபான்மையினர் அடையாளங்கள் அழிக்கப்படுவதும் ஆபத்தானது என்று கவலை தெரிவிக்கிறார்கள்.
பாடத் திட்டத்தில் மாற்றம்
3 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான கணிதப் புத்தகங்களில் வேதக் கணிதம் என்ற பாடம் சேர்க்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்டிருக்கிற, கணவன் சிதையோடு மனைவியை எரிக்கிற ‘ஸதி’ போற்றுதலுக்குரியதாகச் சித்தரிக்கப்படுகிறது. பாஜக அரசின் திட்டங்களைப் பாராட்டுகிற,தேசியவாத உணர்வையும், விமர்சனமே இல்லாமல் ராணுவப் படைகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தையும் ஊன்றுகிற பாடங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
வரும் டிசம்பர் 7 அன்று ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பாடப் புத்தக மாற்றம் தேர்தல் வாக்குறுதியல்ல என்றாலும், அது எதிர்காலத் தலைமுறையினரிடையே ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மாநிலத்தில் பெரும்பாலானவை அரசுப் பள்ளிகள்தான். செய்திப் பத்திரிகைகள்கூடப் போய்ச்சேர்ந்திராத குடும்பங்களில் குழந்தைகள் எதையாவது படிக்க விரும்பினால் இந்தப் பாடநூல்கள்தான் ஒரே வழி என்கிறார் ஓய்வுபெற்ற சமூகவியல் பேராசிரியர் ராஜிவ் குப்தா.
2005இல் மத்தியக் கல்வி ஆலோசனை வாரியம் தேசியப் பாடத் திட்ட வரைவுகளை வெளியிட்டது. அதன் அடிப்படையில் ராஜஸ்தான் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடநூல்கள் மறுஆய்வுப் பணியைத் தொடங்கியது. ஐசிஐசிஐ வங்கியின் அறக்கட்டளை உதவியுடன் கல்வியாளர்கள் விவாதித்ததன் அடிப்படையில் வழிகாட்டல் குழு கூடி அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் 2013இல்தான் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் புத்தகங்கள் புதுப்பிக்கப்பட்டன. ஆகவே மூன்றே ஆண்டுகளில் மறுபடியும் புத்தகங்கள் மாற்றப்படுவது யாரும் எதிர்பாராதது, அதே 2013இல்தான், அந்த மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் அரசு தோற்கடிக்கப்பட்டு, வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதைத் தவிர, புத்தகங்களை மாற்ற வேறு காரணம் எதுவும் இல்லை.
பாஜக ஆட்சிக்கு வந்ததுமே பாடநூல் வழிகாட்டல் குழு கலைக்கப்பட்டு, புதிய குழு அமைக்கப்பட்டது. முந்தைய குழுவில் பல்வேறு தரப்பினரோடு ஆர்எஸ்எஸ் ஆட்களும் உறுப்பினர்களாக இருந்தார்கள். புதிய குழுவில் முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் ஆட்கள்தான் நியமிக்கப்பட்டார்கள்.
பரத்வாஜ், குப்தா, கல்வியாளர் அம்பிகா நாக், நிவேதிதா விஜய் பெதாதூர், கோமல் ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்டோர் கொண்ட ஒரு குழு புதிய பாடநூல்களின் தரம், குழந்தைகளைக் கற்றல் நோக்கி அந்த நூல்கள் எந்த அளவுக்குத் தூண்டுகின்றன, கேள்வியார்வத்தின் அடிப்படையில் அறிவை வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்கின்றனவா அல்லது சும்மா மனப்பாடம் செய்தால் போதுமென்று ஒப்பிக்க வைக்கின்றனவா, பாடங்களின் அணுகுமுறைகள் அறிவியல்பூர்வமாக இருக்கின்றனவா, பாலின சமத்துவம், பன்முகப் பண்பாடுகள் மீதான மதிப்பு, ஒதுக்கப்படும் மக்கள் பற்றிய அக்கறை ஆகிய உணர்வுகளை விதைக்கக்கூடியவையாக இருக்கின்றனவா என்ற கோணங்களில் ஆராய்ந்தது. 2016 ஆகஸ்ட்டில் அக்குழுவினர் வெளியிட்ட அறிக்கை, இந்தச் சோதனைகளில் புதிய புத்தகங்கள் வெற்றிபெறவில்லை என்று தெரிவித்தது.
ஸதி பலிக்குத் துதி
6ஆம் வகுப்பு இந்திப் பாடப்புத்தகத்தில் ‘முண்ட்மால்’ என்ற தலைப்பில் இப்படியொரு கதை இடம்பெற்றிருக்கிறது: சுராவத் என்ற ஒரு சிற்றரசன், தில்லி பாதுஷா படையெடுப்பைத் தடுத்து நிறுத்தக் கிளம்புகிறான். அவனுடைய மனைவி “ஒரு குழந்தையால் வானத்தைத் தொட முடியலாம். ஒரு நெருப்புக் கோழி சமுத்திரத்தையே விழுங்கலாம். இமய மலையே குலுங்கலாம். ஆனால் பாரதத்தின் ஸதி தேவி தன் உறுதியிலிருந்து விலக மாட்டாள்,” என்று கூறி வழியனுப்புகிறாள். போர்க்களத்திலிருந்து அரசிக்கு அவன் ஒரு தகவல் அனுப்புகிறான். தொடர்ந்து துணிவோடு போரிடுவதற்குத் தூண்டக்கூடிய ஏதாவதொரு பொருளைக் கொடுத்தனுப்புமாறு அதில் கேட்டுக்கொள்கிறான். உடனே அரசி ஸதி தேவி ஆலயத்தின் முன்பாகத் தன் தலையை வெட்டிக்கொள்கிறாள். ஆலயத்தின் பளிங்குத் தரை ஸதியின் குருதியால் புனிதமடைகிறது. அரசன் தனது அரசியின் நீண்ட கூந்தலைக் கழுத்தில் கட்டிக்கொண்டு வீரத்துடன் சண்டையிடுகிறான். அந்தத் தலை ஒரு மண்டையோட்டுப் பதக்கச் சங்கிலி போல – அதுதான் முண்ட்மால் – அவன் மார்பில் ஆடுகிறது.
3, 4அம் வகுப்புகளுக்கான சுற்றுச்சூழல் அறிவியல் புத்தகங்களில், விளையாட்டுகள் போட்டிகள் தொடர்பான பாடங்களுக்கான சித்திரங்களில் பெண் குழந்தைகள் மிக அரிதாகவே காணப்படுகிறார்கள். ஆனால் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, சமையல் செய்வது தொடர்பான பாடங்களின் படங்களில் பெண் குழந்தைகள்தான் அந்த வேலைகளைச் செய்கிறார்கள்.
மதம் பிடித்த புத்தகங்கள்
பாடங்களில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் போன்ற சிறுபான்மை மதத்தினரைக் குறிக்கும் பகுதிகள் மிகக் குறைவாக இருக்கின்றன. ஆனால் இந்து மத அடையாளங்கள் எங்கும் பதிக்கப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, ஒன்றாம் வகுப்புக்கான புத்தகத்தில், எண்ணிக்கைகளைக் கற்றுத்தரும் பாடத்திற்கு ரிஷி, ரதம், யாகம், திரிசூலம், ஞானி போன்ற உருவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
5ஆம் வகுப்பு இந்திப் புத்தகத்தில் ஒரு பசுவின் கடிதம் என்ற பாடம் வெளியிடப்பட்டுள்ளது. “வலிமை, ஆயுள், ஞானம், சந்தோஷம், செல்வம், புகழ்” ஆகியவற்றை வழங்குகிற சக்தியாகத் தன்னைத் தானே அந்தப் பசு சொல்லிக்கொள்கிறது. “என்னைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் குழந்தைகளாகிய உங்களின் கடமை,” என்று கூறுகிற பசு கடைசியில், “உங்கள் அன்புக்குரிய காமதேனு கோமாதா,” என்று கையெழுத்திட்டிருப்பதாக அந்தப் பாடம் முடிகிறது.
8ஆம் வகுப்பு இந்திப்பாடத்தில், “பசு பாதுகாப்பும் கிராம வளர்ச்சியும்” என்ற பாடம் இருக்கிறது. சோமநாதர் ஆலயத்தை மறுபடியும் கட்டியது சுதந்திரப் போராட்ட வீரரும் முதல் துணைப்பிரதமருமான வல்லபாய் பட்டேலின் முக்கியப் பங்க்ளிப்பாகும் என்கிறது இன்னொரு பாடம். “நமது பெருமைக்குரியவர்கள்” என்ற சுற்றுச் சூழல் அறிவியல் பாடத்தில், 15 தலைவர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவர்களில் ஒரு முஸ்லிம், ஒரு கிறிஸ்துவத் தலைவர் பற்றிய குறிப்பும் இல்லை.
தலித்துகளும் ஆதிவாசிகளும்
டாக்டர் அம்பேத்கர், பிர்சா முண்டா ஆகியோர் முக்கிய இந்தியப் பிரமுகர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால் தலித், பழங்குடி மக்கள் மற்றவர்களுக்காகப் பாடுபடுவதும், தியாகம் செய்வதுமே அவர்களுக்குப் பெருமை என்று போதிக்கப்படுகிறது. 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் சாதிப் பாகுபாட்டிற்கு வெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. சாதிப் பிரிவினைகள் தொடக்கத்தில் வேலைகளின் அடிப்படையில்தான் ஏற்பட்டன, பிறப்பின் அடிப்படையில் அல்ல என்றும், தீண்டாமை இருந்ததில்லை என்றும் அந்தப் பாடம் சொல்கிறது.
8ஆம் வகுப்புப் புத்தகத்தில் ‘ஆதிவாசி ஜாதி’ என்று குறிப்பிட்டு, அவர்களையும் சாதி அமைப்புக்குள் அடையாளப்படுத்துகிற வேலை நடந்திருக்கிறது.
திணிக்கப்படும் தேசியவாதம்
நாட்டுப் பற்றின் பெயரால் தேசியவாதத்தைக் கட்டமைக்கிற வேலையை 3 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான எல்லா இந்திப் புத்தகங்களும் செய்கின்றன. ஒவ்வொரு புத்தகமும் ‘தேஷ் பக்தி’ பற்றிய பாடம் அல்லது பாடலோடுதான் தொடங்குகிறது. இந்திய நாடு ‘பாரத மாதா’ என்று, இந்துக் கடவுள் உருவத்தில் சித்தரிக்கப்படுகிறது.
ராணுவத்தைப் போற்றுகிற பாடங்கள், தேசத்துக்காகப் போர்க்களத்தில் உயிர் நீப்பது வணங்கத்தக்கது என்கின்றன. 18ஆம் நூற்றாண்டில் மராத்தா அரண்மனையில் ஒரு அமைச்சராக இருந்தவர் நானா பட்னாவிஸ். கிழக்கிந்திய கம்பெனி முன்னேறி வந்ததை எதிர்த்தவர். ஆனால் 3ம் வகுப்பு இந்திப் பாடத்தில், மைனா என்ற 7 வயதுச் சிறுமி, பட்னாவிஸ் மகளாகச் சொல்லப்படுகிறாள். நாட்டின் சுதந்திரத்தை அவள் வலியுறுத்தியதற்காக பிரிட்டிஷ் படையினரால் உயிரோடு எரிக்கப்பட்டதாகவும், அவர் சிரித்துக்கொண்டே மோட்சத்திற்குப் போனதாகவும் அந்தப் பாடம் சொல்கிறது. வரலாற்றுச் சித்தரிப்போ வரட்சியாக இருக்கிறது.
அரசாங்க வணக்கம்
3ஆம் வகுப்புப் பாடத்தில், சதித்திட்டம் என்பதற்கு அரசாங்கம் அல்லது ஆட்சியாளர்களுக்கு எதிரான செயல் என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது. அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி எதுவும் இல்லை. ஆனால் அரசுத் திட்டங்கள் புகழப்படுகின்றன.
7ஆம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் தகவல் தொடர்பில் நவீன தொழில்நுட்பம் பற்றிய பாடம் வருகிறது. அதில் நைசாக, பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி செருகப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் திட்டத்தால் விரைவில் கங்கை நதி தூய்மையாகிவிடும் என்கிறது இன்னொரு பாடம்.
1ஆம் வகுப்புப் புத்தகத்தில் நகரத் தூய்மையை விளக்கும் படங்கள் உள்ளன. அந்தப் படங்கள் ‘ஸ்வச் பாரத்’ நடவடிக்கைகளைக் காட்டுகின்றன.
உண்மையும் புனைவும்
சமூக அறிவியல் பாடங்கள் மட்டுமின்றி அறிவியல் பாடங்களில்கூட உண்மையும், புனைவும், வரலாறுகளும், புராணக் கற்பனைகளும் கலந்து தரப்பட்டுள்ளன. 3ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், கொடாலியா லோஹர் என்ற நாடோடி சமூகத்தினர் பற்றிய பாடக்குறிப்பு உள்ளது. இரும்புக் கொல்லர்களான அவர்கள் பெரும்பாலும் பயண வண்டிகளிலேயே வாழ்கிறவர்கள். ஆனால், இந்தப் பாடத்தில் அவர்களது முன்னோர்கள் மேவார் பகுதியின் சித்தூர் நகரை முகலாயப் படைகள் தாக்கியபோது ஆட்சியின்போது “மேவார் சுதந்திரமடைகிறவரையில் ஊர் திரும்ப மாட்டோம்” என்று சூளுரைத்து ஊரைவிட்டு வெளியேறினார்கள் என்று சொல்லப்படுகிறது. முகலாயர் ஆட்சியில் எந்தச் சமூகமும் ஊர்களை விட்டு வெளியேற்றப்பட்டதில்லை என்ற உண்மை மறைக்கப்படுகிறது.
6ஆம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில், ராஜஸ்தான் – ஹரியானா மாநிலங்களுககு நடுவே ஓடிய சரஸ்வதி நதிக்கரையில்தான் வேதங்கள் எழுதப்பட்டன என்று சொல்லப்படுகிறது. மகாபாரதமும் ராமாயணமும் உண்மையில் நடந்த வரலாற்று நிகழ்வுகள் என்று சித்தரிக்கப்படுகின்றன. 7ஆம் வகுப்பு வரலாற்றில், முகலாயப் பேரரசர் அக்பர் மேவார் மன்னர் ராணா பிரதாப்பை வீழ்த்தினார் என்று உண்மையான பதிவுகளுக்கு நேர்மாறான தகவல் சொல்லப்படுகிறது.
அறிவியல் பாடங்கள் குழப்புவதாகவும் மத அடையாளத்தோடும் சேர்க்கப்பட்டுள்ளன. தாமரைப் பூ படம், சரஸ்வதி தேவி அமர்ந்துள்ளது போல் வரையப்பட்டிருக்கிறது. 6ம் வகுப்பு புவியியல் பாடத்தில் அண்டவெளி பற்றிய பாடம் வருகிறது – அதில், துருவ நட்சத்திரம் பற்றிய இந்துப் புராணக் கதை சேர்க்கப்பட்டிருக்கிறது.கணிதப் புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ள வேதக் கணிதங்கள் குழந்தைகளைக் குழப்புகிற வகையில் இருக்கின்றன.
ஆவி பற்றிய அச்சம் உள்ளிட்ட மூட நம்பிக்கைகள் பரவியுள்ள சமூகத்தில், குழந்தைகளைக் கேள்வி கேட்கத் தூண்டுவதாகப் பாடங்கள் அமைய வேண்டும். இந்தப் பாடங்கள் அதற்கு உதவிகரமாக இல்லை என்கிறார்கள் கல்வியாளர்கள்.
பாடங்களின் இறுதியில் உள்ள வினாக்கள், பயிற்சிகள் பகுதியில், “மைனாவின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்,” என்பது போன்ற கேள்விகள் உள்ளன.
ஆட்சியாளர் கட்டளை
2015 ஜூலை 20 அன்று கல்வியதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டினார் மாநிலக் கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி. அந்தக் கூட்டத்தில், பாடப் புத்தகங்களில் ‘கலாச்சாரம்’ என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும், அதற்கேற்ப பாடங்களில் அடிப்படையாக எப்படிப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட வேண்டும், வேதக் கணிதம் எவ்வாறு சேர்க்கப்பட வேண்டும் என்றெல்லாம் அரசு எதிர்பார்ப்பது பற்றிக் கறராகச் சொல்லப்பட்டது. மூன்றே மாதங்களில் இந்த மாற்றங்கள் நடந்தாக வேண்டும் என்று ஆணையிட்ட அமைச்சர், இதில் ஈடுபடுத்தக்கூடிய வல்லுநர்களின் பெயர்ப் பட்டியலையும் கோரினார்.
மூன்று மாதத்தில் முடிக்க முடியவில்லை என்பதைத் தவிர, அமைச்சரின் அனைத்து ஆணைகளும் புதிய பாடநூல் தயாரிப்பில் நிறைவேற்றப்பட்டன.
அறிவியலோடு புராணத்தைக் கலப்பது குழந்தைகளிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க உதவாது என்று கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
பாடங்கள் இந்து மதம் சார்ந்த அடையாளங்களோடு இருப்பது தற்செயலானதல்ல. அமைச்சர் கூட்டிய அந்தக் கூட்டத்தில், புதிய புத்தகங்களைத் தயார்ப்பதற்கான முன்மாதிரியாக ‘வித்ய பாரதி’ புத்தகங்களைப் பயன்படுத்தப் பணிக்கப்பட்டது. ‘வித்ய பாரதி அகில் பாரதிய ஷிக்ஸா சன்ஸ்தான்’ என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்விப் பிரிவு.
பாடப் புத்தக வழிகாட்டல் குழுவின் 165 உறுப்பினர்களில் ஆகப் பெரும்பாலோர் ஆர்எஸ்எஸ் ஆட்கள்தான் அல்லது ஆதரவாளர்கள்தான் என்று குழுவில் இருந்த ஆர்எஸ்எஸ்காரர் ஒருவரே தெரிவிக்கிறார்.
எதிர்கால எச்சரிக்கை
மத்தியிலும் 14 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருக்கிற நிலையில், ராஜஸ்தானின் பாடப் புத்தகச் சீர்குலைவுகள் நாடு முழுவதுமான பாடத்திட்டத் திரிப்புகளுக்கு ஒரு முன்னோட்டமாக அமையக்கூடும் என்றும் கல்வியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டல் குழுவின் தலைவராகச் செயல்பட்டவர், கேரள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முன்னாள் இயக்குநரும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முன்னாள் ஆலோசகருமான எம்.ஏ. காதர். அந்தக் குழு, பாடங்களை மனப்பாடம் செய்யவைப்பதற்கு மாறாகக் குழந்தைகளை யோசிக்க வைக்கும் வகையிலான பாடங்களைப் பரிந்துரைத்து, அப்படிப்பட்ட பாடங்களுடன் புதிய புத்தகங்கள் தயாரித்து வழங்கப்பட்டிருந்தன. 2013இல் ராஜஸ்தான் ஆட்சிக்கு வந்த பாஜக அதற்கடுத்த ஆண்டில் செய்தது என்னவென்றால், எம்.ஏ. காதர் தலைமையிலான வழிகாட்டல் குழுவை எவ்வித முன்னறிவுப்பும் இல்லாமல் கலைத்ததுதான்.
அதன் பின் கல்வித் துறை அதிகாரிகளையும் சில ஆசிரியர்களையும் சில வெளி அமைப்புகளைச் சேர்ந்தோரையும் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை பாஜக அரசு அமைத்தது. அந்தக் குழு 2015இல் இரண்டு முறை கூடியது. அதன் முதல் கூட்டத்தில் ஒருவர் ஒவ்வொரு சமஸ்கிருதப் புத்தகத்தின் தொடக்கத்திலும் ‘மங்கள சரண மந்திரம்’ இருக்க வேண்டும்என்ற ஆலோசனையைக் கூறினாராம். அது நல்லதல்ல என்று அந்தக் கூட்டத்திலேயே கூறினார் ஒரு பெண். அவரை “நீ ஒரு இடதுசாரி” என்று சொல்லித் திட்டினார்களாம்!
ஆலோசனைக் குழு கூட்ட விவரங்கள் பற்றித் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது அரசு அந்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டது. பின்னர் வேறு வழிகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அந்த விவரங்களில் ஒன்று என்னவெனில், அரசு நியமித்த 165 பேரில் பெண்களின் எண்ணிக்கை 30க்கும் குறைவு என்பதே.
இரண்டு குழுக்களிலுமே இடம்பெற்றவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள், “மூன்றே மாதத்தில் புதிய புத்தகங்களை எழுதிவிடலாம் என்று அரசுக்கு உறுதியளித்தவர்கள் ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு நூல் எழுதியவர்கள். ஆனால் ஒருவர்கூடக் குழந்தைகளுக்குப் புத்தகங்கள் எழுதிய அனுபவம் உள்ளவர் அல்ல” என்று தெரிவிக்கிறார்கள்.
ஜனநாயக மறுப்பு
முந்தைய குழு இரண்டு ஆண்டுகளில் பல முறை கூடி விவாதித்தது. விமர்சனங்கள் வரவேற்கப்பட்டன. புதிய ஆலோசனைகள் ஏற்கப்பட்டன. ஆனால், இரண்டாவது குழு மூன்றே மாதங்களில் இரண்டு கூட்டங்களை மட்டும் நடத்தியது. விவாதங்களுக்கோ விமர்சனங்களுக்கோ இடமளிக்கப்படவில்லை.
வல்லுநர்கள் யாரும் பங்கேற்காமல், முறைப்படி சில பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து களச் சோதனைகள் எதுவும் நடத்தப்படாமல், பன்முக மறு ஆய்வு நடைமுறைகள் இல்லாமல் புதிய பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்குத் தரப்பட்டுவிட்டன என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரி ஒருவரே சொல்கிறார். அமைச்சர் தேவ்னானி குறைந்தது 50 முறையாவது புத்தகங்களில் மேலும் மாற்றங்கள் வேண்டும் என்று வற்புறுத்தினார்.
புதிய குழுவின் கூட்டங்கள் நடந்தபோதுதான் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மதவெறி அரசியலை விமர்சித்துப் பேசிய மாணவர் தலைவர் கன்னய்யா குமார் கைது செய்யப்பட்டு, தேசத்துரோக வழக்கு போடப்பட்ட விவகாரம் நடந்துகொண்டிருந்தது. குழுவினர் அது பற்றியும் பேசினார்கள். அது அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுபோகப்பட்டது. 2016 மார்ச் மாதம் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி, “இன்னொரு கன்னய்யா குமார் பிறக்காமல் இருக்கத்தான் பாடப் புத்தக மாற்றங்கள்,” என்று கூறினார்!
இந்திப் பாடப் புத்தகக் குழுவிலிருந்து விலகிய ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்: “கூட்டங்கள் ஜனநாயகமின்றி நடத்தப்பட்டன. குழந்தைகளுக்கு பாஜக சித்தாந்தத்தைப் போதிக்க வேண்டும் என்கிறார் அமைச்சர். ஆனால், ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்குச் சித்தாந்தமெல்லாம் புரியாது. எப்படிக் கற்க வேண்டும் என்பதை அவர்கள் கற்றால் போதும்,” என்று கூறினார். அவர் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஒவ்வொரு புத்தகமும் தேசபக்திப் பாடலோடு தொடங்க வேண்டும் என்றார்கள். அதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்தேன். ஒரு பாட்டால் குழந்தைகள் தேசபக்தர்களாகிவிடுவார்களா? முதலாவது பாடத்திற்குப் பதிலாக ஆறாவது பாடத்தில் தேசபக்திப் பாடலை வைத்தால் குழந்தைகளுக்குத் தேசபக்தி ஏற்படாதா என்று கேட்டேன்,” என்றும் அவர் கூறினார். “நீ ஆர்எஸ்எஸ் அல்ல, கம்யூனிஸ்ட்” என்று அவருக்கு வசைமாலை சூட்டினார்களாம்!
புதிய புத்தகங்களில் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் கல்வி அவசர நிதி (யுனிசெப்) அமைப்பின் நிதியுதவியோடு தயாரிக்கப்பட்டது என்ற குறிப்பு இருக்கிறது. பாடப் புத்தகங்களில் எப்படிப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அமைப்புக்குத் தெரியுமா என்று கேட்டு, அதன் ராஜஸ்தான் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு மறுமொழி வரவே இல்லை.
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் தினேஷ் கோத்தாரி, துணை இயக்குநர் சுபாஷ் சர்மா ஆகியோரிடம் தொடர்புகொண்டபோது, புத்தகங்களில் ஏற்கெனவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்ட பின்புதான் தாங்கள் பொறுப்புக்கு வந்ததாகக் கூறிவிட்டனர்.
ஆசிரியர்களின் முயற்சி தோல்வி
கல்வியாளர்களின் கடும் விமர்சனத்தை பாஜக அரசு பொருட்படுத்தவில்லை. அக்கறையுள்ள ஆசிரியர்கள் சிலர், இதைத் தடுக்க முடியாது என்ற நிலையில், சில மாற்று முயற்சிகளை மேற்கொண்டனர். எடுத்துக்காட்டாக, கலியாண் நகரில் உள்ள அரசுப்பள்ளி தலைமையாசிரியர் வக்கீல் சிங், பள்ளியின் நூலகத்தில் தொடக்க வகுப்புக் குழந்தைகளுக்காக வேறு புத்தகங்களை வாங்கிவைத்தார். வாரந்தோறும் குழந்தைகள் கண்டிப்பாக நூலகத்திற்கு வர வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தினார்.
பிகானிர் நகரப் பள்ளியின் மூத்த ஆசிரியர் சஞ்சய் யாதவ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தினமும் காலை வாழ்த்துக் கூட்டத்தில், சரஸ்வதி துதிப் பாடல் முடிந்ததும் பல்வேறு பத்திரிகைச் செய்திகளை வாசிக்கச் செய்தார். புதிய விசயங்களைப் பேச வைத்தார்.
ஸ்ரீகங்கா நகரில் உள்ள ஆதர்ஷ் பள்ளியின் ஆசிரியர் வினய் கொடாரா, குழந்தைகள் கேள்வி கேட்பதற்கு ஊக்கப்படுத்தினார். பாடப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள் பற்றியே கூட கேள்வி கேட்கலாம் என்றார். பசு மட்டுமல்ல, எல்லா விலங்குகளும் நேசிக்கப்பட வேண்டியவையே, எந்த மதமும் இன்னொரு மதத்தைவிட உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல என்று குழந்தைகளுக்குச் சொல்லத் தொடங்கினார்.
“பெரும்பான்மை” ஆசிரியர்கள்
ஆனால் இப்படிப்பட்ட மாற்று முயற்சிகளில் ஈடுபட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். குறிப்பாக பாஜக ஆட்சி வந்தபிறகு, பெரும்பாலான ஆசிரியர்கள் மதவாதக் கண்ணோட்டத்துடன் பாடங்கள் கொண்டுவரப்பட்டதை வரவேற்கிறவர்களாகவே இருக்கிறார்கள் என்று கல்விக் களச் செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
குழந்தைகள் மனதில் இப்படிப்பட்ட சிந்தனைகளைப் புகுத்தலாமா என்று ஆசிரியர்கள் கூட்டத்தில் கேட்டார் சிகார் நகரப் பள்ளியின் ஆசிரியர் உபேந்திரா சர்மா. உடனே மற்றவர்கள் எழுந்து, அவர் அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டினார்கள். அவர் மீது நிர்வாகத்தில் புகாரும் கொடுத்தார்கள். “நானாவது இப்படிப் பேச முடிகிறது. முஸ்லிம் ஆசிரியர்கள் பேசக்கூட பயப்படுகிற நிலைமைதான் இருக்கிறது,” என்கிறார் அவர்.
முஸ்லிம் ஆசிரியர்கள் பலரும் அவர் சொல்வது உண்மைதான் என்று சங்கடத்தோடு ஒப்புக்கொள்கிறார்கள். தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும், “வந்தே மாதரம் பாட வேண்டும் என்ற ஆணைகளை நாங்கள் பின்பற்றத்தான் வேண்டியிருக்கிறது. பாடத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நாங்கள் சொல்லித்தர வேண்டியிருக்கிறது,” என்று அவர்கள் சொல்கிறார்கள். ஸதி தவறானது, நாட்டின் சட்டத்துக்கு எதிரானது என்று மாணவர்களிடம் சொன்னால், அதெல்லாம் ஒரு சமூகத்தின் உள்விவகாரம், அதை விமர்சிக்கக் கூடாது என்று சிலர் எதிர்க்கிறார்கள். அது மத விவகாரமாக்கப்பட்டுவிடும் என்ற அச்சமும் இவர்களுக்கு இருக்கிறது.
அரசு கொடுத்திருக்கிற பாடப்புத்தகங்களைத் தாண்டி வேறு புத்தகங்களை வாங்குவதற்குப் போதுமான நிதி வசதி கிடையாது. பெரும்பாலான பள்ளிகளில் நூலகம் என்பது பெயருக்குத்தான் இருக்க்கிறது. சில பள்ளிகளில் இருக்கிற நூலகங்களில் தொடக்க வகுப்புக் குழந்தைகளுக்கான புத்தகங்கள் வைக்கப்படவில்லை என்று சஞ்சய் யாதவ் கூறுகிறார்.
பல ஆசிரியர்கள் குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருப்பது, பள்ளிகளில் போதுமான நவீன வசதிகள் இல்லாதிருப்பது, போதுமான ஆசிரியர்களே இல்லாதிருப்பது, பள்ளியிறுதித் தேர்வுக்குக் குழந்தைகளைத் தயார்ப்படுத்தினால் போதும் என்று கட்டாயப்படுத்தப்படுவது போன்ற பிரச்சினைகளும் இத்துடன் சேர்கின்றன. ஆசிரியர்களிடையே மதவாதக் கண்ணோட்டம் உள்ளவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள், அவர்கள் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த ஆசிரியர்களைச் சாடுவதற்கான வாய்ப்புகளைத் தேடுகிறார்கள்,
மாணவர்களிடையேகூட, முஸ்லிம் குடும்பத்துக் குழந்தைகளை ஏதோ பாகிஸ்தானியர்கள் என்பது போல் பார்க்கிற மனப்போக்கு வளர்க்கப்படுகிறது.
இது பற்றிய கவலையைப் பகிர்ந்துகொள்ளும் முஸ்லிம் தலைவர்கள், “பல தனியார் பள்ளி நிர்வாகங்களும் இந்து மதச் சடங்குகளைச் செயல்படுத்துவதிலும், எல்லாக் குழந்தைகளும் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதிலும் கண்டிப்பாக இருக்கின்றன. ஆகவே, எங்கள் சமூகக் குழந்தைகளுக்காக என எங்களுடைய சொந்தப் பள்ளிகளைத் தொடங்கலாமா என ஆலோசித்து வருகிறோம்,” என்று கூறுகிறார்கள்.
ஷ்ரேயா ராய் சௌதுரி
நன்றி: தி ஸ்க்ரால் (ஸ்க்ரால் இதழில் மூன்று பகுதிகளாக வெளிவந்த கட்டுரையின் சுருக்கமான வடிவம்)
https://scroll.in/article/901002/rajasthan-teachers-tried-and-failed-to-counter-textbooks-rewritten-to-serve-hindutva-propaganda
https://scroll.in/article/901001/bjps-major-achievement-in-rajasthan-rewriting-schools-textbooks-in-the-rss-worldview
https://scroll.in/article/901314/inspired-by-the-rss-dictated-by-bjp-minister-the-inside-story-of-rajasthans-textbook-revisions
தமிழில்: அ. குமரேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக