செவ்வாய், 27 நவம்பர், 2018

ஸ்டாலின் திருமாவளவன் சந்திப்பு .. திமுகவுடன் விசிக கூட்டணி வலிமையாக உள்ளது .. திருமாவளவன்

ஸ்டாலினுடன் சந்திப்பு ஏன்? - திருமாவளவன்மின்னம்பலம் : திமுக விசிக கூட்டணி குறித்த சர்ச்சையை அடுத்து, இன்று (நவம்பர் 27) திருமாவளவன், திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்த திருமாவளவன் இன்று சென்னை வந்து திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். திமுக விசிக கூட்டணி குறித்த திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்தால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இருவரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இச்சந்திப்பைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “டிசம்பர் 10ஆம் தேதி விசிக சார்பில் நடைபெறவிருக்கும் 'தேசம் காப்போம்' மாநாடு குறித்தும், கஜா புயல் குறித்தும் ஆலோசனை நடத்தினோம். இந்த மாநாட்டில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் பங்கேற்கும். திமுக தலைவர் ஸ்டாலின் கட்டாயம் கலந்துகொள்வார். இது வழக்கமான சந்திப்பு” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”பொருளாளர் துரைமுருகன் யதார்த்தமாகக் கூறிய கருத்துக்கு, திட்டமிட்ட வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். திமுக - விசிக நட்பு என்பது மிகவும் வலிமையானது. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே நடக்கவிருந்த சந்திப்பு நேரம் இல்லாத காரணத்தால், இன்று நடைபெற்றது. மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, மிகவும் வலிமையோடு தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதை விசிக தொடர்ந்து வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.
”திமுக கூட்டணியிலிருந்து ஒருசில கட்சிகளைப் பிரித்துவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களது நினைப்பு நிறைவேறாது. உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி, திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தலை நடத்தவும் தமிழக அரசு முனைப்புக் காட்டவில்லை. இடைத்தேர்தலுக்கான அறிகுறி இதுவரை தென்படவில்லை” என்று திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
”காவிரி ஆற்றின் குறுக்கே மீண்டும் மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. இவ்விவகாரத்தில் உடனடியாகப் பிரதமரை முதல்வர் சந்திக்க வேண்டும். கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை: