வியாழன், 29 நவம்பர், 2018

அம்பானிக்காக காத்திருந்த திருப்பதி – ராமேஸ்வரம் – குருவாயூர் கடவுள்கள்

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு நடைபெற இருக்கும் திருமணத்தின் அழைப்பிதழ் மதிப்பு மட்டும் ஒரு இலட்ச ரூபாய். மற்ற கூத்துக்கள் என்ன?
வினவு செய்திப் பிரிவு/ : பாரதத் தாயின் புதல்வர்கள் இருவர் நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அர்ஜண்டினா முதல் அண்டார்டிகா வரை பறந்து பறந்து செல்ஃபி எடுக்கும் கையோடு இந்தியாவின் ‘செல்ஃப் ரெஸ்பெக்டை’ (சுயமரியாதை) விட்டுக் கொடுத்து பன்னாட்டு நிறுவனங்களை வருந்தி அழைக்கும் மோடி முதல் புதல்வர்.
ரிலையன்சின் பங்குச் சந்தை உயரத்திற்காகவும், ஜியோவின் அடுத்தடுத்த ஆஃபர்களுக்காகவும் விண்ணில், மண்ணில், டிஜிட்டலில் சுற்றிக் கொண்டிருக்கும் முகேஷ் அம்பானி இரண்டாம் புதல்வர்!

இந்த பரபரப்புக்கிடையிலும் தன் பசிக்கு களி கொடுத்த தாயை நினைவுகூர்கிறார் மோடி. பில்லியனராக இருந்தாலும் தனது அன்பு மகள் இஷா அம்பானியின் திருமணத்திற்காக ஒரு தந்தை என்ற முறையில் பார்த்து பார்த்துச் செய்கிறார் முகேஷ் அம்பானி.
தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான ஆனந்த் பிரமோலை வரும் டிசம்பர் மாதத்தில் மணம் செய்ய இருக்கிறார் இஷா அம்பானி. ஆனந்த் பிரமோலின் தந்தையான அஜய் பிரமோல், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தரகு முதலாளி. நிதி, மருந்து, ரியல் எஸ்டேட், உடல்நலம், கண்ணாடி என அவர் கால் வைக்காத துறையே இல்லை. அதனால்  4.5 பில்லியன் டாலர் – ஏறக்குறைய 31,500 கோடி ரூபாய்களுக்கு அதிபதி.
பிறகு அம்பானியின் மகள் நட்பு கொள்ளும் தகுதிக்கு இது கூட இல்லையென்றால் எப்படி? மேலும் இருகுடும்பங்களும் நான்கு தலைமுறையாக பழகிய குடும்பங்கள்! அம்பானி மகளின் காதலை மட்டுமல்ல அம்பானியின் இறை வணக்கத்தை பெறும் தகுதியும் ஒரு பில்லியனர் கடவுளுக்குத்தானே இருக்கும்? தனது மகளின் திருமண அழைப்பிதழை மேன்மக்களுக்கு கொடுப்பதற்கு முன், கடவுள்களுக்கு கொடுத்து அழைப்பு விடுவிக்கிறது அம்பானி குடும்பம். முதல் அழைப்பு மும்பையில் இருக்கும் சித்திவினாயக் கோவிலில் இருக்கும் பிள்ளையாருக்கு கிடைத்திருக்கிறது.
படிக்க:
♦ செத்தபின்னும் திருடுவார் திருட்டுபாய் அம்பானி !
♦ சுயமோகி மோடி – கேலிச்சித்திரங்கள் !
இந்த பிள்ளையார் ஏதோ நம்மூரில் இருக்கும் அரசமரத்து அய்யோ பாவம் பிள்ளையார் இல்லை. மும்பையிலேயே பணக்கார கோவில் எனும் பெருமையுடையவர். பாலிவுட் நடிகர்கள், பெரும் அரசியல் தலைவர்களை வாடிக்கையாளராக கொண்டவர் இந்த சித்தி வினாயக். ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியான டிம் குக் என்பவரே 2016-ம் ஆண்டில் இக்கோவிலின் காலை வழிபாட்டில் கலந்து கொண்டிருக்கிறார் என்றால் பாருங்கள்!
ஆனந்த் பிரமோலின் – இஷா அம்பானி இத்தாலியில் பேரழகு சொர்க்கமாக கருதப்படும் கோமோ ஏரிக்கரையில்தான் இஷா அம்பானியின் நிச்சயதார்த்தம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இத்தாலியில் நடந்தாலும் இந்தியா பார்ப்பனிய சடங்கு முறைகள் ஒன்று கூட விடாமல் எல்லாம் கலாச்சாரப் படி நடந்ததாம். ராஜ பரம்பரை என்பதால் ராஜா ராணி காஸ்ட்யூமில், சிம்மாசனத்தில் ஜோடிகள் அமர்ந்து நடந்த அந்த விழா மூன்று நாட்கள் நடந்தது.
தற்போது மும்பை பிள்ளையாரிடம் திருமண அழைப்பு விடுத்த கையோடு அம்பானி இல்லத் திருமண அழைப்பிதழைப் பெறும் பாக்கியம் திருப்பதிக்குச் செல்கிறது. மூவாயிரம் கோடி ரூபாயை 2018-ம் ஆண்டில் வருவாயைப் பெற்றவர் திருப்பதி பாலாஜி! அந்தபடிக்கு இருவரும் மனமொத்த கடவுள் – பக்தர்தான்
கடந்த செவ்வாய் அன்று 27.11.2018 திருமலை தேவஸ்தானத்தில் அழைப்பிதழை வைக்கிறார் அம்பானி. தங்க ஜரிகைகளாள் அலங்கரிக்கப்பட்ட அந்த அழைப்பிதழின் அடக்கச் செலவு ஒரு இலட்சத்திற்கும் மேல்.  கஜாவில் காலியான தென்னை மரத்திற்கு நிவாரணம் ரூபாய் 500 அல்லது 1000 என தள்ளாடுகிறது.
கஜா புயலில் அரசு நிவாரணம் வேகமெடுக்க வேண்டும் என்று டிவிட்டரில் அட்வைசு செய்யும் உலக நாயகன் கமல் வேறு இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறார். காலஞ்சென்ற திருபாய் அம்பானி 15,000 ரூபாய் வாடகைக்கு ஒரு அறை எடுத்து இந்தியா எனும் மாபெரும் நாட்டையே வணிகத்தில் சிறைபடுத்திய வரலாற்றை நினைவுகூர்ந்து தனது மையக் கட்சியும் அப்படி வளருமென்றவர் இந்தக் கமலஹாசன்.






அஜய் பிரமோல் – முகேஷ் அம்பானி குடும்பத்தினர் – இரண்டு பில்லியனர் குடும்பங்களின் சங்கமம்!
திருப்பதி தேவஸ்தானத்தில் இஷா அம்பானியின் திருமண அழைப்பிதழை வைத்த முகேஷ் பிறகு ஹெலிகாப்டரில் பறந்து கேராளவின் குருவாயூருக்குச் செல்கிறார். பதினைந்தே நிமிடத்தில் அழைப்பிதழ் கொடுத்து கிருஷ்ணனிடம் நலம் விசாரித்தவர் பிறகு ராமேஸ்வரத்திற்கு பறக்கிறார். பகவனாகவே இருந்தாலும் அம்பானியின் கால்ஷீட் கால் மணிநேரம்தான்.
அங்கே அம்பானியின் தரிசனத்திற்காக காத்திருப்பவர் ராமநாத சுவாமிகள்! முகேஷ் அம்பானி சுவாமிகள் வந்த பிறகு ராமேஸ்வரம் கோவில் அர்ச்சகர்கள் அவருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தினார்கள். இன்றைக்கு மேற்படி நான்கு கோவில் பூசாரிகளின் தட்டில் குறைந்தது ஒரு இலட்ச ரூபாய் காணிக்கை விழுந்திருக்கும்.
ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதியில் அழைப்பிதழை வைத்து திருமணத்திற்கு அழைத்தார் அம்பானி. அருகாமையில் அரசு நிவாரணம் வரவில்லையே என டெல்டா மாவட்டங்களில் மக்கள் சாலையில் அமர்ந்திருக்கின்றனர். இருந்தாலும் என்னப்பா ராமநாதா, அம்பானிக்காக அசடு வழிய நிற்கிறாயே அய்யோ பாவம் மக்களுக்காக கொஞ்சம் அருள் பாலிக்க கூடாதா என்று கவிபாடுவதற்கு இன்று தமிழ்ப் புலவர்கள் இல்லை.
ஒரு இலட்ச ரூபாய் அழைப்பிதழை வைத்து மனமுருகி திருமணத்திற்கு அழைத்த கையோடு ராமநாத சுவாமி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தின் மராமத்துப் பணிச் செலவை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக கோவில் நிர்வாகிகளிடம் அம்பானி கூறியிருக்கிறார். இதற்கு நன்றி தெரிவித்து தெர்மோகோல் செல்லூர் ராஜு இன்று பலூன் பறக்க விடுவது உறுதி.
இதற்கு மேல் ஒரு விசயம் இருக்கிறது. தினமும் பகல் 1 மணிக்கு சாத்தப்படும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலின் நடை, முகேஷ் அம்பானியின் வருகைக்காக கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்து வைக்கப்பட்டது.
இது தவறு என்கிறீர்களா? பாரதத்தாயின் இரண்டாம் புதல்வர் தனது பிசியான ஒரு நாள் நிகழ்வில் நான்கு கடவுள்களை பார்த்து அழைப்பிதழ் வைத்து அழைப்பது என்பது சாதாரணப்பட்டதா? அதற்கு வேலை வெட்டி இல்லாமல் உண்ட கட்டி சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் ராமநாதன் ஒரு மணி நேரம் கழித்து தூங்கப் போவதால் ஒன்றும் குடிமூழ்கிவிடாது. அதுதான் ஏற்கனவே கஜா புயலில் மூழ்கிவிட்டதே!
ராமேஸ்வரம் ராமநாதனைப் போல வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் எச்ச ராஜாவும், ஆன்மீக கூலிப்படையாக இயங்கி வரும் அர்ஜூன் சம்பத்தும் இந்த ஒரு மணிநேர தாமத நடை சாத்தை காணவில்லையா? ஜனவரி புத்தாண்டில் நள்ளிரவு 12 மணிக்கு இந்து கோவில்கள் திறக்கப்பட்டு பூஜை செய்வதை ஒவ்வொரு ஆண்டும் எதிர்க்கும் இந்த பக்தர்கள் அம்பானிக்காக ராமநாதன் காத்திருந்ததை லேசாக ஏன் எடுத்துக் கொள்கிறார்கள்? இல்லையென்றால் அம்பானி கொல்வார் என பயமா?
அதானியால் ஸ்பான்சர் செய்யப்பட்டு, அம்பானியால் பரமாரிக்கப்படும் மோடி அவர்களே முகேஷ் அம்பானி என்றால் பயபக்தியுடன் அணுகும் போது அர்ஜூன் சம்பத், எச்.ராஜா போன்ற சில்லுண்டிகளுக்குச் சொல்லவா வேண்டும்?
தில்லியில் விவசாயிகளின் நிவாரணத்திற்காக அய்யாக்கண்ணு போராடிக் கொண்டிருந்த போது விதேசி தேசத்தில் பிரியங்கா சோப்ராவோடு உரையாடல் நிகழ்த்தியவர் மோடி. அதில் பிரியங்கா எப்படி குட்டைப் பாவாடையோடு பிரதமர் மோடி அவர்களை சந்திக்கலாம் என சங்கிகள் குட்டைக்கு எதிராக ஒரு நெட்டை இயக்கம் எடுத்தனர்.
தற்போது அதே பிரியங்கா சோப்ரா அம்பானியின் செல்ல மகள் திருமணத்தன்று நாட்டியமாட இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டியத்தை முகேஷ் அம்பானிக்கு அருகில் அமர்ந்து பிரதமர் மோடி பார்க்க இருக்கிறார். ஆதலால் எச்சையும், அச்சையும் கடவுளைக் காக்க வைத்த அம்பானி என்று டிவிட் போடுவதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது!


திருமணம் முடிந்த கையோடு அம்பானி மகள் குடித்தனம் நடத்துவதற்காக மும்பையில் அரபிக் கடலை பார்த்த வாறு இருக்கும் வோர்லி பகுதியில் ஐந்து மாடி பங்களாவை வாங்கியிருக்கிறார் மாமனார் அஜய் பிரமோல். இந்த மாளிகையை அவர் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்திடமிருந்து 2012-ம் ஆண்டில் வாங்கியிருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் என்பதால் அவர் ட்ரம்ப் டவர்ஸ் நிறுவனத்திலிருந்து கூட வாங்கலாம். அது என்ன ட்ரம்ப் டவர்ஸ்?
அமெரிக்க அதிபரும் தொழிலதிபருமான டொனால்ட் ட்ரம்பின் ரியல் எஸ்டேட் நிறுவனம்தான் ட்ரம்ப் டவர்ஸ்! அவர் அதிபரான பிறகு பிராண்ட் மதிப்பு கூடியிருப்தால் இந்தியாவில் பூனே, சண்டிகார் நகரங்களில் அந்நிறுவனம் அடுக்ககங்களை கட்டி வருகிறது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்ன தெரிகிறது? இந்தயாவின் முதல் பணக்காரர் இந்தியாவின் முதல் பணக்காரக் கடவுளை சந்தித்தார். இந்தியாவின் முதல் நிலை பணக்காரர்களுக்காக ஓடியாடி வேலை செய்யும் மோடி திருமணத்திற்கு வருவார். முதல் நிலை பணக்காரர்களுக்காக மட்டும் நடனமாடும் முதல் நிலை நடிகரான பிரியங்கா சோப்ரா திருமணத்தன்று ஆடுகிறார். முதல் நிலை பணக்காரர்களுக்கான மும்பை வோர்லி பகுதியில் ஒரு மாளிகை இளம் தம்பதியினருக்கு காத்துக் கொண்டிருக்கிறது. முதல் நிலை பணக்காரர்கள் தமது குடும்ப நிகழ்வுகளை நடத்தும் இத்தாலியில்தான் நிச்சயதார்த்தம் நடத்துகிறது.

கருத்துகள் இல்லை: