அருந்ததி ராய் November 24, 1961 |
உயர்சாதி, மேட்டுக்குடி என்ற தன்மையில் அவை இருந்தன. ஒருவரை பற்றி எதுவும் தெரியாமலும், தெரிந்து கொள்ளும் பிரயத்தனமும் இல்லாமலும், அது குறித்த சிறு குற்றவுணர்ச்சியும் இல்லாமல் புலனில் பதியும் மேலோட்டமானவற்றை மட்டுமே கொண்டு வெட்கமே இல்லாமல் மனதில் தோன்றுபவற்றை பகட்டுடன் முன்வைக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.
அருந்ததி ராயின் பெற்றோர் வேறு வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். தாய் கேரள சிரியன் கிறிஸ்தவர் மற்றும் தந்தை வங்காளி இந்து. சிரியன் கிறிஸ்தவர்கள் இந்தியாவின் ஆதி கிறிஸ்தவர்கள். புனித தோமா அவர்களின் இந்திய வருகையை ஒட்டி மதம் மாறியவர்கள். அப்போது மதம் மாறியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள். கிறிஸ்தவத்துக்கு மாறிய பின்னரும் பார்ப்பனீயத்தை விட்டுக் கொடுக்காதவர்கள். அருந்ததி ராயின் 2 வயதிலே தாய் தந்தையர் பிரிந்து விட்டனர். தாயுடன் கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டார். மிகவும் நொறுங்குண்ட வாழ்க்கை அவருடையது பால்யம். முதல் நாவல் God of Small Things சுயவரலாறு தன்மை கொண்டது.
God of Small Things பெரியவர்களின் உலகை ஒரு குழந்தை மனம் உள்வாங்கியதை முக்கிய கருப்பொருளாக கொண்டது. பாலியல் நிந்தனையிலிருந்து பல்வேறு இன்னல்களை அருந்ததி ராயை உணர்த்தும் எஸ்தா பாத்திரம் அனுபவிக்கிறது. அவரது தாயை உணர்த்தும் அம்மு பாத்திரம் வேலுத்தா என்ற கீழ் சாதி பாத்திரத்துடன் கொண்ட பாலியல் உறவை கூறியதால் நாவல் வெளியான பிறகு அருந்ததி ராயின் தாய் அருந்ததியுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளார்.
அவருடைய 37-வது வயதில் God of Small Things வெளியாகி பெருவெற்றி பெற்றது. அதன் வெற்றியும், அருந்ததி அடைந்த புகழும், புக்கர் விருதுக்கு தேர்வு பெற்றமையும் சக எழுத்தாளர்களை பொறாமை கொள்ள செய்வன. குஷ்வந்த் சிங், சல்மான் ருஷ்டி, விக்ரம் சேத், ஷோபா டே, கமலா தாஸ் ஆகியோர் பெறாத கவனத்தை அருந்ததி ராய் குறுகிய காலத்தில் பெற்றார். என்றாலும் அவருடைய அபுனைவு எழுத்துகளுக்காகவே அவர் அதிகம் வெறுக்கப்பட்டார். ஜெயமோகனால் குருவி மண்டை மூளை என்று இகழப்பட்டார். ஜெமோ இன்றும் வைக்கின்ற முக்கியமான குற்றச்சாட்டு - இந்தியா பற்றிய எதிர்மறை பிம்பத்தை கட்டமைக்க மேற்குலகுக்கு வேண்டப்படும் நபர் அருந்ததி என்பது.
அவர் அது குறித்து பேசியிருக்கிறார். தனது நாவலின் வெற்றிக்கு பிறகு இந்தியாவை பற்றி வருணனை செய்யும் ஆபத்தான இடத்துக்கு தான் வந்திருப்பதை உணர்ந்திருப்பதாக ஒரு பேட்டியில் கூறுகிறார். அந்த புரிதலுடனே கவனமாக சர்வதேச ஊடகங்களிடம் உரையாடுவதாகவும் கூறுகிறார். அதே நேரம் நாம் சந்திக்கும் சில பிரச்சினைகள் உலகளவில் விவாதிக்கப்பட வேண்டுமா? இல்லையா? டர்பன் நகரில் நடந்த ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் விடுதலை ராசேந்திரன் இந்தியாவின் சாதிப் பிரச்சினையை நிறவெறியுடன் ஒப்பிட்டு பேசியது சரி தானே! அருந்ததி ராயின் தெளிவு கொண்டாடப்பட வேண்டியதல்லவா?
அருந்ததி ராயின் நாவல் வெற்றி பெற்றதற்கு இன்னொரு முக்கியக் காரணம் அவருடைய ஆங்கிலம். ஒரு பூர்வீக ஆங்கில எழுத்தாளனுக்கே சவால் விடக்கூடியது அது. இந்திய அரசியலில் சில முக்கியக் குறுக்கீடுகளை அவர் செய்துள்ளார். வாஜ்பாய் அரசின் பொக்ரான் அணுகுண்டு சோதனையை அவர் விமர்சித்து எழுதிய கட்டுரை அவுட்லுக்கில் வெளியானது. முதன்முதலாக வினோத் மேத்தாவிடமிருந்து அந்த கட்டுரையை உடனே பிரசுரிக்க தான் வேண்டுமா? என்று கேட்டு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அந்த கேள்வி அருந்ததி ராயின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது.
அருந்ததியின் நீள் கட்டுரைகள் அனைத்தும் அவுட்லுக்கில் வெளிவந்து கொண்டிருந்தது. வினோத் மேத்தாவின் மறைவுக்கு பிறகு ஒரு அஞ்சலி கட்டுரை மட்டுமே எழுதியதாக நினைவு. அவருடைய Walking with the Comrades மாவோயிஸ்ட்கள் பற்றிய பொதுப்புத்தியின் புரிதலை உடைக்கும் ஒன்று. அவருடைய அரசியல் கட்டுரைகளை பல்வேறு இடசாரிக் குழுக்கள் போட்டி போட்டுக் கொண்டு மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளன. நானும் சில கட்டுரைகளை மொழி பெயர்த்துள்ளேன். அவற்றின் மொழி வளமும், மேம்பட்ட அரசியல் புரிதலும் அசர வைப்பன.
அவருடைய Why I am not Anna என்ற கட்டுரையை விளையாட்டாக மொழிபெயர்த்து ஒரு நண்பனின் ப்ளாக்கில் வெளியிட கொடுத்தேன் - என் பெயர் இல்லாமலே. (எனக்கு blog இல்லாததால்). அந்த கட்டுரை அன்னா ஹசாரே, அரவிந்த் கேஜ்ரிவால் தோற்றப்பாட்டை விளக்கும் அற்புதமான கட்டுரை. மேலும் சில கட்டுரைகள், பேட்டிகளையும் மொழிபெயர்த்தேன். இந்துத்துவத்தை எதிர்கொள்ளுவதில் அவர் குறிப்பிடும் ஒரு செய்தி முக்கியமானது. "இந்து மதம் குறித்து அம்பேத்கர் கூறியவற்றை கூட கூற முடியாத ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். நமது வார்த்தைகளில் ஒரு கவனம் தேவை. ஆனால் ஒரு முறை ஒன்றை கூறி விட்டால் எக்காரணம் கொண்டும் அதை திரும்பப் பெறக்கூடாது' என்கிறார்.
சன் டி.வியிலிருந்து வீரபாண்டியன் வெளியேற்றம் அனுமதிக்கப்பட்டதாலே அவர்கள் அடுத்த சிறிது நாட்களிலே புதிய தலைமுறைக்கும் வந்தார்கள். சீதையை போய் சீதாப்பிராட்டி என்று சொல்லவில்லை என்பதற்கு பாண்டேவிடம் எச்ச ராஜா சண்டையிடுவதை அனுமதிக்கும் ஒரு அவல நிலைக்கு ஊடக தர்மம் வீழ்ச்சியுற்று கிடக்கிறது.
ஊறும் எச்சிலை நம்பி தமக்கு சொல்ல ஏதோ ஒன்று இருப்பதாக துப்பும் நபர்கள் அருந்ததி ராயின் எழுத்துக்களில் சிலவற்றையாவது வாசித்து விட்டு பேசுவது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக