ஞாயிறு, 25 நவம்பர், 2018

கசாபை அடையாளம் காட்டிய சிறுமி தேவிகாவை கைவிட்ட அரசு ..

தினமலர்: மும்பையில் ஊடுருவி தாக்குதல் நடத்திய, பாக்.,
பயங்கரவாதிகளில் ஒருவனான, அஜ்மல் கசாபை, நீதிமன்றத்தில் அடையாளம் காட்டிய பெண், 10 ஆண்டுகள் கடந்த பின்னும், அரசு உதவி கிடைக்காமல், பரிதாப நிலையில் உள்ளார்.
கடந்த, 2008, நவ., 26ல், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை நகருக்குள், பாக்.,கில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள், நுாற்றுக் கணக்கானோரை கொன்றனர்.மும்பை ரயில்வே ஸ்டேஷனில், பயங்கரவாதி அஜ்மல் கசாப் துப்பாக்கியால் சுட்டதில், 9 வயது சிறுமி, தேவிகா ரோதவான், காலில் குண்டு பாய்ந்து விழுந்தாள். தீவிர சிகிச்சைக்கு பின், அவள் உயிர் பிழைத்தாள்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில், அஜ்மல் கசாபை தவிர, மற்றவர்களை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு கொன்றனர்.கசாப் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, நேரில் பார்த்த சாட்சியாக, ஊன்றுகோல் உதவியுடன், தட்டு தடுமாறி நடந்து சென்று, தேவிகா சாட்சி கூறினாள்.


அஜ்மல் தன்னை சுட்டதாக அவள் கூறிய சாட்சியத்தால், அவனுக்கு துாக்கு தண்டனை கிடைத்தது.தேவிகா, சாட்சி கூறிய காட்சி, தொலைக்காட்சி களில் ஒளிபரப்பப்பட்டதால், ஒரே நாளில், உலகம் முழுவதும் பிரபலம் ஆனாள். அவள் குடும்பத்திற்கு வீடு உட்பட பல உதவிகளை வழங்குவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது, 19 வயதாகும் தேவிகாவுக்கு, அரசிடமிருந்து, இன்னும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.தேவிகா கூறுகையில், ''அஜ்மல் பற்றி சாட்சி கூறியதால், பள்ளியில் சக மாணவியரால் நான் புறக்கணிக்கப்பட்டேன். அரசு கூறிய படி, வீடு உட்பட எந்த உதவியும் அளிக்கப் படவில்லை,'' என்றார்.

கருத்துகள் இல்லை: