திங்கள், 26 நவம்பர், 2018

திமுக கூட்டணியில் மதிமுக இல்லையா..?’- கொதிக்கும் வைகோ

‘திமுக கூட்டணியில் மதிமுக இல்லையா..?’- கொதிக்கும் வைகோNDTV  :  மதிமுக-வின் பொதுச் செயலாளர் வைகோ, சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசைப் பாராட்டும் வகையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். இதையடுத்து, திமுக - மதிமுக இடையில் மீண்டும் பிளவு ஏற்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டன. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்துள்ளார் வைகோ.
திமுக பொருளாளாரான துரை முருகனிடம் சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘வைகோ அதிமுக அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளாரே?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு துரை முருகன், ‘திமுக கூட்டணியில் மதிமுக இல்லை. எனவே, அது குறித்து நான் கருத்து கூற முடியாது' என்று பதிலளித்துவிட்டார். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையில் மீண்டும் பிளவு விழுந்துவிட்டது என்று தமிழக அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது.

வைகோவோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, துரை முருகன் கருத்து குறித்து இதுவரை தெளிவுபடுத்தவில்லை. இந்நிலையில் துரைமுருகனின் கருத்து குறித்து வைகோவிடம் கேள்வி கேட்கப்பட்டதற்கு, ‘திமுக கூட்டணியில் மதிமுக இல்லையென்று அவர் சொன்னது மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்துள்ளது. எனக்கு மட்டுமல்ல, எங்கள் தொண்டர்களுக்கும் அந்தக் கருத்து மன வேதனையைக் கொடுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், தெளிவுபடுத்த வேண்டும். அவர் பதில் சொல்லட்டும். இதற்கு மேல் இந்த விஷயம் குறித்து நான் பேச விரும்பவில்லை' என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: