செவ்வாய், 27 நவம்பர், 2018

“திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம்! இது எந்த ஊர் நியாயம் சமஸ்?

இந்துத்துவம் வளர்வதற்கான சூழலை வஹாபியம் உருவாக்குகிறதா? அல்லது வஹாபியம் வளர்வதற்கான சூழலை இந்துத்துவம் உருவாக்குகிறதா?
thetimestamil.com - சீனி. விடுதலை அரசு :
தி இந்து நாளிதழில் வெளிவந்த ”அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்” என்ற சமஸ் அவர்களின் கட்டுரை தானும் குழம்பி படிப்பவரையும் குழப்பும் குழப்பத்தின் உச்சம்.
முதலில் இந்த கட்டுரை யாரை நோக்கி கேள்விகளை முன் வைக்கிறது? திராவிடர் இயக்கங்களையா? திராவிடக் கட்சிகளையா? தேர்தல் அரசியலுக்கு செல்லாமல் சமூகப் புரட்சியை இலக்காக கொண்டு செயல் படுபவை திராவிடர் இயக்கங்கள்.
தேர்தல் அரசியலில் ஒட்டுக்காக சில சமரசங்களை செய்து கொண்டு, மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட மாநில அரசு அதிகாரத்தில் அமர்ந்து இயன்றவரை சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பவை திராவிடக்கட்சிகள்.
முன்னது இனத்தின் அடிப்படையிலானது. பின்னது நிலத்தின் அடிப்படையிலானது. இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் உள்ள வேறுபாட்டையும், ”திராவிடர்” ”திராவிடம்” என்பதற்கான வேறுபாட்டையும் அறியாத குழப்பம் கட்டுரை முழுவதும் பரவிகிடக்கிறது.
கடவுள் மறுப்பை முன்வைத்து வளர்ந்த மரபில் வந்த அண்ணா “ஒன்றே குலம் ஒருவனே ஒருவனே தேவன்’ என்று சொன்னது கொள்கை மாற்றமல்ல; அரசியல் சறுக்கல்.  கடவுள் நம்பிக்கையுடன் தனது கட்சியின் மீதும் நம்பிக்கை வைத்து ஒட்டு போடும் வாக்காளர்களின் மனதை கவர்ந்திழுக்கும் தேர்தல் அரசியல்.

ஆனால்…அண்ணா இறுதிவரை நாத்திகர் – கடவுள் மறுப்பாளர்! இன்றளவும் இந்தியாவின் எந்த அரசியல் கட்சிகளைவிடவும் திராவிட அரசியல் கட்சிகளில் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை எவராலும் மறுக்க இயலாது.
அதே நேரத்தில் வாக்காளர்களின் மனதை கவர வேண்டிய தேவையற்ற, சாகும்வரை நாத்திக பிரச்சாரம் செய்த தந்தை பெரியார் எந்த இடத்திலும் பொதுத்தளத்தில் இணைந்து செயல்படுவதற்கு நாத்திகத்தை முன் நிபந்தனையாக வைத்ததில்லை. அதனால்தான் அவரால் பழுத்த ஆன்மீகவாதிகளான குன்றக்குடி அடிகளார், மறைமலையடிகள், திரு.வி.க. போன்றவர்களோடு சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்படமுடிந்தது.
அடுத்து, ஆரியர் – திராவிடர் என்ற கருத்தாக்கத்தை தாண்டி திராவிட என்ற சொல்லுக்கான பொருத்தப்பாடு என்ன? என்று கேட்கிறார் சமஸ்.  முதலில் ஆரியர் – திராவிடர் என்ற கருத்தாக்கத்தை நம் சமூகம் தாண்டிவிட்டதா? அல்லது கட்டுரையாளர் தாண்டி விட்டாரா?
மூவேந்தர்களின் முடியாட்சி காலத்திலிருந்து இன்றைய மக்களாட்சி காலம் வரை நடப்பவை அனைத்தும் அரசியல் போரட்டமல்ல, ஆரியர் – திராவிடர் போரட்டமே.
மனுநீதி சோழனின் அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சிமணியை ஒரு எருமை மாடு அடித்திருந்தால் பசு மாட்டிற்கு கிடைத்த நீதி கிடைத்திருக்குமா? இந்த ”மாட்டு அரசியல்” இன்றுவரை தொடர்கிறதா? இல்லையா? அன்றிலிருந்து இன்றுவரை பசுவின் புனிதம் எதன் பெயரால் காப்பற்றப்படுகிறது?
காலம் மாறிவிட்டது என்று நம்மை நாமே சமாதானம் படுத்திக் கொள்ளலாம். ஆம், காலம் மாறிவிட்டது. எந்த அளவில்? பஞ்சமனுக்கு பசு வளர்க்கும் உரிமையில்லை என்பதை மாற்றி இன்று சேரியின் தொழுவத்தில் பசு வந்திருக்கிறது. அந்த அளவில் தான் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இன்று வரை அக்ரகார தொழுவத்தில் எருமை மாடுகள் இல்லையே ஏன்? இந்த கேள்விக்கான பொருத்தப்பாடுதான் திராவிடம்!
இன்றளவும் கோவில்களில் அர்ச்சகராக முடிவதில்லை என்பதை விடுங்கள். கருவறைக்கு வெளியே இருக்கும் மடப்பள்ளியிலும், அந்த மடப்பள்ளியில் தயாராகும் உணவுகளை விற்கும் கோவில் பிரசாத கடைகள் கூட பார்ப்பனர்கள் தவிர பிற சமூக மக்கள் நடத்த முடியாத நிலையில் நாம் எப்படி ஆரியர் – திராவிடர் கருத்தாக்கத்தை தாண்டுவது?
திராவிடம் என்பது தோராயமாகவோ வெறும் தென்னிந்தியா என்ற நிலப்பரப்பை மட்டுமோ குறிக்கும் சொல் அல்ல.
ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு கிடந்த மக்களின் அரசியல் குறியீடு! அதனால்தான் அயோத்திதாசரும், இரட்டைமலை சீனிவாசனும், டாக்டர் நடேசனாரும், பெரியாரும் திராவிடர் என்ற சொல்லை தொலை நோக்கோடு பயன்படுத்தினார்கள்.
ஏறக்குறைய அதே காலத்தில் வாழ்ந்த பாரதியார் ”ஆரியபூமி” “ஆரியநாடு” ”ஆரிய மைந்தன்” என்ற சொல்லாடலை தன் பாடல்களில் தாராளமாக பயன்படுத்தியதையும், திராவிடர் என்ற சொல்லை தவிர்த்ததையும், இந்து பத்திரிகையின் நிறுவனர்களில் ஒருவரான ஜி.சுப்பிரமணிய அய்யர் 1888 இல் தான் உருவாக்கிய பள்ளிக்கூடத்திற்கு ”ஆரியன் உயர்பள்ளி” என்று பெயரிட்டதையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் திராவிடர் என்ற சொல்லின் வீரியம் புரியும்.
கால்டுவெல் 1856 இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிடுவதற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே, சர். வில்லியம் ஜோன்ஸ், வில்கின்ஸ் ஆகியோர் பகவத்கீதை, சாகுந்தலம், கீதகோவிந்தம் உள்ளிட்ட சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர்.
1847 இல் ரிக்வேதத்தை மாக்ஸ்முல்லர் மொழி பெயர்க்க தொடங்கி விட்டார். சமஸ்கிருதமும், அய்ரோப்பிய மொழிகளும் ”ஆரிய மொழிக்குடும்பத்தை” சார்ந்தவை என்று மாக்ஸ்முல்லர் கூறியது இந்தியாவில் இருந்த பார்ப்பனர்களை உற்சாக கடலில் மிதக்க வைத்தது.
வெள்ளையர் காலத்தின் முதல் இந்திய நீதிபதி முத்துசாமி அய்யர் சென்னை பட்டதாரிகள் சங்கத்தில் உரையாற்றும் போது. ”ஆரிய இனத்தின் இருபிரிவுகளும் கடவுளின் விதிப்படி இந்தியாவில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. அதனுடைய பெருங்கடமையை இந்தியாவிற்கு ஆற்ற பிரிட்டிஷ் ஆட்சிக்குத்தான் திறமையிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
ஆக, இந்த வரலாற்று சூழலில்தான் ஆரியமொழி, ஆரிய இனம் என்ற பெருமிதங்களை பார்ப்பனர்கள் உயர்த்தி பிடித்ததற்கு எதிர்வினையாக ”திராவிடம்” எழுந்தது.  வினை இன்னும் செயலாற்றிவரும் நிலையில் எதிர்வினைக்கான பொருத்தப்பாடு இன்னும் நீடிக்கவே செய்கிறது.
இந்தி மேலாதிக்கத்தை எதிர்க்கும் திராவிட அரசியல் எப்போது தமிழ் மேலாதிக்கத்தை முன் வைத்தது? தமிழில் வழிபாடு செய், தமிழில் பெயர்பலகை வை, குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டு, தமிழில் வழக்காடும் உரிமையை கொடு என்கிறது
திராவிட அரசியல், நாங்கள் இதை உத்திரபிரதேசத்திலோ, குஜராத்திலோ, ஆந்திரா, – கர்நாடகாவிலோ கேட்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் உரிமைக்கு குரல் கொடுக்கிறோம்; – போராடுகிறோம். இது உங்கள் பார்வையில் தமிழ் மேலாதிக்கமா?
பிறரை மேலாதிக்கம் செய்வதற்காக அல்ல; சமத்துவத்திற்காக உருவாக்கப்பட்டதே திராவிடர் இயக்கம்! முதல் வரியில் தமிழ் மேலாதிக்கம் என்று சொல்லும் நீங்களே, கடைசி வரியில் ”யாரையும் மேலாதிக்கம் செய்யும் நோக்கம் நமக்கு இல்லை” என்று எழுதுகிறீர்கள். இவ்வளவு தெளிவாக வேறுயாரும் குழப்பமுடியாது.
ஆரிய ஜனதாகட்சி அல்லது ஹிந்து ஜனதாகட்சி என்று இல்லாமல் பாரதிய ஜனதாகட்சி என்றே ஆர்.எஸ்.எஸ் தனது அரசியல் முகத்திற்கு பெயரிட்டிருக்கிறது என்று பூரித்து போகிற நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்! இந்தியா – பாரதம் என்பதற்கு இந்திய மொழிகளில் உள்ள வேர்ச்சொல் என்ன?
”ஹிந்து யா” என்பதன் திரிபுதானே இந்தியா! பரதன் ஆண்ட நாடு என்பதன் சுருக்கம்தானே பாரதம், பாரதீயம். இவை ஆரிய கருத்தாக்கம் அன்றி வேறென்ன? நேரடியாக ஆரிய ஜனதாகட்சி என்று பெயர் வைத்தால் இந்து ஒற்றுமை என்கிற முகமூடி கழன்று விடுமே, அதனால்தான் பாரதிய, ராஷ்டிரிய என்ற சொல்லுக்குள் தங்களை ஒளித்து கொள்கிறார்கள்.  எங்களுக்கு மறைமுக திட்டங்கள் எதுவுமில்லை. எனவே பல்வேறு பெயர்களுக்குள் ஒளிந்துக்கொள்ள தேவையுமில்லை.
இந்திய அரசியல் அரங்கில் நீங்கள் குறிப்பிடுகிற சமூகநீதி, மாநில சுயாட்சி, மாநில கட்சிகளின் ஒருங்கிணைப்பு போன்றவற்றை இந்தியாவின் எந்த மாநிலக்கட்சியும், அல்லது தேசியக்கட்சியும் செய்து விடமுடியும். ஆனால் ஆரியர் – ஆரிய தேசம், ஹிந்துத்துவா என்பதற்கான எதிர் அரசியலை திராவிடகட்சிகளும், பெரியாரிய இயக்கங்களும் மட்டுமே செய்ய முடியும்; திராவிட கட்சிகளின் தேவை இதுதான்.
சட்டசபையில் ஒரேயொரு பிராமணர்தான் உறுப்பினராக இருக்கிறார் என்று அங்கலாய்க்கிற நீங்கள்தான் ஜெயலலிதா தலைமையின் கீழ் அ.தி.மு.க. வந்தபோது பிராமணர் ஒறுத்தல் முடிவிற்கு வந்து விட்டதாகவும் எழுதுகிறீர்கள்.  உண்மையற்ற ஒன்றை எழுதும்போது இப்படி வளைத்து, வளைந்து தடுமாறித்தான் ஆக வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல, எழுத்திலும் தெரியும் சமஸ்.
திராவிட அரசியல் கட்சி ஒன்றுக்கு ஜெயலலிதா தலைமையேற்றது அரசியல் விபத்து. விபத்துகள் எப்போதும் நேர்வதில்லையே. பார்ப்பனரான ஜெயலலிதா தான் தலைமை வகித்த அ.தி.மு.கவில் எத்தனை பார்ப்பனர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்? அவர் நினைத்திருந்தால் 234 இடங்களில் சுமார் அய்ம்பது இடங்களிலாவது பார்ப்பனர்களை நிற்க வைத்திருக்க முடியுமே? இரட்டை இலை சின்னத்தில் கழுதை நின்றால் கூட வெற்றி பெறும் என்ற பிம்பம் இன்றைய வரை இருக்கிறதே? ஏன் பெருவாரியாக பார்ப்பனர்களை வெற்றிப்பெற செய்ய முடியவில்லை? அதுதான் இந்த மண்ணின் குணம்.
நூற்றாண்டுகளுக்கு பின் கிட்டதட்ட தமிழ் அரசியல் களத்தை விட்டே பிராமண சமூகத்தை வெளியேற்றி விட்டார்களே என்று வேதனைப்படுகிற நீங்கள் இன்றளவும் பொது சமூகத்திலிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொண்டு, ஆவணி அவிட்டத்தில் பூணூலை புதுப்பித்து தனது உயர் ஜாதி தன்மையை வெளிப்படுத்திக்கொண்டு, நேக்கு – நோக்கு என்கிற தங்கள் நாக்கு நீளத்தை பொது தமிழாக மாற்றி மொழியை சிதைத்துக் கொண்டு, சமஸ்கிருதம் தேவபாஷை என்று அலட்டிக் கொண்டு, தங்கள் சமூகத்திற்குரிய இட ஒதுக்கீட்டை பெறவிரும்பாமல் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டையும் குழித் தோண்டி புதைக்க காத்துக்கொண்டு இருக்கிற ”அவாளுக்கு” என்றைக்காவது அறிவுரை கூறியதுண்டா?
வேத, ஸ்மிருதிகளை படித்து, பிரம்மத்தை உணர முயல்பவன்தானே பிராமணன்? பிரம்மத்தை தேடுபவர்களுக்கு அரசியல் எதற்கு? இட ஒதுக்கீடு எதற்கு? இல்லையில்லை! நாங்கள் வைதீகத்தை விட்டு லவுகீகத்திற்கு வந்து விட்டோம் என்று சொன்னால் உபநயனம் எதற்கு? பூணூல் எதற்கு?
நீங்கள் சொல்கிறபடி மூன்று விழுக்காடு இட ஒதுக்கீட்டையோ, மக்கள் தொகையில் அவர்களுக்குரிய விகிதாச்சார பங்கீட்டையோ எவரும் மறுக்கவில்லையே?  1921 இல் நீதிக்கட்சி கொண்டு வந்த முதல் வகுப்புவாரி உரிமை ஆணையில் பார்ப்பனர்களுக்கு நூற்றுக்கு பதினாறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை 1950 இல் வழக்கு தொடர்ந்து ஒழித்தவர்கள் யார்? பார்ப்பனர்கள்தாம்.
பார்ப்பனர்களுக்குரிய விகிதாச்சார பங்கீட்டின்படி இடஒதுக்கீட்டை பிராமணர் சங்கங்கள் ஒப்புக் கொள்கிறதா? கேட்கிறதா? நடிகர் எஸ்.வி.சேகர் இதற்கான முயற்சியை முன்னெடுத்தபோது தடுத்தவர்கள் யார்? அவர்களின் நோக்கம் தங்களுக்குரிய ஒதுக்கீட்டை பெறுவதில்லை. ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டையும் ஒழிப்பது, தகுதி – திறமையின் பெயரால் அனைத்து இடங்களையும் அபகரிப்பது.
நீதிக்கட்சியின் தொடக்க காலத்தில் தெலுங்கு பிராமணர் ஒருவரின் சொந்தக்காரர்கள் 49 பேர் வருவாய்த்துறையில் பணியாற்றியதை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்; இன்று வரை அதே நிலை நீடிக்கிறதே… தமிழ்நாட்டின் உயர் அதிகாரபீடமாக விளங்கும் தலைமை செயலகத்தில் உச்சகட்ட அதிகாரத்தில் உள்ள பார்ப்பனர், அவர்தம் உறவினர்கள் எத்தனைபேர் எத்தனை பெரிய பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதையும், இதைப்போன்றே இன்னும் பல்வேறு அதிகார மையங்களில் நிறைந்து இருக்கும் பார்ப்பனர்களையும்,  இட ஒதுக்கீடு நடைமுறையில் இல்லாத தனியார் துறை நிறுவனங்களின் உயர்மட்ட பதவிகளில் கும்பல் கும்பலாக பார்ப்பனர்கள் ஆக்ரமித்துள்ளனர் என்பதற்கான பட்டியலையும் எங்களால் தரமுடியும்.
அரசியல்ரீதியாக பிராமணர்களை உள்ளிழுக்க வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை கூறுகிறீர்கள். தங்களுக்கென்று ஒரு வேலி அமைத்துக்கொண்டு பொதுத்தளத்திற்கு வராமல் ஒதுங்கி நிற்பவர்களை நாங்கள் ஏன் வலுக்கட்டாயமாக உள்ளே இழுக்க வேண்டும்?
உங்கள் வாதத்தை ஒப்புக்கொண்டால்கூட திராவிடர் இயக்கத்தில்தான் பார்ப்பனர்கள் சேர்க்கப்படுவதில்லையே தவிர, திராவிட அரசியல் கட்சிகளில் சேரத் தடையில்லையே. எத்தனை பார்ப்பனர்கள் திராவிடக்கட்சிகளில் சேர்ந்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டிருக்கிறார்கள்? போராட்டங்களில் சிறை சென்று இருக்கிறார்கள்? தடியடிபட்டு கொடிபிடித்து முழங்கியிருக்கிறார்கள்? பசை வாளியை கைகளில் ஏந்தி சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள்? களப்பணி செய்து களைத்திருக்கிறார்கள்? முள்ளிவாய்க்கால் படுகொலை என்ற வரலாற்றுத்துயரம் நிகழ்ந்தபோது ஒட்டுமொத்த தமிழகமும் வீதிக்கு வந்து போராடியது, அப்போது அமைதியாக இருந்தது அக்ரகாரம் மட்டும்தானே?
ஆக, எந்த சமூக பங்களிப்புமின்றி, எந்த பிரச்சினைக்கும் முகம் கொடுக்காமல், பதட்டப்படாமல் பவிசாக உட்கார்ந்திருக்கும் பார்ப்பனர்கள் வாயில் தாம்பூலத்தை மடித்து வைக்க வேண்டும், அவர்கள் காறி உமிழ்ந்தால் கைகளில் ஏந்தி கொள்ளவேணடும். இல்லையென்றால் திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம்! இது எந்த ஊர் நியாயம் சமஸ்?
தலித்துகள் – முஸ்லீம்கள் மேம்பாடு என்கிறீர்களே திராவிடர் இயக்கத்தை தவிர வேறு எந்த இயக்கத்தில், திராவிடகட்சிகள் ஆட்சியில் உள்ள தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்தில் இவர்களின் நிலை மேம்பாட்டுடன் இருக்கிறது என்று தரவுகளுடன் பட்டியல் போட்டு விட்டு பிறகு எங்களிடத்தில் வந்தால் அது அறிவு – நாணயம்.
அன்றைய சென்னை மாகாணத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது 1947 இல்.
ஆனால் அதற்கு கால்நூற்றாண்டுக்கு முன்பே ஆதி திராவிடர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னை மாகாணத்தில் வழங்கி 1921 இல் நீதிக்கட்சி ஆணை பிறப்பித்த வரலாறு உங்களுக்கு தெரியுமா?
பிராமணியத்தை மட்டுமல்ல நீங்கள் பட்டியிலிடுகிற தேவரியம், கவுண்டரியம், நாயுடுவியம், வன்னியரியம், நாடாரியம் அனைத்தையும் திராவிடர் இயக்கங்கள் எதிர்த்தே நிற்கின்றன. இவர்களெல்லாம் தங்களை மேல் ஜாதி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்களே தவிர, பார்ப்பனர்கள் பார்வையில் சூத்திரர்களே! இவர்கள் புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனைகள். நாங்கள் புலி வேட்டையாடும் அதேவேளையில் பூனைகளின் இடையூறுகளையும் எதிர்கொண்டே வருகிறோம்.
ஆதிக்க சாதிகளால் தலித்துகள் பாதிக்கப்படும்போது பெரியாரிய இயக்கங்கள் தலித்துகளின் பக்கமே கைகோர்க்கிறது.
இன்று பிராமணியத்தை எதிர்ப்பது இனத்துவேஷம் என்று எழுதும் உங்கள் எழுதுகோல், நாளை தேவரியம், கவுண்டரியம், நாயுடுவியம், நாடாரியம் போன்றவற்றை எதிர்க்கும் எங்களை பார்த்து ”ஜாதிதுவேஷம்” என்று எழுதுவதற்கு கொஞ்சம் கூட கூச்சப்படாது என்பதை நாங்கள் அறிவோம்.
திராவிடர் இயக்கங்களின் இஸ்லாமியர்களுடனான உறவு பற்றிய புரிதல் எப்படிப்பட்டது என்பது வரலாற்றை முழுமையாகப் படித்துப் பாருங்கள்! புரியும்.
இத்தனை முஸ்லிம் கட்சிகள் பெருகிவிட்டதே என்ற உங்களின் ”நுட்பமான” வேதனை எங்களுக்கு புரிகிறது. ஆனால் இது திராவிடர் இயக்கத்தின் மீதான நம்பிக்கை குறைவால் ஏற்பட்டதல்ல.  பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு நம்பிக்கையிழந்த இஸ்லாமிய இளைஞர்கள் புதிய வீரியம்மிக்க இயக்கங்களை தேடுகிறார்கள். இது திராவிடர் இயக்கத்தின் மீதுள்ள அதிருப்தியல்ல;
இந்திய அரசு, பார்ப்பனிய நிர்வாக இயந்திரம், நீதித்துறை, ஊடகம் என இந்த சமூக அமைப்பின் மீது ஏற்பட்ட அதிருப்தி.
தொன்னூறுகளுக்கு முன்பு வரை வஹாபியத்தின் பக்கம் இங்குள்ள இஸ்லாமியர்கள் ஈர்க்கப்படவில்லையே? இந்துத்துவம் வளர்வதற்கான சூழலை வஹாபியம் உருவாக்குகிறதா? அல்லது வஹாபியம் வளர்வதற்கான சூழலை இந்துத்துவம் உருவாக்குகிறதா? இந்த கேள்விக்கு சரியான விடை தெரிந்தும் தவறான விடையை தாங்கள் எழுதுவது அறியாமை நிலையல்ல…
அறம் பிறழ்ந்த நிலை!
இஸ்லாமியர்களை ஆதரித்தால், இவர்கள் இந்து மதத்தை மட்டும்தான் விமர்சிப்பார்கள் என்பதும், இஸ்லாத்தை பகுத்தறிவு நோக்கில் விமர்சித்தால் இஸ்லாமியர்களை அரவணைக்க வேண்டும் என்பதும், தலித்துகளின் உரிமைக்குரலை எதிரொலித்தால் பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்று தூற்றுவதும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடும் போது, தலித்துகளை புறக்கணிக்காதீர்கள் என்று அறிவுரை கூறுவதும் நாங்கள் முன்பே பலமுறை கேட்டு பழகிய செய்திதான்.
இரண்டு பக்கமும் அடி வாங்கினாலும் கிழிந்து போக திராவிடர் இயக்கம் மத்தளமல்ல, இடிதாங்கும் இரும்புக்கோட்டை !
எழுபது ஆண்டுகளுக்கு முன்பே பறை, மாட்டுக்கறி, பவுத்தம், இராமாயணம், பகவத்கீதை என அனைத்து விடயங்களையும் அலசி ஆராய்ந்து நுணுக்கமான எதிர் வினையாற்றியவர்கள் இந்தியாவில் இருவர்தான்… ஒருவர் – பெரியார், இன்னொருவர் – அம்பேத்கார். இருவரது சிந்தனைகளையும் உள்வாங்கித்தான் திராவிடர் இயக்கம் களத்தில் நிற்கிறது.
இன்று உங்களைப்போன்ற பலர் அடுத்த நூற்றாண்டுக்கான திராவிடர் இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதை வரவேற்கிறோம். ஆனால்… இத்தனை நூற்றாண்டுகளில் காலத்திற்கு தகுந்தவாறு பார்ப்பனீயம் தனது வர்ணாஸ்ரம தர்மத்தை மாற்றிக் கொள்ளவேண்டுமென்றோ, சக மனிதர்களை சமமாக நடத்த வேண்டுமென்றோ, மற்ற சமூக மக்களை எப்படி உள்ளிழுத்து கொள்வது என்றோ, மனுநீதியால் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு எப்படி பரிகாரம் தேடவேண்டுமென்றோ, ஜாதிய அடுக்கு முறையை எப்படித் தகர்க்க வேண்டுமென்றோ பார்ப்பன சமூகத்தில் பிறந்த ஒருவர் கூட தங்கள் சமூகத்திற்கு அறிவுரை கூறவோ, அதற்காக அமைப்புகளை உருவாக்கிடவோ, களப்பணி ஆற்றவோ முன்வராதது மட்டுமல்ல; தங்களது அறிவு – ஆற்றல் அனைத்தையும் இந்த கொடுமைகளை நியாயப்படுத்துவதற்கே பயன்படுத்தி வருவதையும் காணும்போது…
இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இதே வீச்சுடன் திராவிடர் இயக்கம் இயங்க வேண்டும் என்ற தேவையை எங்களுக்கு உணர்த்தியிருக்கிறது.
சீனி. விடுதலை அரசு, தந்தை பெரியார் திராவிடர் கழக பிரச்சார செயலாளர்.

கருத்துகள் இல்லை: