வியாழன், 29 நவம்பர், 2018

கனிமொழி :அந்த அடுப்பு அணையவே கூடாது!' - புயல் பாதித்த பகுதிகளில் ....


அந்த அடுப்பு அணையவே கூடாது!' - 'கஜா' பாதிப்புக்குக் கரம் கொடுத்த
கனிமொழி
'அங்கு தயாராகும் உணவுகளை அக்கம் பக்கம் கிராமங்களுக்குக் கொண்டு போய்விடுங்கள். அந்த மக்கள் கையேந்துவதற்கு முன்னதாகவே உணவைக் கொடுத்துவிடுங்கள்' எனக் கூறிவிட்டார் கனிமொழி.
'கஜா' புயல் பாதிப்புப் பகுதிகளில் அரசின் நிவாரண உதவிகளைவிட, கனிமொழி செய்த செயலைப் பாராட்டுகின்றனர் பேராவூரணி பகுதி மக்கள்.
"தினமும் மூன்றாயிரம் பேருக்கு உணவு வசதி செய்து கொடுத்திருக்கிறார் கனிமொழி. இதை வெளியில் சொல்வதைக்கூட அவர் விரும்பவில்லை" எனவும் அம்மக்கள் நெகிழ்கின்றனர்.
காவிரி டெல்டா பகுதிகளை ஒட்டுமொத்தமாகச் சிதைத்துவிட்டது 'கஜா' புயலின் கோர தாண்டவம். வீடுகள், தென்னை மரங்களை இழந்து வீதிகளில் உணவுக்காகக் காத்திருக்கின்றனர் சோறுபடைத்த சோழநாட்டு மக்கள்.
புயல் குறித்து மக்களுக்கு அலர்ட் கொடுத்த அரசாங்கம், பாதிப்புகளுக்குப் பிறகான தேவைகளைக் கணிப்பதில் தவறிவிட்டது.
இதனால், ஆங்காங்கே மக்களின் கோபத்துக்கு ஆளாகி வருகின்றனர் தமிழக அமைச்சர்கள்.
குறிப்பாக, 'அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் சொந்த ஊரான தலைஞாயிறு பகுதியிலேயே மக்களுக்கு சரியான உணவும் குடிநீரும் கிடைக்காத அவலநிலை இருப்பதாக' வேதனை தெரிவித்தார் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
தற்போது புயல் பாதித்த பகுதிகளில் மத்திய அரசின் குழுவும் விரிவாக ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளில் கனிமொழி செய்த உதவி குறித்து நெகிழ்கின்றனர் டெல்டா பகுதி மக்கள்.
கஜா புயல் பாதிப்பால் வீடுகள் உருக்குலைந்து போன அன்றே கனிமொழியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் இப்பகுதி மக்கள். 'எல்லாம் போயிருச்சும்மா...' எனக் கதறியழுதவர்களைத் தேற்றிய கனிமொழி, அந்தப் பகுதிக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் ஏற்பாடு செய்திருக்கிறார். இதைப் பற்றி நம்மிடம் பேசிய பேராவூரணி பகுதி இளைஞர்கள், 'கஜா' புயல் பாதிப்புக்கு மறுநாள் இந்தப் பகுதிக்கு சில பொருள்களை லாரிகளில் அனுப்பி வைத்திருந்தார் கனிமொழி. அந்த லாரிகளில் 10 ஆயிரம் கிலோ அரிசி, 5 ஆயிரம் கிலோ பருப்பு, 5 ஆயிரம் கிலோ எண்ணெய் எனக் கணக்கில்லாமல் இருந்தன.
எங்களால் அவரது உதவியை மறக்க முடியாததால்தான் இதைச் சொல்கிறோம். திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள தங்கவேல் திருமண மண்டபத்தில் சமையல் செய்வதற்கான வேலைகள் நடந்தன. பொருள்கள் சரியாக வந்து சேர்ந்துவிட்டதை உறுதிப்படுத்திய கனிமொழி, '
இந்தப் பணிகளை விவசாயிகளிடம் ஒப்படைத்துவிடுங்கள். அந்த அடுப்பு அணையவே கூடாது. எத்தனை பேர் வந்தாலும் சோறு போட்டுக் கொண்டே இருங்கள்' எனக் கூறிவிட்டார். கடந்த எட்டு நாள்களாகக் கனிமொழியின் உதவியால்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இதன்பிறகும், வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்குத் தார்பாலின் சீட்டுகளையும் அவர் அனுப்பி வைத்தார்" என்றவர்கள்,
'இந்தப் பகுதிகளுக்குப் பலமுறை வந்திருக்கிறார் கனிமொழி. 'கேரளாவை விஞ்சிவிட்டது இந்த இடம்; அந்தளவுக்கு தென்னை மரங்கள் செழிப்பாக வளர்ந்திருக்கின்றன' என நெகிழ்ந்திருக்கிறார்.
புயல் பாதிப்பால் அனைத்து மரங்களும் வீழ்ந்துவிட்டன. இந்த வேதனையைத் தாங்க முடியாமல்தான், அந்த மக்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார் கனிமொழி. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 3 ஆயிரம் பேருக்கு காய்கறி சாப்பாடு வழங்கப்பட்டது. அடுத்தநாள் 2 ஆயிரம் பேருக்கு சாப்பாடு எனத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். அங்கு தயாராகும் உணவுகளை அக்கம் பக்கம் கிராமங்களுக்குக் கொண்டு போய்விடுங்கள்.
அந்த மக்கள் கையேந்துவதற்கு முன்னதாகவே உணவைக் கொடுத்துவிடுங்கள்' எனக் கூறிவிட்டார் கனிமொழி. அதனை ஏற்று பேராவூரணியைச் சுற்றியிருக்கும் திருச்சிற்றம்பலம், மடத்திக்காடு, உப்பூர்தி, வலசைக்காடு, நரியங்காடு, ஆணைக்காடு, ராமகிருஷ்ணாபுரம், வலசேரிக்காடு, கூளையன் தெரு, கீழப்புனல்வாசல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது" என்கின்றனர் நெகிழ்ச்சியோடு...  .பேராவூரணிஸ்ரீ

கருத்துகள் இல்லை: