புதன், 28 நவம்பர், 2018

மலேசியா: மாரியம்மன் கோயிலில் மலேகாரர்கள் தாக்குதல்.. விடியோ

மலேசியா மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் - 21 பேர் கைதுமாலைமலர் : மலேசியா நாட்டில் உள்ள ஸ்ரீமஹா மாரியம்மன் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த பக்தர்களை தாக்கி காயப்படுத்திய சம்பவத்தில் 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோலாலம்பூர்: மலேசியா நாட்டின் செலங்கோர் மாநிலத்தில் உள்ள சுபாங் ஜெயா பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமஹா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது..
மலேசியா: மாரியம்மன் கோயிலில் தாக்குதல்! இந்த கோவிலை வேறு இடத்துக்கு மாற்றுமாறும் அதற்கான  இழப்பீட்டு தொகை அளிக்க தயாராக உள்ளதாகவும் அப்பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்று வலியுறுத்தி இருந்தது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை ஸ்ரீமஹா முத்து மாரியம்மன் கோவில் பக்தர்கள் வழிபாடு செய்துகொண்டிருந்தபோது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது. பூர்வீக மலாய் மக்களான அவர்கள் கோவிலுக்குள் இருந்த அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு மிரட்டி, கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் பக்தர்கள் சிலருக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்கு வழக்கு தொடர்ந்திருக்கும் கட்டுமான நிறுவனம்தான் காரணம் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்ள தைரியமின்றி அந்த நிறுவனத்தினர் கூலிப்படையை ஏவி இந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதைதொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இன்று காலை சிலர் அந்த கட்டுமான நிறுவன அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அங்கு நின்றிருந்த இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் மதமோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இந்நிலையில், இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செலாங்கோர் நகர போலீஸ் உயரதிகாரி மஸ்லான் மன்சூர் தெரிவித்துள்ளார். கலவரத்தை கட்டுப்படுத்த அப்பகுதியில் சுமார் 700 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மின்னம்பலம் : மலேசியாவிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய 21 பேரை கைது செய்தனர் போலீசார்.
மலேசியாவிலுள்ள செலாங்கோர் மாநிலம் சுபாங் ஜெயா பகுதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயில் அமைந்துள்ள இடம் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இடம் என்றும், அந்த நிறுவனம் கோயிலை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த செலாங்கோர் நீதிமன்றம், கோயிலை இடமாற்றம் செய்ய ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து, அக்கோயில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்தக் கோயிலை அகற்றுவதற்கு மலாய் மக்கள் முயன்றபோது, அதற்கு அங்குள்ள இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில், சில நபர்கள் அந்தப் பகுதியில் இருந்த சில வாகனங்களைத் தீ வைத்து எரித்தனர். போலீசார் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டதால் அந்த இடத்தில் பதற்றம் நிலவியது. 18 வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்தன. இதனால் உடனடியாக அந்தப் பகுதியில் 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் செலாங்கோர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் பின்னணி
செலாங்கோர் மகா மாரியம்மன் கோயில் 1891ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 127 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கோயில் இடத்தை ஒன்சிட்டி நிறுவனம் வாங்கியதால், 2007ஆம் ஆண்டு கோயிலை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 2014ஆம் ஆண்டு கோயிலை வேறு இடத்துக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கான நிதியை ஒன்சிட்டி நிறுவனம் அளித்தது. கடந்த 22ஆம் தேதியில் இருந்து இக்கோயிலை இடமாற்றம் செய்ய மலாய் குழுவினர் முயற்சி செய்து வந்தனர். இதனால்தான் அங்கு கலவரம் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: