புதன், 12 செப்டம்பர், 2018

கோசாலை மாடுகளை அடிமாட்டு விலைக்கு கொள்ளை அடிக்கும் கும்பல் .. பசு பாதுகாவலர்களும் உடந்தை?

விகடன் :அடிமாட்டு விலைக்கு மாடுகளைக் கேட்டு மிரட்டுகிறார்கள்!" தி.ஜெயப்பிரகாஷ்
கோசாலை பெயரால் கொள்ளை கைவிடப்பட்ட மாடுகளுக்கும், கசாப்பு கடைக்குச் செல்லும் அபாயத்தில் உள்ள மாடுகளுக்கும் மறுவாழ்வு தரும் இடம்தான் கோசாலை. ஆனால், விவசாயிகளிடம் அடாவடி செய்து, நாட்டு மாடுகளை அபகரிக்கும் முயற்சியில் சில தனியார் கோசாலையினர் ஈடுபடுவதாகப் புகார்கள் குவிகின்றன. சமீபத்தில் அப்படியொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது திருப்பூர் மாவட்டம் காடையூரில் இயங்கிவரும் கொங்கா கோசாலை நிறுவனம்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே வளையல்காரன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் அருண்ராஜா. சுமார் 100 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரரான இவர், 80-க்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை வளர்த்துவருகிறார். விவசாயம் பொய்த்துப்போனதால், சமீபகாலமாக மாடுகளுக்குத் தீவனம் வாங்கச் சிரமப்பட்டிருக்கிறார். இதை உள்ளூர்க்காரர்கள் வாயிலாகத் தெரிந்துகொண்ட கொங்கா கோசாலை நிறுவனர் சிவக்குமார், அடிமாட்டு விலைக்கு அத்தனை மாடுகளையும் தந்துவிடுமாறு அருண்ராஜாவை மிரட்டியிருக்கிறார்.

அருண்ராஜா இதை விவசாய அமைப்புகளிடம் கொண்டுபோக, தற்போது பிரச்னை கொங்கு வட்டாரம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், கோவை விலங்குகள் நல வாரிய (Animal Welfare Board of India) அதிகாரிகள் சிலர், அருண்ராஜாவின் தோட்டத்துக்குச் சென்று மாடுகளை ஆய்வுசெய்தது, பிரச்னையை மேலும் அதிகரித்துள்ளது.

அருண்ராஜாவைச் சந்தித்துப் பேசினோம். “எங்க பரம்பரைக்கே விவசாயம்தான் தொழில். நாட்டு மாடு வளர்ப்பில் பெயரெடுத்த குடும்பம். உயர்ரக காங்கேயம் இனக் காளைகள் எங்கிட்ட இருக்கு. காளைகளைப் பல கண்காட்சிகளுக்குக் கூட்டிட்டுப்போய் பரிசுகளும் ஜெயிச்சிருக்கேன். என் வயித்துக்கு இல்லாட்டியும், எப்பாடு பட்டாவது மாடு கன்னுகளுக்கு வயித்தை நெரப்பிட்டுத்தான் இருக்கேன். அந்த கொங்கா கோசாலைகாரர்களுக்கு என் மாடுகள்மேல எப்பவுமே ஒரு கண்ணு.

எப்படியாவது எங்கிட்ட இருக்கும் மாடுகளை எல்லாம் அடிமாட்டு விலைக்குப் பிடுங்கிறணும்னு பலதடவை முயற்சி பண்ணி பார்த்தாங்க. முடியலை. இப்போ பி.ஜே.பி-யைச் சேர்ந்த சிலரைக் கூட்டிட்டு வந்து, ‘உன் மாடுகளை தரலைன்னா உன்னையும் உன் அம்மாவையும் கொன்னுபோடுவோம்’னு மிரட்டுறாங்க.

என் மாடுகளைக் காப்பாத்தணும்னு அக்கறை இருந்தா, தீவனம் வாங்கித் தரலாமே. அதைவிட்டுட்டு மொத்த மாட்டையும் எங்கிட்ட கொடுத்துருன்னு மிரட்டுறது நியாயமா?’’ என்று மிரட்சியுடன் சொல்கிறார் அருண்ராஜா.

இதுகுறித்துப் பேசிய காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திகேய சிவசேனாபதி, ‘‘விலங்குகள் நல வாரியம் என்பது மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய ஓர் அமைப்பு. விவசாயிகளையும், அவர்கள் வளர்க்கும் கால்நடைகளையும் பார்வையிட்டு உத்தரவு போடுவதற்கான எந்தவித அதிகாரமும் அவர்களுக்குக் கிடையாது. இது எதிர்காலத்தில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொன்றுக்கும் உத்தரவுபோட ஆரம்பித்தால், கிராமத்தில் மாடு வளர்க்கும் விவசாயிகளின் நிலைமை என்னாவது?’’ என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.


 இந்த மிரட்டல் குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, கோசாலை என்ற பெயரில் பெரும் மோசடியும் நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசினார், ஸ்காட்லாந்தில் பிசினஸ் செய்துவரும் சிவக்குமார் கந்தசாமி. ‘‘நான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், நம் ஊர் விவசாயத்துக்காகவும், கால்நடைகளுக்காகவும் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறேன். நான் காங்கேயம் காளை ஒன்றை விலைக்கு வாங்கியபோது, கொங்கா கோசாலையின் சிவக்குமாருடன் நட்பு ஏற்பட்டது. அவரது கோசாலைக்காக என்னிடம் பலமுறை நன்கொடை வாங்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில், அவர்மீது சந்தேகம் வந்ததால், கோசாலையின் கணக்கைக் காட்டுமாறு கேட்டேன். அதனால், கோபமான சிவக்குமார், என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிவந்தார்.

இவரிடம் சிக்கி என் நிம்மதியை இழந்ததுதான் மிச்சம்” என்றார். ஏர்முனை இளைஞர் அணியைச் சேர்ந்த விவசாயி சுரேஷ், ‘‘இங்கு உள்ள கோசாலையில் உங்கள் பெயரில் ஒரு மாடு வளர்க்கப்படும். அதற்கான தீவனச் செலவுகளை அனுப்ப லாம் என்று சொல்லி, ஒரு மாட்டின் போட்டோ மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள்.

ஆன்மிகத்தில் ஆர்வம் இருந்தால், பிரத்யேகமாகக் கோ பூஜைகளும் செய்யப்படும். அதற்குத் தனிக் கட்டணம். ஒரே ஒரு மாட்டைக் காட்டி, பலரிடம் பணம் வசூலிப்பதும் நடக்கிறது. மாட்டு இனங்களைக் காக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் கோசாலைகள் செயல்படுகின்றன. ஆனால், கோசாலைகள் என்ற போர்வையில், வெளிநாட்டுவாழ் தமிழர்களை ஏமாற்றிப் பண மோசடி நடக்கிறது’’ என்றார்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான ‘கொங்கா கோசாலை’யின் நிறுவனர் சிவக்குமாரிடம் பேசினோம். “நான் அருண்ராஜாவிடம் மரியாதையுடன் பேசி, நல்ல விலைக்கு மாடுகளைக் கொடுங்கள் என்றுதான் கேட்டேன். அவரை மிரட்டியதாகத் தவறாகச் சித்திரித்துவிட்டார்கள்.

அமெரிக்க வேலையை உதறித் தள்ளிவிட்டு, இங்குள்ள விவசாயிகளுக்குச் சேவைசெய்ய வந்தவன் நான். பழையகோட்டை மாட்டுச் சந்தையை நாங்கள் நடத்துவது பல இடைத்தரகர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. அவர்கள்தான் எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள்’’ என்றார். பசுப் பாதுகாவலர்கள் எங்கே?

கருத்துகள் இல்லை: