செவ்வாய், 11 செப்டம்பர், 2018

தலித் மாணவர்கள் மீது இதர சமுக மாணவர்கள் தாக்குதல். கோவில்பட்டி ..

தலித் மாணவர்கள் மீது தாக்குதல்!மின்னம்பலம் : கோவில்பட்டி அருகே பள்ளி வளாகத்தில் தலித் மாணவர்கள் மீது சக மாணவர்கள் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அரசு உதவி பெறும் ராஜா மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்துவருகின்றனர். ராஜா மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தங்களுடன் படிக்கும் மாணவர்களின் சாதியைக் கேட்டு தெரிந்துகொண்டனர். எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த எத்திலியப்பன், நாயக்கன்பட்டி கிராமங்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் படித்துவருகின்றனர்.
அந்தப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் சீனிவாசன், அருண், ராஜேஸ் மற்றும் விஜயபால் ஆகிய நான்கு பேரும் தலித் மாணவர்கள்.
இதனால், மற்ற சமூகத்தைச் சேர்ந்த சக மாணவர்கள் இவர்களைத் தாக்கியுள்ளனர். காயமடைந்த நான்கு மாணவர்களும் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாதி ரீதியாக மாணவர்கள் இரு பிரிவினராகச் செயல்பட்டு வந்த நிலையில், ஒதுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்ததால் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட தலித் மாணவர்கள் புகார் கூறியுள்ளனர். நீங்கள் எந்தச் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று விசாரித்ததாகவும், சாதியைத் தெரிந்துகொண்டு அடிக்கடி தங்களிடம் பிரச்சினை செய்ததாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் மற்றும் வட்டாட்சியர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு, இரு தரப்பு பெற்றோர்களிடமும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அண்மையில் கோவில்பட்டியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் தலித் மாணவர்களுடன் பேசியதால், 11ஆம் வகுப்பு மாணவர் தாக்கப்பட்டார். இந்நிலையில், கோவில்பட்டியில் தலித் மாணவர்களுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

கருத்துகள் இல்லை: