வியாழன், 13 செப்டம்பர், 2018

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கு-

குற்றச்சாட்டு
tamil.oneindia.com - veerakumaran::
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் வசம் உள்ள, நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு வரும் திங்கள்கிழமை விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். கிட்டத்தட்ட 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. எனவே சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று நேற்று ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கூடுதல் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.



குற்றச்சாட்டு

இந்த வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, முன்னிலையில் நடைபெற்றது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகினார். எடப்பாடி பழனிச்சாமி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு திட்ட மதிப்பை விட கூடுதல் செலவில் ஒப்பந்த பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் வாதிட்டார்.


எடப்பாடி கையில் அதிகாரம்

எடப்பாடி கையில் அதிகாரம்

உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படக் கூடியது இந்த நெடுஞ்சாலை பணிகள். இருப்பினும், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறை என்பது, முதல்வர் பழனிசாமி வசமுள்ளது. இதை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையும் முதல்வரின் அதிகாரத்திற்கு கீழேதான் உள்ளது. லஞ்ச ஒழிப்பு பிரிவில் உள்ள அதிகாரிகளை மாற்றுவது, புதிதாக நியமிப்பது உள்ளிட்ட உத்தரவுகளை எடப்பாடி பழனிச்சாமி செய்ய முடியும்.



சிறப்பு புலனாய்வு குழு

எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் அதில் நியாயம் கிடைக்காது. தனது தலைமையில் உள்ள முதல்வர் மீது எப்படி, எதிரான அறிக்கையை அளிப்பார்கள் என்று திமுக வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். எனவே, சென்னை உயர் நீதிமன்றமே ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, அதை உயர் நீதிமன்றமே கண்காணிக்க வேண்டும் என்று வாதிட்டார்.



அரசு தரப்பு

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் இதற்கு பதில் அளிக்கையில் "1991 ஆம் ஆண்டில் இருந்தே இந்த ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எந்த அரசு வந்தாலும் இவர்கள் தான் மிகப் பெரிய ஒப்பந்த பணிகளை ஏற்று நடத்துவார்கள். உறவினர்கள் என்பதற்காக பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தகுதியே இல்லாதவர்கள் என்றும் கூறுவது ஏற்புடையது அல்ல" என்றார்.



எப்போதெல்லாம், யாரிடமெல்லாம் விசாரணை

மேலும், உலக வங்கியே நேரடியாக இந்த நெடுஞ்சாலை பணிகளை கண்காணித்து வருகிறது. எனவே முறைகேடு நடக்கவில்லை என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, எப்போதெல்லாம் விசாரணை நடைபெற்றது, யாரிடமெல்லாம் விசாரணை நடைபெற்றது என்ற விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார். மேலும், அத்துறையில் உள்ள நிபுணர் குழு அறிக்கை ஏதேனும் தாக்கல் செய்துள்ளதா, என்ற கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக விரிவான அறிக்கையை வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: