சனி, 15 செப்டம்பர், 2018

18 எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கு .. ஆட்சிக்கு ஆபத்து?

MLA,எம்.எல்.ஏ.,தகுதி நீக்க வழக்கு,அடுத்த வாரம்,தீர்ப்பு?
தினமலர் :
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகலாம் எனஆளும் கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் பழனிசாமியை மாற்றக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்து பதவிகளை பறித்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார்.>
இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. 'தகுதி நீக்கம் செல்லும்' என தலைமை நீதிபதியும் 'செல்லாது' என மற்றொரு நீதிபதியும் தீர்ப்பு கூறினர்.


அதைத் தொடர்ந்து இவ்வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் ஜூலை 23ல் விசாரணையை துவக்கினார். அரசு தரப்பு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள்
தரப்பு, தேர்தல் கமிஷன் தரப்பு மற்றும் சபாநாயகர் தரப்பு வாதம் ஆக., 31ல் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல், வழக்கின் தீர்ப்பை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

இந்த தீர்ப்பு எப்போது வெளியாகும் என அனைத்து கட்சியினரும் ஆவலோடு எதிர்பார்த்தபடி உள்ளனர். மூன்றாவது நீதிபதி வழங்கும் தீர்ப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

'சபாநாயகர் செய்தது சரி' என தீர்ப்பளித்தால் அதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.,க்களும் உச்ச நீதிமன்றம் செல்ல வழி பிறக்கும். அதை அவர்கள் விரும்பாவிட்டால் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும். அதில் வெற்றி
பெற்றாக வேண்டிய கட்டாயம், ஆளும் கட்சிக்கு ஏற்படும்.

'சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லாது' என தீர்ப்பு வந்தால் 18 பேரும் மீண்டும் எம்.எல்.ஏ.,க்களாகி விடுவர். தினகரன் ஆதரவு பெருகி விடும். அதிலிருந்து தப்பிக்க உச்ச நீதிமன்றம் சென்று மூன்றாவது நீதிபதி தீர்ப்புக்கு தடையுத்தரவு பெற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படும்.

இதற்கிடையில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டால், ஆட்சி கவிழும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக ஆளும் கட்சியினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் 18 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கின் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்தபடி
உள்ளனர். இந்நிலையில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகலாம் என ஆளும் கட்சி வட்டாரத்தில் எதிர் பார்க்கப்படுகிறது.
சபாநாயகருடன் முதல்வர் ஆலோசனை!
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னையில் நேற்று மதியம் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சபாநாயகர் தனபாலை அவரது அறையில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது 18 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் தீர்ப்பு பாதகமாக வந்தால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும். எனவே அது குறித்து ஆலோசித்துள்ளனர். அத்துடன், 'கேரளா வெள்ள நிவாரணத்திற்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்குவர்' என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் பல எம்.எல்.ஏ.,க்கள், இன்னமும் அதற்கு ஒப்புதல் கடிதம் வழங்காமல் உள்ளனர். விரைவாக கடிதம் பெற்று நிதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: