வியாழன், 13 செப்டம்பர், 2018

குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்

அபிராமி விவகாரத்தில் இருக்கும் அக்கறை ஆர்வம், வறுமை தாளாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை கொண்ட சம்பவங்களின் போது இல்லாமல் போனதன் காரணமென்ன?
vinavu.com/- வில்லவன்: <: b="">குன்றத்தூர் அபிராமி எனும் இளம்பெண் தனது இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தன் காதலரோடு வாழும் நோக்கத்தோடு தப்பி ஓடிய செய்தி கடந்த 10 நாட்களாக சமூக ஊடகங்களில் பல வடிவங்களில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவருக்கு பிரியாணி பிடிக்கும் என்பது துவங்கி அவர் செய்த டப்ஸ்மாஷ் வீடியோக்கள் எல்லாமே கிரிமினல் கன்ஸ்பைரசி பட்டியலில் சேர்க்கப்பட்டாயிற்று. அவரது ஒப்பனைகளே அவர் தரத்தைக் காட்டுவதாக சொல்கிறார் ஒருவர். ’சும்மா இருந்தவளுக்கு வண்டி வாங்கிக் கொடுத்த ஊட்டுக்காரனை சொல்லணும்’ என்கிறார் இன்னொருவர். பலரது கருத்துக்களைப் பார்க்கையில் அவர்கள் ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைக்காக காத்திருந்தார்களோ என எண்ண வைக்கிறது. ஒரு தாய் தமது இரு பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தப்பிவிட்டார் எனும் செய்தி சீரணிக்க இயலாததாக இருந்தாலும் எனக்கு அதில் எந்தக் கலாச்சார அதிர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக நமது மிகை எதிர்வினையின் மீது கொஞ்சம் சலிப்பும் பயமும் மேலிடுகிறது.


    மனிதகுல வரலாற்றில் திருமணத்துக்கு வெளியேயான காதலும் பாலுறவும் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. ”கணவனே கண்கண்ட தெய்வம்” போன்ற அறிவுரைகள் ”விட்டுட்டு போயிடாதடீ” எனும் மன்றாடலாகவும் இருந்திருக்கக்கூடும். சில சமூகங்களில் மாதவிலக்கின்போது பெண்கள் வீட்டுக்கு வெளியே தனி குடிசையில் அமர வேண்டும் என்பது கட்டாயம். அது அவர்களது மாதவிலக்கை மற்றவர்கள் கண்காணிக்கும் ஒரு ஏற்பாடு. விதவைக்கு மொட்டையடிப்பதும், வெள்ளை சீலை உடுத்துவதும் அவர்களை தனித்து அடையாளப்படுத்தத்தான். அழகை குலைத்து வீட்டைவிட்டு ஓடாமல் காப்பாற்ற அல்லது ஓடினால் எளிதாக கண்டுபிடிக்கவும் இந்த ஏற்பாடு இருந்திருக்கலாம். அரசர்கள் போருக்கு செல்கையில் ராணிகளுக்கு பூட்டு போட்ட இரும்பு உள்ளாடை அணிவித்த கதைகள் உண்டு. சுரங்கம் தோண்டி இரகசியக் காதலரை சந்தித்த ராணி வடநாட்டில் இருந்திருக்கிறார். கள்ளக்காதல் எனும் பொருள்கொண்ட வார்த்தைகள் ஆங்கிலத்தில் இல்லை, அங்கே அதனை எக்ஸ்ட்ரா மெரைட்டல் அஃபேர் எனும் அதிர்ச்சியூட்டாத வார்த்தையால்தான் குறிப்பிடுகிறார்கள்.


    குன்றத்தூர் அபிராமி, அவரது  குழந்தைகள்.
    அம்மாவோ அப்பாவோ பிள்ளைகளைக் கொன்றுவிடும் செய்தியும் நமக்கு புதிதல்ல. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. நடவடிக்கைகளுக்குப் பிறகு அவை வாரம் இரு முறையேனும் கேள்விப்படும் செய்தியாகிவிட்டது. வறுமை தாளாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வோர், மனைவியோடு சண்டைபோட்டு அந்த ஆத்திரத்தில் பிள்ளைகளைக் கொன்ற அப்பாக்கள், காதலுக்கு இடையூறாக உள்ள குழந்தைகளைக் கொன்ற பெற்றோர்கள் அல்லது கணவனையோ மனைவியையோ கொன்றவர்கள் என எல்லா வகைமாதிரி குடும்பத்துக்குள்ளேயான கொலைகளும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு காலத்தில் ரியல் எஸ்டேட் கொலைகள்தான் அதிகம் நடக்கும். இப்போது உறவுகளுக்குள் நடக்கும் கொலைகள் அந்த இடத்தை பிடித்துவிட்டன.
    பிறகு ஏன் அபிராமி பற்றிய செய்தி பற்றியெரியும் பிரச்சினையானது?
    அதன் பின்னிருக்கும் முக்கியமான காரணி, அபிராமியின் செயலில் உள்ள சுவாரஸ்யம். வெகுமக்கள் மனதில் இருக்கும் கலாச்சார நீதிபதியை அச்செய்தி உசுப்புகிறது. வறுமையில் பிள்ளைகளை கொன்றவள் கதையில் சுவாரஸ்யம் ஏதும் இல்லை. உங்கள் மன நீதிபதியால் அதற்கு ஒரு எளிய தீர்ப்பு சொல்ல முடியாது (அரசாங்கத்தை பகைத்துக்கொள்ள முடியாதில்லையா?) சில ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவர் தன்னை தேவையின்றி சந்தேகிப்பது பற்றி தோழி ஒருவர் சங்கடப்பட்டுக் கொண்டார். அவர் கணவர் இவரது சம்பளத்தை பெரிதும் நம்பியிருப்பவர்.
    ”சந்தேகப்பட்டு என்ன செய்கிறார்?” என்று கேட்டேன். ”அடிக்கவோ திட்டவோ மாட்டாரு. ஆனா யாருக்கோ சொல்ற மாதிரி பேஸ்புக்ல எனக்கு அட்வைஸ் பண்ணுவாரு. மத்த பொம்பளைங்கள திட்டுறமாதிரி என்னை குத்திக்காட்டுவார்” என்றார். (அவரது ஆடைத்தெரிவு ஏனைய ஊழியர்களுடன் சிரித்து பேசுவது மாதிரியான செயல்களை – “தேவடியாளுங்க அடுத்தவங்களை பார்க்க வைக்குற மாதிரி மேக்கப் போடுவாங்க, வேலைக்கு போற பொம்பளைங்க ஏன் அப்படி போகனும்?” இது அவரது வசனங்களின் ஒரு சாம்பிள்).
    இந்த வகை வாட்சப்தாசர்கள், சமூகம் சமீபத்தில்தான் கெட்டழிந்துவிட்டது எனத் தீர்மானமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமது கருத்து சரி என நிரூபிக்கும் ஆதாரம் தேவைப்படுகிறது. அபிராமி செய்தி அவர்களது தீர்மானங்களை உரத்து சொல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.


    பலரது கருத்துக்களைப் பார்க்கையில் அவர்கள் ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைக்காக காத்திருந்தார்களோ என எண்ண வைக்கிறது.
    மேலும் நமக்கு தினசரி வாழ்வில் சுவாரஸ்யம் மிக்க பொழுதுபோக்குகள் குறைவாக இருக்கின்றன. ஒரு காலத்தில் டி.வி. சீரியல்கள் அதனை நிறைவேற்றின. அதில் கள்ளக்காதல், கொலை, கடத்தல் என எல்லாமே வந்தன (சித்தி தொடர் உச்சத்தில் இருந்த போது சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் ரங்கநாதன் தெருவில் கூட்டம் கணிசமாக குறைந்திருக்கும்). பிறகு நெடுந்தொடர்கள் போரடிக்க ஆரம்பித்த வேளையில் சொல்வதெல்லாம் உண்மை வகையறா நிஜவாழ்வு கள்ளக்காதல், கொலை போன்றவை அவ்விடத்தை ஆக்கிரமித்தன. சும்மா கதை சொல்வது எத்தனை நாள் தாங்கும்? அடுத்து 10 பேரை ஒன்றாக அடைத்து அவர்களது பலவீனங்கள், சண்டைகளை ஒளிபரப்பி வாழ்வை சுவை மிக்கதாக்கினார்கள். ஆனால் அந்த பிக்பாஸும் இப்போது சலிப்புதட்டுவதாக தகவல்.
    ஊடகங்களுக்கோ முக்கியமான அரசியல் சமூக பிரச்சினைகள் பொதுவிவாதமாகாமல் தடுக்க வேண்டிய நிர்பந்தம். ரஃபேல் ஊழலையும் பெட்ரோல் விலையேற்றத்தையும் பெரிதாக்கக்கூடாது. ஆனால் தொழில் ஓடியாக வேண்டும். ஆகவே அபிராமியின் செய்தி அவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு. அதில் பொருந்தாக்காதல் எனும் கிளுகிளுப்பு இருக்கிறது.
    நாம் பார்க்கும் பல விளம்பரங்கள் நம்மை பாலியல் ரீதியாக கிளர்ச்சியூட்டும்படி வடிவமைக்கப்பட்டவையே. இளைஞர்கள்/ மாணவர்கள் பலர் முதலில் சன்னி லியோனி போன்றோரது ஆபாச வீடியோக்களை பார்க்க ஆரம்பித்து அடுத்தகட்டமாக திருட்டுத்தனமான ஸ்கேண்டல் வீடியோக்களையே அதிகம் நாடுகிறார்கள். அது பாலியல் நாட்டத்தில் ஒரு திரில்லை கூடுதலாக சேர்க்கிறது. அதுதான் அபிராமி பற்றிய செய்திகளை பெரிதாக விற்பனையாகவல்ல சரக்காக மாற்றுகிறது. இந்த திரில்தான் திருமணத்துக்கு வெளியேயான காதலின் உடலுறவு நேரத்தை நீட்டிக்கிறது எனவும் அதுவே அந்த உறவின் மீது கூடுதல் போதையேற்படுத்துகிறது என ஒரு உளவியல் பார்வை இருக்கிறது.
    காதல் வயப்படுதல் என்பது ஒரு மிதமான கோகைன் அடிமைத்தனத்துக்கு நிகரானது (குறிப்பு : மூளை பாகமான அமிக்டலாவுக்கு நல்ல – மீடியமான – கள்ளக் காதல் என்றெல்லாம் வகைப்படுத்தத் தெரியாது). கிளுகிளுப்பு, திரில், கடைசியில் ஒரு கலாச்சார பாடம் என பெருந்தொகையான மக்களை வசீகரிக்கும் அம்சங்கள் பல இருப்பதால் அபிராமி பாணி செய்திகள் என்பது காட்சி ஊடகங்களுக்கு ஒரு ஜாக்பாட். அதனால்தான் பல கோணங்களில் தக்க பிண்ணனி இசையோடு அச்செய்தியை இறக்குகிறார்கள்.


    ஊடகங்களின் ‘எக்ஸ்ரே’ ரிப்போட்டுகள்.
    ஆகவே இத்தகைய செய்திகளுக்கு அதிகம் அதிர்ச்சியடைந்து ஆற்றலை வீணாக்காதீர்கள் என்றே நான் பரிந்துரைப்பேன். இது தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும் என கருதினால், அதற்கான வேறு நியாமான காரணிகள் இருக்கின்றன.
    சமூகம் முழுக்க மனிதர்கள் கடுமையான பதற்றத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. உணவு, காதல் – காமம் மற்றும் பதட்டம் (ஸ்ட்ரெஸ்) ஆகியவை நமது நடத்தை மற்றும் முடிவுகளின்மீது பெரும் செல்வாக்கு செலுத்தவல்லவை. பெரும்பான்மை குடும்பங்கள் போதுமான அளவு நேர்மறையான சமூகத் தொடர்புகள் அற்றதாக இருக்கின்றன (நமது சமூக ஊடக அடிமைத்தனத்துக்கு அதுவும் ஒரு காரணம்). அரசியல் காரணங்களால் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக மாறியிருக்கிறது. நவீனத்தை வலியுறுத்தும் விளம்பரங்கள் பழைய கலாச்சாரமே சிறந்தது எனும் வாட்சப் அறிவுரைகள் என முற்றிலும் வேறான இருதுருவ குழப்பங்கள் நம்மை அலைகழிக்கின்றன. இவை எல்லாமே நம் எல்லோரது இயல்பையும் கடுமையாக சிதைக்கின்றன.
      தாங்க இயலாத ஆத்திரத்தில் அல்லது மன அழுத்தத்தில் தமது பிள்ளைகளை கடுமையாக அடித்துவிடுவதாக பல அம்மாக்கள் எங்களிடம் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். பெல்ட்டால் மகனை / மகளை அடிக்கும் அம்மா, மகனை சுடுதண்ணீரில் தள்ளிவிட முயன்ற அம்மா, நான்கு வயது மகளை சுவற்றில் தள்ளிவிட்டு பிறகு அதற்காக அழுத அம்மா என ஏராளமான உதாரணங்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் யாரும் கொடுமைக்காரி அம்மாக்கள் இல்லை. அது அவர்களை நெருக்கும் எண்ணற்ற பிரச்சினைகளின் ஒரு விளைவு. அதனை வெறுமனே அப்பெண்களின் நடத்தைப் பிரச்சினை என கருதினால் நம்மால் ஒரு குழந்தையைக்கூட அடி வாங்குவதில் இருந்து காப்பாற்ற முடியாது.
      திடீரென எழுச்சி பெறும் பக்தி, அதீத சோதிட நம்பிக்கை, தற்கொலைகள், மனநல பிரச்சினைகள் என எழுதி மாளாத அளவுக்கு பிரச்சினைகள் இதனால் உருவாகின்றன. உறவுச்சிக்கல்கள் அந்தப் பட்டியலில் கடைசியாக வரும். ஆனால் அதன் நியூஸ் வேல்யூ ஏனையவற்றைவிட மிக அதிகம் (மனநலம் சார் தேடல்கள் கூகுளில் அதிகம் இருப்பதாக கேள்வி ஆனால் அதன் செய்தி முக்கியத்துவம் குறைவு). ஆகவே அத்தகைய செய்திகள் விரைவாகவும் முழு வீச்சோடும் நம்மை வந்தடைகின்றன. அவற்றை வெறும் கலாச்சார மதிப்பீடுகளைக்கொண்டு பார்ப்பதால் எந்த பலனும் வரப்போவதில்லை. மேற்கத்திய கலாச்சாரம் நம்மை கெடுத்துவிட்டது என்பது பச்சை அயோக்கியத்தனம்.  புதிய தொழில்நுட்பங்கள் பொருந்தாக் காதலுக்கு கொஞ்சம் ஒத்தாசையாக இருக்கிறது என்பதை வேண்டுமானால் ஒத்துக்கொள்ளலாம். ஒருகாலத்தில் இருந்ததாக நம்பிக்கொண்டிருக்கிற ஒழுக்கமான கலாச்சாரம் இங்கே ஒருபோதும் இருந்ததில்லை. பெண்களை ஜாக்கெட்கூட அணியவிடாத கலாச்சாரம் இங்கே இருந்தது. லட்சக்கணக்கான விதவைகளை அனாதையாக காசியில் விட்டுவிட்டு வந்து  கூச்சமில்லாமல் வீட்டில் வம்சவிருத்தி செய்த கலாச்சாரம் இங்கிருந்தது. கணவன் செத்தால் மனைவிக்கு கஞ்சா கொடுத்து நெருப்பில் தள்ளிய கலாச்சாரம் இங்கிருந்தது. அவற்றோடு ஒப்பிடுகையில் சோ கால்டு கள்ளக்காதல் எல்லாம் கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாவதற்கான செய்தியே அல்ல.
      கள்ளக்காதல் பற்றியல்ல பிள்ளைகள் கொல்லப்படுவது பற்றியே நான் கவலைப்படுகிறேன் என சொல்பவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்களுக்கு இருக்கும் கடுமையான மனஅழுத்தம் குறித்துத்தான். சிறார்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை அதுதான். கடுமையான தண்டனைகள் தொடங்கி கூட்டுத் தற்கொலைகள் / கொலைகள் வரை அதன் தாக்கம் பிரம்மாண்டமானது. இந்தவகை மன அழுத்தம் ஒரு தனிநபர் பிரச்சினை அல்ல, அதில் சமூக – பொருளாதார -கலாச்சார – அரசியல் காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றை சீர்செய்ய முயல்வதே ஒரு நாகரீக சமூகத்திற்கு அழகு. யார் கண்டது, அந்த செயல்பாடுகள் கலாச்சார காவலர்களின் கடைசி சமரசமான ஸீரோ கேஷுவாலிட்டி எனும் நிலையை கள்ளக்காதல்களிலும் கொண்டுவரக்கூடும்.
      – வில்லவன்

      கருத்துகள் இல்லை: