செவ்வாய், 11 செப்டம்பர், 2018

ஸ்டாலின் : அடுத்த குறி .. தங்கமணி.. மின் வாரியத்தை போண்டியாக்கி...

ஸ்டாலின் : அடுத்த ‘டார்கெட்’ தங்கமணி
மின்னம்பலம் :மின்சாரத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் காரணமாக, தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திள்ளார்.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் அதிகரித்துள்ளதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிராமப்புறங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டை அமல்படுத்துமாறு தமிழக மின்வாரியத்துக்கு அதிமுக அரசு உத்தரவிட்டிருப்பதாக மன்னார்குடி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா நேற்று (செப்டம்பர் 10) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல்கள், முறைகேடுகள் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே 'அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்' அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மின் பகிர்மான கழகத்தில் தரமற்ற நிலக்கரியை வாங்கி, 12 ஆயிரத்து 250 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு; அதிக விலை கொடுத்து தனியார் கம்பெனிகளிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்ததில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு; உதய் திட்டத்தில் கிடைத்த நிதியை உருப்படியான திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் முறைகேடு; மின்வாரியத்திற்கு எலெக்ட்ரானிக் மீட்டர்கள் கொள்முதல் செய்ததில் “மெகா” ஊழல் என்று ஊழல்களின் அருவருப்பான தேரோட்டம் மின் பகிர்மானக் கழகத்தில் நடைபெற்று, அ.தி.மு.க ஆட்சியில் நிர்வாகம் அடியோடு ஸ்தம்பித்து நிற்கிறது என்று சுட்டிகாட்டியுள்ளார்.
மின் தேவையை சமாளிக்க 'பராமரிப்பு', 'ஃபால்ட்' என்ற போர்வையில் மின்வெட்டுக்களை அமல்படுத்துங்கள் என்று வாய்மொழி உத்தரவு போயிருப்பதாகவும், அதை முன்னிட்டே, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மின்வெட்டுகள் அரங்கேறி, மக்களை இன்னலுக்கு உள்ளாக்கி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் “மின் உற்பத்தி” குறித்து மின்துறை அமைச்சர் ஆய்வு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்தாலும், உண்மை என்னவென்றால் ஒரு அறிவிக்கப்படாத மின் வெட்டு தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது என்றும், அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அதிகாரிகள் கூட்டத்தை மின் துறை அமைச்சர் தங்கமணி கூட்டியிருக்கிறார் என்பதும், வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஆகவே, பராமரிப்பு என்ற போர்வையிலும், ஃபால்ட் என்ற போர்வையிலும் மக்களையும், விவசாயிகளையும், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களையும் கடும் பாதிப்புக்குள்ளாக்கும் “அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களை” உடனடியாக கைவிட வேண்டும். மின்பகிர்மானக் கழகத்தில் அ.தி.மு.க உருவாக்கியுள்ள “நிதி நெருக்கடியை” நீக்கி, மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, மின் பற்றாக்குறையைப் போக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவரான ஸ்டாலின், ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ச்சியான புகார்களை தனது அறிக்கைகளின் வாயிலாக முன்வைத்துவருகிறார். முதலில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் புகார்கள் குறித்து குற்றம் சாட்டி, அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த ஸ்டாலின், அடுத்து முதல்வர் மீதான நெடுஞ்சாலை டெண்டர் விவகாரம், துணை முதல்வர் பன்னீர்செல்வம் உறவினர்கள் மீதான சொத்துக் குவிப்பு விவகாரம் குறித்த புகார்கள் என தொடர்ந்து குற்றம் சாட்டியிருந்தார்.
சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் அமைச்சர் வேலுமணி தனது பினாமி நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர்களை கொடுப்பதாக நேற்று தெரிவித்திருந்த ஸ்டாலின், அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது அமைச்சர் தங்கமணியைக் குறிவைத்து, மின் துறை மீது ஊழல் புகார்களைக் கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: