சனி, 15 செப்டம்பர், 2018

வைகோவின் தியாகம் வீண் போகாது: துரைமுருகன்

வைகோவின் தியாகம் வீண் போகாது: துரைமுருகன்மின்னம்பலம்: பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா - வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, மதிமுக சார்பாக இன்று (செப்டம்பர் 15) முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்று வருகிறது.
திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுடன் இணைந்து பாஜக, அதிமுக அரசை வீழ்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை மத்திய அரசு நிறுத்த வேண்டும், மாநில ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதை நிறுத்த வேண்டும் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மொத்தம் 35 தீர்மானங்களும் கலைஞர் மற்றும் வாஜ்பாயிக்கு இரங்கல் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் மாநாட்டில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “இந்தப் பொன்விழாவிற்குப் பிறகுதான் வைகோவின் தியாக வாழ்க்கைக்கான பலனை இந்த இனம் அறுவடை செய்யவுள்ளது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் படம் எடுத்து அரசியல் செய்பவர் அல்ல வைகோ. பிரபாகரனுக்காக அத்தனை அடக்குமுறை சட்டங்களையும் பதம் பார்த்தவர். அந்த சட்டங்கள் அனைத்தும் வைகோவிடம் தோற்றுள்ளன. இதற்கு முன் நாம் சந்தித்த எதிரிகள் நாணயமான எதிரிகள். இனிமேல் நாம் சந்திக்கவுள்ளவர்கள் நாணயமற்ற எதிரிகள். எனவே, இனிமேல் போர் வியூகத்தை மாற்ற வேண்டும்.

சமூக நீதி, ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள சூழலில் அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றால் திராவிட இயக்கத்திற்கே உண்டு. முதல்வர்கள், பிரதமர்கள் புரட்சியாளர்களாக வர முடியாது. வைகோ போன்றவர்கள்தான் புரட்சியாளர்களாக வர முடியும். அவர் எடுக்கும் முடிவுகளைக் கட்டுப்படுத்தும் இயக்கமாகவும் திராவிடர் கழகம் இருக்கிறது. வைகோவைப் பொறுத்தவரை நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை இனத்திற்கும், உங்களுக்கும் பாதுகாப்பாகவும் இருக்கட்டும்” என்று கூறினார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசுகையில், “விழுப்புரத்தில் எங்களுக்கு விழா உள்ளதால் ஸ்டாலினால் இங்கு வர முடியவில்லை. அவரின் பிரதிநிதியாக நான் வந்துள்ளேன். நானும் வைகோவும் கலைஞரால் உருவாக்கப்பட்டவர்கள். நானும் அவரும் சட்டக்கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அரசியல் ரீதியாகக் கொஞ்ச காலம் ஊடல் இருந்தபோதும் எனக்கும் வைகோவுக்கும் இடையே எந்த ஊடலும் இருந்ததில்லை. அவரை பற்றி நான் எவ்வளவோ விமர்சித்திருந்தாலும் என்னைப் பற்றி ஒரு விமர்சனம் கூட கூறாதவர் அவர். நெல்லை சீமையில் சாரலாக நுழைந்து புயலாக மாறியவர். தனது உயிரை விட கலைஞரை அதிகம் நேசித்தவர். வைகோவின் கிடுக்குபிடிக்கு ஆளாகாத பிரதமரும் கிடையாது, அமைச்சர்களும் கிடையாது. வைகோ என்ற பெயர் கடந்த 50 ஆண்டுகளில் தமிழக அரசியலில், இலக்கிய மன்றங்களில், வவுனியா காடுகளில், பாராளுமன்ற அவைகளில், போராட்டக் களங்களில் ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சமானதல்ல. அவரது தியாகம் ஒருநாளும் வீண் போகாது, வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

கலைஞருக்கு தெரிவிக்காமல் பிரபாகரனை சந்திக்க வைகோ சென்றிருந்தபோது, அவர் திரும்பி வந்துவிடுவாரா என்றுதான் கலைஞர் கேட்டுக்கொண்டே இருந்தார். வைகோ திமுகவில் இருந்து சென்றது சிறு ஊடல். 1954லே திமுகவில் உறுப்பினர் கார்டு வாங்கியவன் நான். நானும் பொன்விழா கண்டவன்தான். ஒரு பொன்விழா மற்றொரு பொன்விழாவை வாழ்த்துகிறது” என்று தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசும்போது, “தமிழ் சமூகத்தின் உரிமை காவலனாய், இந்திய நாடாளுமன்றத்தையே தன் பக்கம் ஈர்த்தவர் வைகோ. கலைஞரின் தமிழை பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பியதைப் போல், வைகோவின் பேச்சையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பியதுண்டு. எழுவருக்குத் தூக்கு தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டபோது சட்டப் போராட்டம் நடத்தி அதை தடுத்து நிறுத்தியவர் அவர். வைகோவிற்கான கூலியை காலம் நிச்சயம் தரும்” என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: