ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

அழகிரிக்கு செல்லூர் ராசு புகழாரம் : பல வருடங்களாக பதவியில் இல்லாமல் இருந்தாலும் மிகப் பெரிய கூட்டத்தைக் ..

மின்னம்பலம் :
அழகிரியை புகழ்ந்த அமைச்சர்!
மு.க.அழகிரி பல வருடங்களாக எந்தப் பதவியில் இல்லாமல் இருந்தாலும் மிகப் பெரிய கூட்டத்தைக் கூட்டி, தனது தந்தைக்கு அமைதி பேரணியைச் சிறப்பாக நடத்தியுள்ளார் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை சோலை அழகுபுரத்தில் இன்று (செப்டம்பர் 9) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, “அழகிரியுடைய பணி எப்படிப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் பல வருடங்களாகக் கட்சியில் எந்தப் பதவியில் இல்லாமல் இருந்தாலும் அவர் தனது தந்தைக்கு மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டி ஒரு பேரணியை நடத்தி முடித்துள்ளார். அவருடைய எதிர்காலம் என்பது போகபோகத்தான் தெரியும்” என்று அழகிரிக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் போட்டியிடுவதால் அதிமுகவுக்கு நெருக்கடி வருமா எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தவர், “எத்தனை பேர் போட்டியிடுவார்கள் என்பது முக்கியம் இல்லை. சின்னம்தான் முக்கியம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் வென்றெடுக்கப்பட்ட சின்னம் இரட்டை இலை. அதிமுக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று 39 தொகுதிகளில் 37 இடங்களைக் கைப்பற்றியது அதுபோலவே கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றது. இன்று அதிமுக மூன்றாவது பெரிய இயக்கமாக வளர்ந்து நிற்கிறது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, மதுரை மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 8) இரவு நடைபெற்ற அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பேசிய செல்லூர் ராஜு, “திமுகவில் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டுமானால் கலைஞரின் மகளாகவோ அல்லது மகனாகவோ இருக்க வேண்டும். தற்போது ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கட் அவுட்டுகளை வைக்கத் தொடங்கிவிட்டார்கள். திமுக எப்போதுமே வாரிசு கட்சி தான்”எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
கடந்த 6ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “சென்னையில் மு.க.அழகிரி நடத்திய பேரணி தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைத்துள்ளது” எனத் தெரிவித்திருந்த நிலையில், ஆளும்கட்சி அமைச்சரும் அழகிரிக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: