சனி, 10 பிப்ரவரி, 2018

நீதிமன்றமே அழுகிக்கொண்டிருக்கிறது... இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாலேயே பகிரங்கமாக்

வரம்புக்கு அப்பாற்பட்டதா நீதித்துறையின் அதிகாரம்?
கே.சந்துரு உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
சிந்தனைக் களம் சிறப்புக் கட்டுரைகள்

டென்மார்க் நாடே அழுகிப்போய்விட்டது’! -
(1) - இது ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வரும் வசனம். இதை மேற்கோள் காட்டி மார்க்கண்டேய கட்ஜு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அலகாபாத் நீதிமன்றத்தைச் சாடினார். அலகாபாத் நீதிமன்றமே அழுகிக்கொண்டிருக்கிறது என்று சொன்னதோடு, அங்குள்ள நீதிபதிகளில் பலர் ஊழலில் திளைப்பதாகவும், அவர்களது சொந்தங்களும் பந்தங்களும் அவர்களைப் பயன்படுத்தி சொத்துக்கள் குவிப்பதாகவும் குற்றம்சாட்டினார். நீதிபதியின் மகன் வக்கீல் தொழில் ஆரம்பித்த முதல் வருடத்திலேயே கோடிக்கணக்கில் வருமானத்தைக் காட்டுவதையும், இறக்குமதி செய்த அந்நிய நாட்டு கார்களில் பவனிவருவதையும் சுட்டிக்காட்டினார். இதைப் பார்த்துக் கொதித்துப்போன அலகாபாத் நீதிபதிகள் அவரைக் கேட்டபோது, அவர் எல்லாரைப் பற்றியும் தான் சொல்லவில்லை என்று கூறினார்.

அவர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறிய தீர்ப்பு, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி ஒரு உத்தரவைப் பிறப்பித்ததையொட்டி எழுந்தது. தற்போது இன்னொரு அலகாபாத் நீதிபதி நாராயண் சுக்லா உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியதற்காகப் பதவி நீக்கத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. முதல்கட்டமாக அவருக்குப் பணி ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. மூன்று நீதிபதிகள் அடங்கிய உள் விசாரணைக் குழு, அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆரம்ப ஆதாரம் இருப்பதாகக் கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விரைவில் நாடாளுமன்ற அவைத்தலைவருக்கு சுக்லாவை பதவி நீக்கம் செய்ய கண்டனத் தீர்மானம் கொண்டுவரும்படி வேண்டுகோள் விடுக்கவுள்ளார்.
உத்தர பிரதேசத்திலுள்ள, அலகாபாத்திலும், லக்னோவிலும் அமைந்துள்ள நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 100. ஆனால் இன்று அவற்றில் மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகள்கூட பதவியில் இல்லை. கடந்த ஐந்து வருடங்களாக நீதிபதிகளின் நியமனங்கள் இழுபறியில் உள்ளன. உயர் நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த 37 பேர்கள் அடங்கிய பட்டியலில் 13 பேர்கள் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன. காரணம் நீதிபதிகளுடைய உறவினர்களும், முன்னாள் ஜுனியர்களும் அப்பட்டியலில் இருந்ததே.
உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா பதவிப் பறிப்பு நடவடிக்கையின் காரணத்தைப் பார்த்தால் அதிர்ச்சியளிக்கும். ஒடிசா உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற குத்தூஸ் என்ற நீதிபதி மருத்துவக் கல்லூரி உரிமையாளர்களிடம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி மாணவர் சேர்க்கைக்குத் தனது நண்பர் மூலம் அனுமதி பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்து, லட்சக்கணக்கில் கையூட்டு பெறும்போது, மத்திய உளவுத் துறைக் காவலர்களால் கைதுசெய்யப்பட்டார். அதையொட்டி, நீதிபதி சுக்லாவைக் கைதுசெய்ய அனுமதி அளிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முன்வரவில்லை.
தலைமை நீதிபதியின் அதிகாரம் என்ன?
அதே சமயத்தில், இச்சம்பவத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும் தொடர்பு இருக்கிறது, அவரையும் காவல் துறை விசாரிக்க வேண்டும் என்று கூறிப் பொதுநல வழக்கை மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷணும், காமினி ஜெயிஸ்வாலும் தொடர்ந்தனர். அவ்வழக்கை விசாரித்த மூத்த நீதிபதி சலமேஸ்வர் அதற்கு அவசர அனுமதி அளித்ததுடன் அவ்வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைத் தவிர்த்த முதல் ஐந்து நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. நீதிபதிகள் பிறப்பித்த அந்த உத்தரவை உடனடியாக ரத்துசெய்த தலைமை நீதிபதி, அந்தப் பொதுநல வழக்கை வேறொரு அமர்வின் விசாரணைக்கு அனுப்பியதுடன், ஐந்து மூத்த நீதிபதிகள் அமர்வு விசாரிக்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டார். அவ்வழக்கை விசாரித்த மூன்று இளம் நீதிபதிகள் அமர்வு அவ்வழக்கைத் தள்ளுபடிசெய்ததுடன், வழக்கைத் தொடுத்த வழக்கறிஞருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தனர்.
இதையொட்டி நாடெங்கும் சட்ட உலகில் விவாதங்கள் தொடங்கின. ‘தலைமை நீதிபதியின் நடவடிக்கை சரியா, தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டு இருக்கும்போது, அவ்வழக்கை அடுத்த மூத்த நீதிபதி சுயமாகவே விசாரித்து உத்தரவு பிறப்பிக்கலாமா?’ என்றும் கேள்விகள் எழுந்தன.
‘வழக்குப் பட்டியலைத் தயார்செய்து, அனைத்து நீதிபதிகளுக்கும் அவற்றை ஒதுக்கீடுசெய்யும் நிர்வாகப் பணி, தலைமை நீதிபதிக்கு மட்டுமே உண்டு’ என்று ஒரு சாரார் வலியுறுத்தினர். ‘தலைமை நீதிபதியின் நடவடிக்கையே கேள்விக்குள்ளாகும்போது, அவருக்கு அடுத்த முதுநிலையில் உள்ள நீதிபதி அவ்வழக்கை விசாரிக்க முற்பட்டது தவறில்லை’ என்று மறுசாரார் வாதாடினர். ‘தலைமை நீதிபதிக்கென்று எந்தச் சிறப்பு அதிகாரமும் இல்லை. அவர் அனைத்து நீதிபதிகளின் தலைவர் (கேப்டன்) மட்டுமே. எனவே, அவரது நடவடிக்கைகளையும் ஒரு ஜனநாயக வரையறைக்கு உட்படுத்த வேண்டும்’ என்ற குரல்களும் விவாத அரங்கில் எழுந்தன.
அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய நிருபர்கள் சந்திப்பு
இதன் உச்சகட்டமாக, கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியத்தில் அங்கம் வகிக்கும் மூத்த நீதிபதிகள் முதல் நான்கு பேரும், திடீரென்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தனர். தலைமை நீதிபதியின் நடவடிக்கைகள் கவலை அளிப்பதாகவும் தாங்கள் பல முறை அவரிடம் வேண்டுகோள் விடுத்தும் அவர் அதைப் புறக்கணிப்பதாகக் கூறி, தாங்கள் நிருபர்களை அழைத்ததாகவும் இப்படிப்பட்ட நடவடிக்கையைத் தாங்கள் எடுக்கவில்லையென்றால், எதிர்காலச் சந்ததியினர் தங்களது செயல்களைப் பழிப்பார்கள் என்பதற்காகவே இந்த நிருபர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்ததாகவும் கூறினர்.
அவர்களது குற்றச்சாட்டின் சாராம்சம் என்னவென்று வினவியபோது, தலைமை நீதிபதி முக்கியமான வழக்குகளைத் தங்களைவிட இளநிலையில் உள்ள நீதிபதிகளின் அமர்வுகளுக்குத் தன்னிச்சையாக ஒதுக்கீடுசெய்கிறார். அது தவறு என்று கூறினர். மறுபடியும் நிருபர்கள், ‘மறைந்த நீதிபதி லோயா வழக்கைப் பற்றிக் கூறுகிறீர்களா?’ என்று கேட்டபோது, அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை. மராட்டிய மாநில மாவட்ட நீதிபதி லோயா, பாஜக தலைவர் அமித் ஷாவின் மீதிருந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போது, விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக மும்பையிலிருந்து நாகபுரிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கே அவர் மர்மமான முறையில் இறந்துவிட்டார். அதைப் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. முதுநிலைப் பட்டியலில் 12-வதாக இருக்கும் நீதிபதி ஏ.பி.மிஸ்ராவிடம் அவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது சச்சரவைக் கிளப்பியது.
நீதிபதிகள் நடத்திய நிருபர்கள் கூட்டத்துக்குப் பிறகு, நாடெங்கும் இது பற்றிய விவாதங்கள் எழுப்பப்பட்டன. ஊடகங்களில் காரசாரமான பட்டிமன்றங்கள் நடைபெற்றன. சட்ட நிபுணர்கள் மரபுரீதியாக அவர்களது செயல் தவறா.. சரியா என்று கருத்துகளைக் கூறினர். ஓய்வுபெற்ற நீதிபதிகள் நால்வர் (ஏ.பி.ஷா, பி.பி.சாவந்த், எச்.சுரேஷ் மற்றும் சந்துரு) ‘‘தலைமை நீதிபதிக்கு, வழக்குகளை நீதிபதிகளுக்கு ஒதுக்கீடுசெய்யும் நிர்வாகப் பணியில் ஒளிவுமறைவற்ற தன்மை தேவை என்றும், தலைமை நீதிபதி தான் மட்டுமே பட்டியலிடும் செயல்களைச் செய்வதில் ஜனநாயகமற்ற தன்மை தெரிகிறது’’ என்றும் ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதினர்.
திடீரென்று நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாங்கள் விசாரிக்க விரும்பவில்லை என்று கூறிய பின்னர், அவ்வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டு விட்டது. அதேபோல், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்குமான வழக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்பட்டியலும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், மூத்த நீதிபதிகள் நால்வர் எழுப்பிய கோரிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டனவா என்றால், இல்லை என்றே கூறலாம். அதையும் மீறி, ஆழமான பல பிரச்சினைகள் இன்றும் தெளிவுபெறாமல் உள்ளன.
கேள்விக்குரிய நியமனங்கள்
உயர் நீதிபதிகளை நியமனம் செய்யும் அதிகாரத்தை வரைமுறைப்படுத்தும் வகையில், நீதிபதிகள் நியமன ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அதற்காக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு, புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. அதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை விசாரித்த ஏழு நீதிபதிகள் அமர்வு, அச்சட்டத்தை ரத்துசெய்துவிட்டது. காரணம், அச்சட்டம் நீதித் துறையின் சுதந்திரத்தைக் குலைக்கும் வகையில் உள்ளது என்று கூறினர். இதனால், கடந்த 25 வருடங்களாக நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்துகொள்ளும் நடைமுறை தொடரும்படி ஆகிவிட்டது. கொலிஜியம் பரிந்துரை மூலம் நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறை உலகில் எங்குமே இல்லாத விசித்திரம். இதுவரை நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் நியமன நடைமுறை ஒளிவுமறைவற்ற தன்மை உடையது. நீதிபதிகளின் நியமன நடைமுறையைப் பற்றி பல சட்ட நிபுணர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். தங்களது ஜூனியர்களையும் உறவினர்களையுமே நியமித்துக்கொள்ளும் போக்கு அதிகரித்ததோடு, வழக்கறிஞர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பையும் சந்தித்தது. இப்போக்கைப் பற்றி விமர்சனக் கட்டுரை எழுதிய நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், கொலிஜிய நியமன முறையைப் பழைய மாணவர்கள் சங்கம் என்று குறிப்பிட்டார்.
அரசமைப்பில் வரையறுக்கப்படாத, கட்டுப்பாடற்ற அதிகாரத்தை ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் தன்வசப்படுத்திக்கொண்டதன் விளைவுதான் இன்றைக்கு உள்ள குழப்பங்களுக்குத் தலையாய காரணம். மேலும், நீதிபதிகள் ஊழலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டாலும், காவல் துறை நேரடியாக விசாரணையைத் தொடங்க முடியாது. விசாரணை தொடங்குவதற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி / உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் முன்அனுமதி பெற வேண்டும் என்றும் ஒரு தீர்ப்பு வெளியிடப்பட்டு, அது ஊழல் தடுப்புச் சட்டத்தையே திருத்தும் வகையில் அமைந்தது. இதனுடைய நேர்விளைவு இன்று ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு முதன்மையான ஆதாரம் இருந்தும், தலைமை நீதிபதி சி.பி.ஐ. விசாரணை நடத்த அனுமதி மறுத்துவிட்டார். பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தும் அவர் பதவிக்காலம் முடியும் வரை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
நீதிபதிகள் இந்நாட்டுச் சட்டத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டவர்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததோடு எப்படிப்பட்ட நபர்கள் நீதிபதிகள் ஆகிறார்கள் என்ற தகவலும் அளிக்கப்படுவதில்லை. பதவியில் இருந்த நீதிபதி ஒருவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றமே தண்டனை வழங்கி ஆறு மாதம் சிறைக்கு அனுப்பிய சம்பவத்தைப் பார்த்த மக்களுக்கு நீதித் துறையின் மீதே பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்குகள் மூலமே நீதிபதிகளைப் பதவியை விட்டு நீக்க முடியும் என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 68 ஆண்டுகளில் ஒரு நீதிபதிகூட இப்படிப்பட்ட நடைமுறையில் பதவிநீக்கம் செய்யப்படவில்லை, செய்யவும் முடியவில்லை. மிகப் பெரும் செலவினத்துடன் நடத்தப்படும் நீதித் துறை, பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுள்ளது. அவர்களது செயல்முறைகளைப் பொதுவெளிகளில் விவாதிக்க முடியாததோடு, நீதிமன்றங்களின் செயல்பாட்டையும் கண்காணிக்க முடியாது. இதையெல்லாம் ஒழுங்குபடுத்தும் முறையில் நீதிபதிகளின் பொறுப்பைக் கண்காணிக்கும் வரைவுச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
நாடெங்கிலும் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை, புது வழக்குகள் எதையும் எடுத்துக்கொள்ளாமல் விசாரிப்பதற்கு 468 வருடங்கள் தேவைப்படும் என்று சட்ட ஆணையத்தின் தலைவர் கூறியுள்ள தகவல், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். வழக்குகளின் தேக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த விதமான உருப்படியான ஆலோசனைகளையும் இதுவரை நீதிமன்றங்கள் எடுக்கவில்லை என்பதோடு, மாற்றுத் தீர்வு முறை என்ற பெயரில் போகாத ஊர்களுக்கு வழிதேடும் செயல்கள்தான் பெருகிக்கொண்டிருக்கின்றன.
இப்படி அடிப்படையான பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வு காணாமல், நான்கு நீதிபதிகள் நடத்திய நிருபர்கள் கூட்டம் முறைதானா என்று விவாதிப்பதில் அர்த்தமில்லை. மேலும், நிருபர்கள் கூட்டத்தின் மூலம் வெளியிட்ட தகவல்கள் மக்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், தினசரி நீதிமன்றத் தாழ்வாரங்களிலும், வக்கீல்கள் சங்க அறைகளிலும் கேள்விப்பட்ட பழைய தகவல்களே அவை. ஒருசிலர், தலைமை நீதிபதிக்கு மட்டுமே வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் நிர்வாக அதிகாரம் உண்டு என்று கூறிவந்தாலும், அப்படிப்பட்ட ஒதுக்கீடுகளில் ரகசியத்தன்மை காக்கப்பட்டால் அது சந்தேகத்துக்கு இட்டுச்செல்லும். மேலும், தலைமை நீதிபதி ஒரு வழக்கை எந்த அமர்வுக்கு அனுப்பினால் குறிப்பிட்ட முடிவு வெளிப்படும் என்ற தகவலை அறிந்தவர். ஆகவே, ஒருவிதத்தில் வழக்கின் முடிவையும் அவரால் ஒதுக்கீட்டு அதிகாரத்தின் மூலம் உறுதிப்படுத்த முடியும்.
கட்டற்ற சுதந்திரம்?
கடந்த 68 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஆட்சிசெய்த பல அரசுகள், நீதித் துறை சீர்திருத்தத்தைப் பற்றி யோசிக்கவே அச்சப்பட்டன. பின்னர் வந்த ஆட்சிகள் பலவற்றுக்கும் சொந்த வழக்குகள் நீதிமன்றங்களில் இருந்ததால், நீதித் துறையுடன் ஒருவிதமான சமாதானப் போக்கையே கடைப் பிடித்தன. அதையும் மீறி கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்கள் ‘நீதித் துறை சுதந்திரம்’ என்ற பெயரில் ரத்துசெய்யப்பட்டன. கட்டற்ற சுதந்திரத்தை நீதிபதிகளால் அனுபவிக்க முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டதற்கான காரணம் மக்களுக்கு நீதித் துறையின் மேல் இருந்த / இருக்கும் மட்டற்ற நம்பிக்கைதான்.
இந்தியாவைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் உள்ள நீதித் துறை பல சவால்களைச் சந்தித்துள்ளன. பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் அங்குள்ள பிரதமரின் மீதான வழக்கை விசாரிக்கும்போது, அவ்வழக்கில் கலந்துகொள்ள வந்த நீதிபதியின் விமானத்தை ராவல்பிண்டியில் தரையிறக்க விடாமல், வேறொரு விமானத்துக்குச் செல்லும்படி பணித்து, அவ்வழக்கையே நடத்த விடாமல் செய்தது அங்கிருந்த உளவுத் துறை. வழக்கு நடைபெறும் உச்ச நீதிமன்றத்துக்கு ராணுவத்திடமிருந்தே பாதுகாப்பு கோரினர் நீதிபதிகள். பின்னர், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஜ்ஜத் அலி ஷாவின் பதவியே பறிக்கப்பட்டது.
இலங்கையின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகேவின் பதவி, அந்நாட்டின் குடியரசுத் தலைவர் ராஜபக்சவால் பறிக்கப்பட்டது. வங்கதேசத்தில் நீதிபதிகளை நாடாளுமன்றத் தீர்மானத்தின் மூலம் பதவிநீக்கம் செய்யும்படியான சட்டத் திருத்தத்தை ரத்துசெய்ததற்காக நாட்டை விட்டே ஓட நேர்ந்ததோடு வங்கதேச உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.சின்ஹா பதவியை விட்டு ராஜினாமாசெய்ய நேர்ந்தது. இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றிருப்பினும், இந்தியாவில் அப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்படாததற்கு இந்தியாவின் பன்முகத்தன்மையும், ராணுவம் அரசின் கட்டுப்பாட்டில் இன்னும் இருப்பதுமே காரணம்.
ஆனால், இதுவரை பொதுவெளிகளில் மட்டுமே கிசுகிசுக்களாகப் பேசப்பட்டுவந்த பேச்சுகள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாலேயே பகிரங்கமாக்கப்பட்டுள்ளது. இனியும் இப்போக்கைத் தொடர விடுவது, நாட்டுக்கும் நல்லதல்ல; நீதித் துறைக்கும் உசிதமல்ல. நீதிமன்றச் செயல்பாடுகளில் ஒளிவுமறைவற்ற தன்மை, நீதித் துறையின் அதிகாரங்களைப் பரவலாக்குதல், மற்றும் நீதி அதிகாரத்தை ஜனநாயகப்படுத்துதல் இவையே இன்றைய தேவை. இதற்காக நாடெங்கிலும் விவாதங்கள் நடத்தப்பட்டு முறையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேசமயத்தில், நீதிபதிகளின் கருத்து வேறுபாடுகளைக் கணக்கில்கொண்டு அரசின் தலையீட்டை அனுமதிக்க முடியாது.
நீதிபதி லோயாவின் மர்ம மரண வழக்கின் தீர்ப்பு எப்படி இருப்பினும், அதையொட்டி எழுப்பப்பட்ட விவாதங்களில் நீதித் துறையின் நடைமுறைகள் செழுமைப்படுத்தப்படுமா?
- கே.சந்துரு
நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழ் இந்து, 04/02/2018

கருத்துகள் இல்லை: