ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

சாகர்மாலா .... இந்திய கடற்பகுதிகள் கம்பனிகளுக்கு ஏலவிற்பனை.. சேது சமுத்திர திட்டம் முடங்கிய பின்னணி இதுதான்

Pollachi Mohanraj : கிட்டத்தட்ட 25கோடி மக்களை அவர்கள் வாழ்வாதார பகுதியில் இருந்து அகற்ற கொண்டுவரப்படுகிறது மத்தியஅரசின் "சாகர்மாலா திட்டம்"
சாகர் என்றால் கடல் , மாலா என்றால் மாலை . அதாவது இந்திய கடற்பகுதிகளை ஒன்று சேர்த்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் "கடல்மாலை" திட்டம்.>
இத்திட்டத்திற்கு இந்திய அரசு 8லட்சம் கோடி ( ஒர் இந்தியன் தலைக்கு 6400) ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதுவரை 50000 கோடி நிதி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம்குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் சாராம்சங்கள் இதுதான்!
1. இந்திய கடல்பகுதியில் 12 பெரிய துறைமுகங்கள் ( தமிழகத்தில் சென்னை மற்றும் தூத்துக்குடி) உட்பட 200 (தமிழகத்தில் எண்ணூர் , குளச்சல், காரைக்கால் உள்ளிட்டவை) சிறிய துறைமுகங்கள் திறன் மேம்படுத்தப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.
2. இந்திய கடற்பகுதியில் உள்ள 1208 தீவுகள் ஆனது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பல வருட ( 99 வருடமாக கூட இருக்கலாம்) குத்தகைக்கு விடப்படும்.


3. இத்திட்டம் அமுலுக்கு வரும்காலத்தில் கடல்பகுதியில் வாழ்வாதாரமாக கொண்டுள்ள இந்திய மீனவர்கள் கிட்டத்தட்ட 25 கோடி மக்கள் தங்கள் வாழ்ந்து வந்த கடலோரப் பகுதியில் இருந்து முழுவதுமாக அப்புறப்படுத்தப்படுவார்கள்.

4. மீன் வளம் முற்றிலும் அழிக்கப்பட்டு 350 கிமீ மீன் பிடித்தல் பகுதி 10 கிமீ என்கிற அளவில் சுருங்கிவிடும். காரணம் துறைமுக மேம்பாடு என்ற பெயரில் கடற்கரைகள் ஆழப்படுத்தி பல மைல்கல் தூரம் துறைமுகங்கள் பெரிதாக்கி கடல்வளம் மாசுபடுத்தப்படும்.

5.குறிப்பாக கடல் பொக்கிஷம் அனைத்தும் அயல் தேசத்து கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படும்.

6. கடற்பகுதிகள் முழுவதும் கண்டெய்னர்கள் அதிக அளவில் செல்வதை தாங்கும் வகையில் வலிமையான அகலமான சாலைகள் , ரயில்பாதைகள் மற்றும் விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டு அனைத்து துறைமுகங்களும் இணைக்கப்பட்டு சரக்கு போக்குவரத்து பிராதனமாக்கப்படும். (தமிழகத்தில் எடப்பாடி அரசு கிழக்கு கடற்கரை சாலையை( ECR ROAD) மத்தியஅரசிடம் ஏற்கனவே தாரைவார்த்துவிட்டது)

7. இதனால் கடற்கரைபகுதிகள் பாதுகாப்பை காரணம்காட்டி ராணுவம் வசம் சென்றுவிடும். காலப்போக்கில் காவல்துறையிடம் இருந்து மாநில பாதுகாப்பு பறிக்கப்பட்டு ராணுவம் வசம் சென்றுவிட வாய்ப்பு உள்ளது.

8. இதனால் கடற்கரைபகுதி முழுவதும் ராணுவம் தங்க கட்டடங்கள் , கார்ப்பரேட்நிறுவனங்களின் பணியாளர்கள் தங்க குடியிருப்புகள், வெளிநாட்டு வியாபாரிகள் தங்குவதற்கான சொகுசு விடுதிகள் , பொழுதுபோக்கு ரிசார்ட்கள் , ஷாப்பிங் மால்கள் மயமாகும். அதனால் தற்போது காலங்காலமாக தங்கியிருக்கும் குடிவாசிகள் வெளியேற்றப்படலாம்.

9.தமிழ்நாட்டில் இருந்து பல வளங்கள் கொள்ளையடிக்கப்படலாம். குறிப்பாக கருங்கல் மலைகள் உடைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். மீத்தேன் வாயு , நியூட்ரீனோ , ஹைட்ரோகார்பன் என அனைத்து ஆபத்தான திட்டங்களுக்கும் செயல்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

10. கூடங்குளம் அணு உலையின் மின் உற்பத்தி முழுவதும் துறைமுகங்கள் பயன்பாட்டிற்கு மாற்ற முயற்சி நடக்க வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில் இந்தியா என்பது மக்கள் வாழும் இடம் என்பதைவிட உலகநாடுகளின் ஒரு "வியாபார சந்தை" ஆக மாற்றப்பட்டு வருகிறது. காரணம் 120 கோடி மக்கள்( நுகர்வோர்) வாழும் இடம் இங்குதான்.

உலகில் பல நாடுகள் பிரிந்தற்கான காரணம் மக்கள் வாழ்வதற்காக. இங்கு பிரிந்து இருந்த பகுதிகள் ஒன்று சேர்த்து சுதந்திர இந்திய நாடாக உருவாக்கப்பட்டது உலகநாடுகளின் வியாபாரத்திற்காக.

இத்திட்டத்தை எந்த மறைமுக செயல்பாடுகளும் இல்லாமல் மக்களிடம் சாதக பாதகங்களை வெளிப்படையாக தெரிவித்து மக்கள் கருத்து அறிந்து மத்திய மாநிலஅரசுகள் செயல்படுத்தவேண்டும் என்பதே ஒட்டு போட்டு ஜனநாயகம் என்பது இன்னமும் இந்தியாவில் இருக்கிறது என்று நம்பிக் கொண்டு இருக்கின்ற ஒவ்வொரு இந்திய குடிமகனின் வேண்டுகோளும் ஆகும்.

இந்தியாவில் மக்களாட்சி ( மக்களுக்கு ஆன) ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறதா? அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சி நடைபெறுகிறதா ? என்று தெரியவில்லை.

காலம்தான் அனைத்திற்கும் ஒரு விடை சொல்ல வேண்டும்.

பொள்ளாச்சி மோகன்ராஜ்

கருத்துகள் இல்லை: