புதன், 7 பிப்ரவரி, 2018

பன்னீர்செல்வம் : தர்ம யுத்தத்தின் நோக்கம் நிறைவேறியது!.. எத்தனை கோடிகள்.. ?

தர்ம யுத்தத்தின் நோக்கம் நிறைவேறியது!மின்னம்பலம்: தர்ம யுத்தத்தின் நோக்கம் நிறைவேறி விட்டதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர் முதல்வராகப் பதவியேற்ற பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த பன்னீர்செல்வம் இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது, கடந்த ஆண்டின் இதே நாளில் (பிப்ரவரி 7) ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நாற்பது நிமிடங்களுக்கு மேலாக தியானம் இருந்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், நான் அம்மாவிடம் நியாயம் கேட்க வந்துள்ளேன் என்றும் என்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கிக்கொண்டார்கள். அதிமுக ஒரு குடும்பத்தின் கைக்குள் போகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

சசிகலா குடும்பத்தினர் தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யச்சொன்னார்கள் என்று குற்றம் சாட்டிய ஓபிஎஸ், தான் தர்ம யுத்தத்தைத் தொடங்கி இருப்பதாகவும், தன்னந்தனியாகக்கூட இந்த யுத்தத்தைத் தொடர்வேன் என்றும் கூறியிருந்தார். அவர் தெரிவித்த கருத்துகளால் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனை நிகழ்ந்தது.அதிமுகவைச் சார்ந்த சில சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவாக அவருடன் இணைந்தனர். இந்நிலையில் சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.
சசிகலா முதல்வராகப் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா,சசிகலா,இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வெளியானது. இந்நிலையில், புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். சசிகலா பெங்களுரு சிறைக்கு சென்றார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் தர்ம யுத்தத்தைத் தொடங்கிய ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு இரண்டு கோரிக்கைகள் வைத்தார். முதலாவதாக, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் இரண்டாவதாக, சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த இரு கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதால் கடந்த ஆகஸ்டு 21ஆம் தேதி எடப்பாடி ஓபிஎஸ் தலைமையிலான இரு அணிகளும் ஒன்றிணைந்தன. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் தர்மயுத்ததை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில்,தேனி மாவட்டத்தில் இன்று(பிப்ரவரி 7) செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "தர்ம யுத்தம் தொடங்கியதற்கான நோக்கம் நிறைவேறியது"என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசியபோது, "எம்ஜிஆர் மக்கள் இயக்கமாகத்தான் அதிமுகவை ஆரம்பித்தார், ஆட்சியைப் பிடித்தார். அவருக்குப் பின்னால் வந்த ஜெயலலிதாவும் அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாகத்தான் வழிநடத்தினார், நாங்களும் தொண்டர்கள் இயக்கமாகத்தான் வழிநடத்துகிறோம். நாங்கள் ஒன்று கூடி நிலையான அரசை ஏற்படுத்தியுள்ளோம்" என்று ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் அமைய உள்ளதை பற்றிய கேள்விக்கு,"தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்தால் பொதுமக்களுக்கோ, வன விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்படாது" என்று பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை: