ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

துணைவேந்தர் ஆதாரங்களை அழிக்க 2,000 ரூபாய் நோட்டுகளைக் கிழித்து வீசினார்!

Shankar A :நேற்று லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்ட, பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதியை துணைவேந்தராக்கியவர், முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன். அதில் கட்டிங் வாங்கிக் கொண்டு நியமனம் செய்தவர், முன்னாள் ஆளுனர் ரோசைய்யா. தற்போது பழனியப்பன் டிடிவி தினகரன் அணியில். இந்த கைது குறித்து, டிடிவி தினகரனின் கனத்த மவுனத்தின் பின்னணி தெரிகிறதா ?
விகடன் இரா. குருபிரசாத்< க.விக்னேஷ்வரன்  :
Coimbatore: லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், வேதியியல் துறை உதவிப் பேராசிரியராக இருப்பவர் சுரேஸ். இவர் கடந்த 2016-ம் ஆண்டு, உதவிப் பேராசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், சுரேஸிடம், பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் சுரேஸ் புகார் அளித்தார். ஏற்கெனவே, பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரித்துவந்த நிலையில், துணைவேந்தரை கையும், களவுமாக பிடிக்கத் திட்டமிட்டனர்.

இதுதொடர்பாக, உயர்கல்வித்துறை மற்றும் கவர்னர் மாளிகையில் அனுமதி வாங்கியதையடுத்து, நேற்று காலை 10 மணியளவில், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் துணைவேந்தர் கணபதி வீடு ஆகிய பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தினர்.

குறிப்பாக, சுரேஸிடம் இருந்து, துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெறும்போது அவரை கையும், களவுமாக பிடித்தனர் லஞ்சஒழிப்புத்துறை போலீஸார். ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும், மீதித்தொகையை செக்காகவும் கணபதி பெற்றுள்ளார். இதையடுத்து, துணைவேந்தர் கணபதி மற்றும் அவருக்கு லஞ்சத்துக்கு இடைத்தரகராக இருந்த உதவி செய்த, வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், கணபதி மற்றும் தர்மராஜ் வீடுகள் மற்றும் வேதியியல் துறை அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அவரது மனைவி சொர்ணலதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல, திருச்சியில் உள்ள துணைவேந்தர் கணபதியின் வீட்டிலும் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, தடயத்தை அழிப்பதற்காக, துணைவேந்தர் கணபதி, 56 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 2,000 ரூபாய் நோட்டுகளை கிழித்து அவற்றை கழிவறையில் போட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: