புதன், 7 பிப்ரவரி, 2018

டாக்டர், சிறுமி கடத்தல் : நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2 பேர் மீட்பு

மின்னம்பலம் :தேனியைச் சேர்ந்த இருவர், பிடதி ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, நித்தி சீடர்கள் மீண்டும் அவர்களை அழைத்துச் செல்ல முயன்றுவருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடகரை கிராமத்தைசேர்ந்தவர் குமார். இவரது மகள் நிவேதா. குமாரின் சகோதரியின் மகன் ராஜ் குமார். மருத்துவரான இவர் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் ஊழியராகப் பணியாற்றியுள்ளார்.
கடந்த இரு மாதங்களுக்கு முன் ராஜ்குமார் நிவேதாவை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெங்களூருவில் உள்ள பிடதி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்து நிவேதா வீடு திரும்புவதற்கு நித்தி சீடர்கள் விடவில்லை என்றும் அவரை மூளைச்சலவை செய்து ஆசிரமத்திலேயே இருக்கும்படி செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரையும் மீட்டுத் தரக்கோரி காவல் நிலையத்தில் இருவரின் பெற்றோர்களும் புகார் அளித்துள்ளனர். தனது மகள் நிவேதாவிற்கு 18 வயது பூர்த்தியடையவில்லை என்றும் சிறுமியான அவளைத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார் குமார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பிடதி ஆசிரமத்திற்குச் சென்று அங்கிருந்த ராஜ்குமார், நிவேதா இருவரையும் மீட்டு வந்துள்ளனர். அவர்களைப் பெற்றோருடன் சேர்த்து வைக்க போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அவள் 18 வயதைப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறும் நிலையில் பிடதி ஆசிரமத்தினர் நிவேதா 18 வயது பூர்த்தியடைந்து விட்டதாகவும், எனவே அவரது விருப்பம் போலவே எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இருவரையும் மீண்டும் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்ல நித்தி சீடர்கள் முயன்றுவருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் நிவேதாவை ஆஜர்படுத்தவுள்ளதாக கூறியுள்ளனர்.
மக்களை மூளைச் சலவை செய்வதையே நித்தி சீடர்கள் வழக்கமாக வைத்துள்ளனர் என்றும் அவர்களிடம் மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் நித்யானந்தாவின் பாலியல் குற்றத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த லெனின் கருப்பன் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: