வியாழன், 8 பிப்ரவரி, 2018

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தினத்தந்தி :பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழக சட்டமன்ற அவசர கூட்டத்தை அடுத்த வாரம் கூட்டவும், 5 நாட்களுக்கு நடத்தப்படும் கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்து நிறைவேற்றவும் அ.தி.மு.க. அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக 2018–19–ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு செய்ய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எந்த உரிமையும், அதிகாரமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மை இழந்து 6 மாதங்களாகின்றன. 18 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்து, இம்மாத இறுதியில் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டால், எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்ந்து விடும். அதற்கு பயந்து உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பாகவே சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிறைவேற்றி விடலாம் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் திட்டம் ஆகும்.


ஆனால், மரபுப்படியும், தார்மிக நெறிகளின்படியும் இது தவறு. இதை உயர்நீதிமன்றம் கூட ஏற்காது. 18 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து, அதன் தொடர்ச்சியாக பெரும்பான்மையை நிரூபிக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது.
பா.ம.க.வை சேர்ந்தவர் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது தமிழகத்திற்கு ஏராளமான ரெயில்வே திட்டங்கள் அறிவிக்கப்பட்டதுடன், அவற்றுக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால், இப்போது அ.தி.மு.க. சார்பில் 50 எம்.பி.க்கள் இருந்தும் எந்த பயனும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: