வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

மீண்டும் ஒரே நாளில் உண்ணாவிரதத்தை கைவிட்டஜீயர் ... தான் பட்டினி இருந்தால் உலகத்துக்கு கேடாம் ! ஏற்கனவே கொலஸ்ட்ரோல் சுகர் ஜாஸ்தி?

tamilthehindu :கவிஞர் வைரமுத்து ஆண்டாள்
சன்னதியில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நேற்று உண்ணாவிரதத்தை தொடங்கிய ஸ்ரீவில்லிபுத்து ஜீயர் சடகோப ராமானுஜர் இந்த முறையும் ஒரே நாளில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.
கடந்த மாதம், ராஜபாளையத்தில் நடந்த விழா ஒன்றில், கவிஞர் வைரமுத்து ஆண்டாளை அவதூறாக பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. வைரமுத்துவுக்கு பல்வேறு இந்து அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இவ்விவகாரத்தில், வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் நேரில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமென, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோபராமானுஜர் உண்ணாவிரதம்  மேற்கொண்டார்.

பின்னர், ஒரே நாளில் உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்ட அவர் பிப்ரவரி 3-ம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக எச்சரித்தார்.
பின்னர் மீண்டும் நேற்று (பிப்.8) உண்ணாவிரதத்தை தொடங்கினார். ஆண்டாள் கூறும்வரை உண்ணாவிரதத்தை தொடர்வேன் என்றார்.
இந்நிலையில், இன்று காலை ஜீயரை பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா சந்தித்தார். அப்போது அவர், "உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்" என வலியுறுத்தியதாகக் கூறினார்.
அவரைத் தொடர்ந்து பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகரும் ஜீயரை சந்தித்தார். அவரும் ஜீயரிடம் உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினார்.
தொடர் வலியுறுத்தல்களை ஏற்று ஸ்ரீவில்லிபுத்து ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்.
உண்ணாவிரதத்தை கைவிட்டது ஏன்?
போராட்டத்தை கைவிட்டது தொடர்பாக ஜீயர் கூறும்போது "உண்ணாவிரதம் இருந்தால் மக்களுக்கு கேடு வரும் என்பதால் போராட்டத்தை வாபஸ் பெறுகிறேன். இனிமேல் உண்ணாவிரதம் இருக்கப்போவதில்லை. உண்ணாவிரதத்தை கைவிட அரசியல் காரணம் ஏதுமில்லை. வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்கள் பிரார்த்தனை செய்தாலே தீர்வு வரும்" என்றார்

கருத்துகள் இல்லை: