வியாழன், 8 பிப்ரவரி, 2018

வைகை / பொதிகை இல்லம்.. எடப்பாடி பன்னீரின் விபசார அரசியலும் தமிழ்நாடு இல்லமும்

சிவசங்கர் எஸ்.எஸ் :  பேரறிஞர்
அண்ணா நினைவு நாளில், "அண்ணா. தி.மு.க" அடித்த கூத்து மகா கேவலமானது.
தில்லியில் உள்ள தமிழக அரசின் அரசினர் விருந்தினர் விடுதிக்கு பெயர் "தமிழ்நாடு இல்லம்". மிகப் பழமையான கட்டிடம், போதுமான அளவில் இல்லை என தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது முடிவெடுத்து, புதியக் கட்டிடம் கட்ட உத்தரவிட்டார். கட்டிடம் கட்டி முடியும் போது ஆட்சி மாற்றம். வழக்கம் போல், ஜெயலலிதா திறந்து வைத்து, தன் பெயரில் கல்வெட்டு பதித்துக் கொண்டார்.
இரண்டு இல்லங்கள் இருப்பதால், " பழைய தமிழ்நாடு இல்லம்", "புதிய தமிழ்நாடு இல்லம்" என்று அழைக்கப்படுகிறது. தமிழக முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் தில்லி சென்றால் தங்குவது இங்கு தான். வெளியில் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி, அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்லுதல் சிரமம். அதனால் "தமிழ்நாடு இல்லம்" மிக முக்கியமான வசதி.
இதே போல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் "சாணக்யபுரி" பகுதியில், விருந்தினர் விடுதிகள் உண்டு.

இந்த தமிழ்நாடு இல்லத்தின் பெயரை, திடீரென "பொதிகை இல்லம்", " வைகை இல்லம்" என அ.தி.மு.க எடப்பாடி அரசு புதிய பெயரை சூட்டியது. இப்படி பெயர் மாற்றுவதற்கான அவசரமும், அவசியமும் என்ன என்பது யாருக்கும் விளங்கவில்லை. அ.தி.மு.க அரசின் சமீப கால நடவடிக்கைகளை கவனிப்பவர்களுக்கு, இவர்களது ஒவ்வொரு அசைவும் எங்கிருந்தோ ஆட்டுவிக்கப் படுகிறது என்பது புலப்படும்.
தமிழ் ஆர்வலர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பை தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் காட்டமான விமர்சனம் வெளிப்பட்டது. உடனே ஒரு அறிவிப்பு வந்தது. "பொதிகை தமிழ் இல்லம்", " வைகை தமிழ் இல்லம்" என்று பெயர் மாற்றப்படுகிறது. "நாடு" ஏன் விடுபட்டது என்ற கேள்வி ஓங்கி எழுந்தது. அங்கே தான் இருக்கிறது சூட்சுமம்.
அந்த "நாடு" தான் அவர்களுக்கு உறுத்தியது. நாடு என்றால் இந்தியா தான் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் அவர்கள். அதிலும் 'ஒரே இந்தியா' என்ற கோட்பாட்டில் இருப்பவர்கள். 'வேற்றுமையில் ஒற்றுமை', என்பது தான் இந்தியாவின் தாத்பரியம். அதை மாற்ற வேண்டும் என்பது அவர்கள் நோக்கம்.
'தமிழ்', 'தமிழ்நாடு' என்றால் எரியத் தானே செய்யும் அவர்களுக்கு. "தமிழ்நாடு இல்லம்'' என்பது அமெரிக்க தூதரகம், பிரிட்டன் தூதரகம் என்று ஒலிப்பது போல் தோன்றியதோ என்னவோ தெரியவில்லை. அழுத்தம் வந்திருக்கிறது. மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதில் நிகழ்ந்த குளறுபடிகள், தமிழ்தாய் வாழ்த்தை விஜயேந்திரன் அவமதித்த நிகழ்விற்கு தொடர் நிகழ்ச்சி போல் நடந்ததால், தமிழ் ஆர்வலர்களின் கொந்தளிப்பு அதிகமாக காரணமாக அமைந்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நல சீர்கேட்டுக்கு பின்னும், மறைவுக்கு பின்னும், ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிராக உதய் திட்டத்திற்கு ஆதரவு, நீட்டுக்கு வழி விட்டது, உணவுக் கொள்கையில் சரண்டர் என நிகழ்ந்தது யாருக்கு மறக்கும். அந்த வழியில் தான் இந்த பெயர் மாற்றமும்.
தில்லி விமான நிலையத்தில் இறங்கி, வாடகை வாகனம் பிடிக்க, ஆட்டோ பிடிக்க 'தமிழ்நாடு இல்லம்' என்றால், இந்திவாலாக்கள் கேட்கும் கேள்வி, " நயா?, புராணா ?". நயா என்றால் புதிய, புராணா என்றால் பழைய. அவர்கள் வாயில் தமிழே நுழையாது. இதில் பொதிகை, வைகை என்று கூப்பிட்டால், ஓடியேப் போவார்கள். நன்கறிந்த பெயரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பதை இன்னும் முதல்வர் எடப்பாடி விளக்கவில்லை.
"சென்னை மாகாணம்" என்பதை "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டி நமக்கு அடையாளம் கொடுத்த பேரறிஞர் பெருந்தகையின் நினைவு நாளில், அந்த 'தமிழ்நாடு' என்ற பெயரை மாற்றுவதென்றால் எவ்வளவு கேவலமான செயல். எவ்வளவு திட்டமிட்ட அவமதிப்பு செயல் ?
தளபதி அவர்கள் தன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போல, 'தமிழ்நாடு' என்ற' பெயர் சூட்டும் விழாவில் மருத்துவர்கள் அறிவுரையை மீறி உடல்நலக் குறைவுடன் முதல்வர் அண்ணா கலந்து கொண்டிருக்கிறார். அப்போது, "தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொள்ளாமல் இந்த உயிரும், உடலும் இருந்து என்ன பயன்?", என உணர்ச்சிக் கொப்பளிக்க பேசியிருக்கிறார். அந்த அண்ணாவுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இது தான்.
இப்போது " பொதிகை தமிழ்நாடு இல்லம்" என பெயர் மாற்றப்பட்டிருப்பதாக கூட செய்தி வருகிறது. இன்னும் அவர்களுக்கு தலைச்சுற்றல் நிற்கவில்லை.
பெயர் மாற்றித் தான் தீர வேண்டுமானால், "மோடிசாமி" என்றும், "அமித்செல்வம்" என்று நீங்கள் மாற்றிக் கொண்டு, அங்கே அடிமையாகப் போய் சேருங்கள்.
எங்கள் அண்ணா சூட்டிய, எங்கள் தாய் தமிழ்நாட்டின் பெயர் மாற்ற உங்களுக்கு எவன் அதிகாரம் கொடுத்தவன் ?
இதை அனுமதித்தால், அடுத்து "தமிழ்நாடு" என்ற நம் நாட்டின் பெயர் மீதும் கை வைக்க துணிவார்கள்.
# தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !
_எஸ்.எஸ்.சிவசங்கர்.

கருத்துகள் இல்லை: