செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

துக்ளக் சோ குடும்பம் RSS குருமூர்த்திக்கு நெருக்கடி ... RSS ஊதுகுழலாகவே துக்ளகை மாற்றிவிட்டாராம்

மின்னம்பலம் :“கடந்த சில நாட்களாகவே ஆடிட்டர் குருமூர்த்தியைப் பற்றிய சர்ச்சைகள் வட்டமடித்தபடி இருக்கின்றன. ’துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து குருமூர்த்தியை விலகச் சொல்லி நெருக்கடி அதிகமாகியிருக்கிறது’ என்பதுதான் அந்த சர்ச்சை. இது சம்பந்தமாக விவரமறிந்தவர்களிடம் பேசினேன். ‘துக்ளக் ஆசிரியரான சோ இறந்த பிறகு அந்தப் பொறுப்பு ஆடிட்டர் குருமூர்த்தி கைக்குப் போனது. சோ இருந்த சமயத்தில் துக்ளக் நிறுவனத்தில் ஒரு இயக்குனராக இருந்தவர் குருமூர்த்தி. அதனால் சோ மறைவுக்குப் பிறகு அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க சோ குடும்பம் நினைத்தது. அப்படி ஆசிரியர் பொறுப்புக்கு வந்த பிறகு, துக்ளக் பத்திரிகையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊதுகுழலாகவே மாற்றிவிட்டார் குருமூர்த்தி என்ற புகார்கள் வலுத்துவருகின்றன.

சோ இருந்தவரை பாஜகவை அவர் ஆதரித்தாலுமே, ஒரு பத்திரிகையாளராக நடுநிலையோடு நடந்து கொண்டார். எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்க்கவும் செய்தார். அதனால்தான் துக்ளக் பத்திரிகை என்பது எல்லோரும் வாசிக்கக்கூடிய அரசியல் பத்திரிகையாக இருந்தது. ஆனால், குருமூர்த்தி ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் பத்திரிகையில் காட்டிய ஆர்வத்தைவிட, பிஜேபியின் செய்தித் தொடர்பாளர் போலத்தான் நடந்துகொள்கிறார். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை டெல்லிக்கு அப்டேட் கொடுக்கும் ஒரு நபராகத்தான் அவர் செயல்பட்டுவருகிறார். இது வெளிப்படையாகவே ஊருக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது. சோ இருந்த சமயத்தில் துக்ளக் பத்திரிகையில் சர்குலேஷன் என்பது வேற லெவல். ஆனால், இப்போது அது மாதத்துக்கு மாதம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிட்டதாம்.
இது தொடர்பாக சோ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு தெரிந்த ஒரு ஏஜென்சி மூலமாக ஒரு சர்வே ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். அந்த சர்வேயில் துக்ளக் பத்திரிகையை ஏன் வாங்குவதில்லை என்ற கேள்விக்கு அதன் நீண்டகால வாசகர்கள் பலரும் சொன்ன ஒரே பதில்... குருமூர்த்தி. ‘துக்ளக் பத்திரிகையை பாஜவிடமும், ஆர்எஸ்எஸ் அமைப்பிடமும் குருமூர்த்தி அடகு வைத்துவிட்டார்’ என்பதுதானாம். ’அவரிடம் இனி நடுநிலையை எதிர்பார்க்க முடியாது. சோ என்ற பெயருக்காகத்தான் இவ்வளவு நாள் அந்தப் பத்திரிகையை வாங்கினோம். இனியும் அதை வாங்கினால், அது சோவுக்குச் செய்யும் துரோகம்..’ என ஒரு வாசகர் கைப்பட எழுதியிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து சோ குடும்பத்தினர் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார்கள்.
குருமூர்த்தியை உடனடியாக ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகச் சொல்லி சோ குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். குருமூர்த்தியோ, பிடி கொடுக்காமல் இருக்கிறாராம். அவரை எப்படியாவது அனுப்பிவிட வேண்டும் என சோ குடும்பத்தினர் காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டார்கள். குருமூர்த்தியும் இது சம்பந்தமாக டெல்லியில் இருக்கும் சிலரோடு பேசியபடி இருக்கிறாராம்’ என்று சொன்னார்கள். ஆக, எந்த நேரத்திலும் அடுத்த மாற்றம் நிகழலாம்!” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
அதற்கு லைக் போட்டதுடன் அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது வாட்ஸ் அப். தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.
“கண்ணில் புரை நீக்க அறுவை சிகிச்சை செய்திருப்பதால், ஒரு வாரத்துக்கு ரெஸ்டில் இருக்க வேண்டும் என முதல்வருக்குச் சொல்லப்பட்டிருக்கிறதாம். குறிப்பாக டிவி பார்க்கக் கூடாது என்பது அவருக்கு டாக்டர்கள் கொடுத்த அட்வைஸ். வழக்கமாக இரவு 8 மணிக்குப் பிறகு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளைத் தவறாமல் பார்ப்பாராம் பழனிசாமி. விவாதங்களில் பங்கேற்றுப் பேசும் அதிமுக செய்தித் தொடர்பாளர்களிடம் நிகழ்ச்சி முடிந்த பிறகு போன் செய்து சில கரெக்‌ஷன்களைச் சொல்வாராம். ஆனால், கடந்த சில நாட்களாக டிவி பார்க்கவில்லை என்றாலும் ஆடியோ மட்டும் வைத்து விவாதங்களை கேட்டுக்கொண்டிருக்கிறாராம் முதல்வர். நேரடியாக யாரிடமும் போன் பேசாமல், தான் சொல்ல நினைப்பவற்றைத் தன் உதவியாளர் மூலம் சொல்லிவருகிறாராம்.
முதல்வர் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பதால், விவசாயிகள் போராட்டத்தைத் தள்ளி வைப்பதாக சொல்லி இருந்தார்கள். அந்த சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் முதல்வர் வீட்டிலிருந்து போன் போயிருக்கிறது. ‘சி.எம். உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னாரு...’ என்று சொல்லியிருக்கிறார் முதல்வர் உதவியாளர்”

கருத்துகள் இல்லை: