திங்கள், 24 ஏப்ரல், 2017

மோடியின் மேற்பார்வையில் பேரம் படிந்தது .... பன்னீர் பழனி ஆட்சி தொடரும்?

அதிமுக-வில் நடந்துவரும் களேபரக் காட்சிகளை முடிவுக்குக் கொண்டுவர மோடி முடிவெடுத்து விட்டார். அதன் தொடக்கமாக பன்னீர் அணியும் எடப்பாடி அணியும் இணைப்பு விழா நடத்த தேதி குறித்துவிட்டார்கள்.

அதிமுக-வின் ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தவர்களின் சதிகளை முறியடித்து ஆட்சியை நிலைநிறுத்திய சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருக்கிறார். சசிகலாவின் அரசியல் வாரிசான தினகரன், துணைப் பொதுச்செயலாளராக ஆனதிலிருந்து கட்சிக்குள் கலகம் உண்டானது. பன்னீர் வைத்திருந்த முதல்வர் பதவியை சசிகலாவின் குடும்பம் தட்டிப்பறித்ததால் மனமுடைந்த பன்னீர், மோடியிடம் சரணடைந்தார்.
‘மிஸ்டர் பணிவு பன்னீர்’ எனப் பவ்யமாக வலம்வந்தவர், அடுத்தடுத்து ஆடிய அரசியல் சதுரங்க ஆட்டத்தில் தினகரன், திவாகரன், சசிகலா என ஒட்டுமொத்த குடும்பத்தின் 20 ஆண்டுகால ராஜ்யத்தை வெட்டி வீழ்த்தியுள்ளார். எல்லாக் கதைகளில் வரும் காட்சியைப் போல, சிஷ்யனே குருவை வீழ்த்திய கதைதான் பன்னீர், சசிகலா குடும்பத்தை வீழ்த்திய கதையும். அமாவாசையில் நிறைவேறும் ‘அம்மா’வின் ஆசை!இப்போது சசிகலா, தினகரன் இல்லாத புதிய அதிமுக பிறக்கப்போகிறது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுக, ஜெயலலிதா வளர்த்த அதிமுக போல இல்லாமல், இது வேறு அதிமுக-வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பிரிந்துபோன இரு அணிகளையும் இணைக்க ஏப்ரல் 24ஆம் தேதி காலை 11 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக பன்னீர்செல்வம் அணி சார்பிலும் எடப்பாடி பழனிசாமி அணி சார்பிலும் தனித்தனியாக இரு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

பன்னீர் குழுவில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், பாண்டியராஜன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகிய ஏழு பேர் குழுவில் உள்ளனர்.
எடப்பாடி குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தங்கமணி, வீரமணி ஆகிய ஏழு பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடிந்ததும் முதல் வேலையாக மோடி இரு அணிகளையும் இணையச் சொல்லி பன்னீர்செல்வத்துக்கு உத்தரவு போட்டுள்ளார். இதனால், பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி அணியும் பயங்கர உற்சாகத்தில் இருக்கிறது.
இரு அணிகளிலும் என்ன பேச வேண்டுமென்று பழனிசாமிக்குப் பதமாகச் சொல்லியிருக்கிறது டெல்லி மேலிடம். அதன்படி, பன்னீர்செல்வத்துக்கு முதல் கட்டமாக நிதியமைச்சர் பதவியையும், அதிமுக-வின் பொதுச்செயலாளர் பதவியும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அடுத்ததாக முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமியின் அணியில் உள்ள ஒருவருக்கு கொடுக்கச்சொல்லி பேசி முடித்துள்ளார்கள். இதுதான் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் நடக்கவிருக்கிறது. மற்றபடி, பன்னீர் அணியில் மாஃபா பாண்டியராஜன், விஜயபாஸ்கர் வகித்துவரும் சுகாதாரத்துறை அமைச்சர் இலாகாவைக் கேட்டிருக்கிறார். கே.பி.முனுசாமியோ அதிமுக-வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியைக் கேட்டு கோரிக்கை வைத்துள்ளார். இந்த முடிவுகள் குறித்து மோடியிடம் முன்னரே குறிப்பிட்ட பன்னீர்செல்வம் அணியினர், மோடி சம்மதித்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளனர். ஆனால், டெல்லியில் இப்போது கட்சி, ஆட்சி ஆகிய இரு பதவிகளை மட்டும் பேசி முடித்துக்கொள்ளுங்கள். மற்ற விஷயங்களைப் பிறகு பேசிக்கொள்ளுங்கள் என்று கறாராக உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், பன்னீர்செல்வத்தின் அணியில் உள்ள எம்.எல்.ஏ.-க்கள் 11 பேரில் முதலாவதாகப் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்த மதுரை சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம், மதுரையைக் குறிவைத்து செல்லூர் ராஜூ பதவியைப் பறித்து தரச்சொல்லி பன்னீரிடம் கோரிக்கை வைத்துள்ளார். பன்னீரும் என்னசெய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு, ‘பொறுமையாக இருங்கள் மாணிக்கம். முதலில் ஒன்றாகக் கட்சியில் இணைவோம். பிறகு, நமக்கு பவர் வந்ததும் உங்கள் விருப்பம் நிறைவேறும்’ என்று சொல்லியிருக்கிறார்.
முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனன், கட்சியில் முக்கியப் பதவியைக் கேட்டதோடு நியமனப் பதவி ஏதாவது ஒன்றையும் கேட்டுள்ளார்.
நத்தம் விஸ்வநாதனோ, கட்சியில் பொருளாளர் பதவியைக் குறிவைத்து காத்திருக்கிறார். இப்போது பொருளாளர் பதவியிலிருக்கும் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் நத்தம் விஸ்வநாதனுக்கும் பத்தாண்டுகளுக்கு முன் ஆரம்பித்த பகையின் கணக்கைத் தீர்க்க இதுதான் சரியான நேரம் என்று காத்திருக்கிறார் நத்தம் விஸ்வநாதன். சமீப காலமாக பன்னீருடன் அதீத நெருக்கம் காட்டிய விஸ்வநாதன் கடைசியாக, ‘உங்களைவிட்டால் வேறு யாருண்ணே எனக்கு இருக்கா? எம்.எல்.ஏ.வாக இருந்திருந்தால் அமைச்சராகியிருப்பேன். உள்ளூரில் செல்வாக்கோடு வாழ்ந்துவிட்டு இப்போது கட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்வுகள் என திண்டுக்கல்லில் எங்கும் தலைகாட்ட முடியவில்லை. பதவியிலிருந்தபோது என்னால் பயனடைந்தவர்கள் இப்போது சீனிவாசனுடன் சேர்ந்துகொண்டு எனக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார்கள். இதெல்லாம் என் காலத்துக்குள்ளேயே நான் தீர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்த முறை நான் ஜெயிப்பேனா என்று எனக்கே தெரியாது. அதனால், இந்த முறை கட்சியின் பொருளாளர் பதவியை வாங்கிக்கொடுக்க வேண்டும்’ என்று பன்னீரின் காலைச் சுற்றிய பாம்புபோல பெரும் வன்மத்துடன் வலம் வருகிறார்.
பொன்னையனோ கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு என்ற ஒன்றை உருவாக்கி அதன் தலைவராகத் தன்னைப் நியமிக்கச் சொல்லி நித்தமும் பன்னீரிடம் பேசி வருகிறார்.
இறுதிக்கட்டமாக பி.எச்.பாண்டியனும் அவரது மகனான மனோஜ் பாண்டியனும் தான் சொல்லும் நபருக்கு சட்டத்துறையைக் கொடுக்க வேண்டுமென்று பன்னீர் செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்துவருகிறார்கள். இதுபோக, பன்னீர் அணியின் பல முக்கிய நபர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொறுப்புகளைக் கைப்பற்ற இப்போதே கோதாவில் இறங்கியுள்ளனர். இதுதான் பன்னீர் அணியின் இன்றைய நிலைமை.
அடுத்ததாக எடப்பாடி அணியில், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாதென்று முதல் சுற்று பேச்சிலேயே வேலுமணியும் தங்கமணியும் எடப்பாடிக்கு வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இவர்களின் பின்னணியில், 18 எம்.எல்.ஏ.-க்கள் ஒரே கோரஸாக எடப்பாடிதான் முதல்வர் என்று கோஷமிட்டு வருகிறார்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கரோ கடந்த ஒரு வார காலமாக அடிவயிறு கலங்கியபடியே அனைவரிடமும் பேசி வருகிறார். தன் அமைச்சர் பதவி பறி போய்விடுமோ என்று எந்த நேரமும் கலக்கத்தில் இருக்கிறார். கடந்த சில நாள்களாகவே சரியாகத் தூங்காமல் அவரது நண்பர்களிடம் தீவிரமாக ஆலோசனை செய்துவந்த விஜயபாஸ்கர் இப்போது தூக்க மாத்திரை துணை இல்லாமல் தூங்கப்போவதில்லை. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது பன்னீரிடம் அதீத நெருக்கம் காட்டி வந்தார் விஜயபாஸ்கர். தவிரத் தன்னை எப்பொழுதும் பன்னீரின் ஆதரவாளராகவும், சசிகலா குடும்பத்தின் தீவிர விசுவாசியாகவும் தன்னைக் காட்டிக்கொண்டு வந்தவர். கூவத்தூர் சம்பத்தை இவர் முன்னின்று நடத்தியதால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்குமென்று பெரும் கனவில் இருந்து வந்தார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதும் பயங்கர அப்செட்டான விஜயபாஸ்கர் தினகரனுடன் நெருக்கம் காட்டினார். எடப்பாடி பழனிசாமி குறித்து அவ்வப்போது தினகரனின் காதுகளில் போட்டு வந்தார். ரெய்டு சம்பவம் மட்டும் நடக்கவில்லையென்றால், நிலைமை வேறுவாக இருந்திருக்கும் என்று தனக்கு நெருக்கமாக இருந்தவர்களிடம் நேற்றுவரை புலம்பியிருக்கிறார். தற்போது விஜயபாஸ்கரின் பதவி அந்தரத்தில் தொங்குகிறது. அடுத்தபடியாக, மதுரையைச் சேர்ந்த தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜூ, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் பதவிகளும் எந்த நேரமும் பறிக்கப்படலாம். குறிப்பாக ஒரு மாவட்டத்தில் எதற்கு இரண்டு அமைச்சர்கள் என்று இப்போதே இருவரில் ஒருவரைக் காலி செய்ய களத்தில் இறங்கியிருக்கிறது ஓர் அணி. இந்தக் காட்சிகள்தான் அதிமுக-வின் இரு அணிகளுக்குள் நடப்பவை.
இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவே இரு அணிகளும் ஒன்றாக இணையவிருக்கிறது. இந்த இணைப்பு அறிவிப்பு வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி புதன்கிழமை அமாவாசையன்று முறைப்படி அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். முதற்கட்டமாக அதிமுக-வின் பொதுச் செயலாளராகவும் நிதியமைச்சராகவும் பன்னீர்செல்வத்தை அறிவித்துவிட்டு, முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி தொடரப்போவதாக அறிவிக்க இருக்கிறார்கள். ஒருவேளை கடைசி நேரத்தில், இந்த அறிவிப்பில் சிக்கலும் வரலாம். அப்படி வந்தால் அதற்கும் காரணம் டெல்லியாகத்தான் இருக்கும்.
கிட்டதட்ட ஓர் உறைக்குள் இரண்டு கத்திகளைப்போலத்தான். இறுதியில் ஏதாவது ஒரு கத்தி மற்றொரு கத்தியை உறையிலிருந்து வெளியேற்றும். வெளியேறும் கத்தி எப்போது யாரைக் குத்துமென்று இப்போது தெரியாது. ஆக அமாவாசையில் ‘அம்மாவின் ஆசை நிறைவேறப் போகிறது.
- சண்.சரவணக்குமார்  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: