திங்கள், 24 ஏப்ரல், 2017

தனுஷ் மரபணு சோதனைக்கு பின் வாங்கியது ஏன்? இன்னும் சந்தேகம் இருக்கிறது?

தனுஷ்நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று உரிமை கோரி மேலூர் கதிரேசன், மீனாட்சி தம்பதியர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம் என்று கதிரேசன் தரப்பு கூறியுள்ளனர். கதிரேசன், மீனாட்சி தம்பதியின்  மகனாக தனுஷ் இருக்க முடியாது என்று நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறியுள்ள தீர்ப்பில், வேறு என்ன மாதிரியான  காரணங்களை குறிப்பிட்டுள்ளார் என்று பார்ப்போம்.;"கதிரேசன் தம்பதியரின் வாதங்களின்படி பார்க்கையில், தங்களுக்கு பிறந்த கலைச்செல்வன் என்ற மகன் பிறந்து 11 ஆம் வகுப்பு படிக்கும் வரை தங்களுடன் இருந்ததாகவும், அதன்பிறகு அவர் காணாமல்போனதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அவர் எழுதி வைத்துச் சென்றதாக கூறப்படும் கடிதத்தில், தனக்கு மனநிலை சரியில்லாத காரணத்தினால் தனது பெற்றோர் இருபது கோயில்களுக்கு அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். ஆனால், கடிதத்தில் எங்குமே தான் திரைப்படத்தில் நடிக்கச் செல்வதாக குறிப்பிடவில்லை.


இதேபோல தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணமானபோதும் கதிரேசன் தம்பதியர் எவ்வித பிரச்னையும் செய்யவில்லை.

 ஆரம்பத்தில் எங்களுக்கு பணம் கொடுத்து வந்தார். அவர் பிரபலமடைந்த பின்னர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. எனவே எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறியிருந்தால் கூட பரிசீலிக்கலாம். மேலும், சிறுவயதில் காணாமல் போன எனது மகன்தான் தனுஷ் என்று கூறியிருந்தால் கூட ஏற்கலாம். ஆனால், பதினோறாம் வகுப்பு படிக்கும் வரை தங்களுடன் இருந்த மகன் காணாமல் போனதாகவும், அவர்தான் பின்னாட்களில் தனுஷ் என்ற பெயருடன் திரைப்படங்களில் நடிப்பதாகவும் கூறுவதை ஏற்க முடியவில்லை. இதற்கு போதுமான ஆதாரங்களையும் அவர்கள் தரப்பில் சமர்பிக்கவில்லை.
  
 அதேபோல 15.2.2002- ல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால், 17.6.2002-இல் கலைச்செல்வன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இருந்தே நடிகர் தனுஷ் 2002 மார்ச் 15 முதல் திரைப்படத்துறையில் பணியாற்றுவது தெளிவாகிறது.
 
 நடிகர் தனுஷ் திரைப்படங்களில் ரெளடியாகவும், பெற்றோரை மதிக்காதவராகவும் நடித்துள்ளார் என்றெல்லாம் கதிரேசன் தம்பதியினர் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர். பழைய திரைப்படங்களில் நடிகர் நம்பியார் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஆனால், நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்லவராக இருந்துள்ளார். நடிப்பு என்பது வேறு, நிஜ வாழ்க்கை என்பது வேறு.
 
கதிரேசன் தம்பதியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் 13.4.1987 பிறந்த தேதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனை ஆவணங்களில் பிறந்த தேதி 7.11.1985 என்று உள்ளது. இதுபோன்ற கூற்றுகள் கதிரேசன் தம்பதியரின் வாதங்களை மேலும் வலுவிழக்கச் செய்கிறது. இவர்கள் தரப்பில் வழக்குத் தொடர எவ்வித முகாந்திரமும் இல்லை.
  
4.10.2016 அன்று கதிரேசன் தம்பதியர் தரப்பில் நடிகர் தனுஷிற்கு வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கஸ்தூரி ராஜாவால் கதிரேசன் தம்பதியர் உயிருக்கு ஆபத்துள்ளது. இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நீங்களும் இயக்குநர் கஸ்தூரி ராஜாவும் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். மேலும், கதிரேசன் தம்பதியரின் பராமரிப்பிற்காக மாதம் ரூ.65 ஆயிரம் வீதம் கடந்த ஓராண்டிற்குச் சேர்த்து ரூ.7 லட்சத்து 85 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் தொணியில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிடுவது போல வழக்குரைஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது தவறு. நோட்டீஸில் கூறப்பட்டுள்ளவை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இதுபோன்ற பல காரணங்களால் கதிரேசன் தம்பதியர் மீது இந்த நீதிமன்றத்திற்கு சந்தேகம் எழுகிறது.
 
 மேலும், கலைச்செல்வன்தான் தனுஷ் என்பதை நிரூபிக்க மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று கதிரேசன் தம்பதியர் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த வழக்கிலும் மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது. 2002-2003 இடைப்பட்ட காலங்களில் காணாமல்போன தங்களது மகன் கலைச்செல்வன்தான் தனுஷ் என்பதை நிரூபிக்க கதிரேசன் தம்பதியரிடம் போதிய ஆதாரங்கள் இல்லை. முகாந்திரம் இல்லாத ஒரு வழக்கில் மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது.

  கதிரேசன் தம்பதியர் தரப்பில் மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களையும், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களையும் பரிசீலித்தபோது கதிரேசன் தம்பதியரின் கோரிக்கையில் முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை. இதனால் இந்த வழக்கை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு திருப்பி அனுப்ப முடியாது. கதிரேசன் தம்பதியரின் மகன் உண்மையில் காணாமல் போய் இருக்கலாம் ஆனால், அவர் தான் தனுஷ் என்று கூற முடியாது. எனவே கதிரேசன் தம்பதியரின் வழக்கை ரத்து செய்யக்கோரிய நடிகர் தனுஷின் மனு ஏற்கப்படுகிறது. தனுஷிற்கு எதிராக மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கதிரேசன்  தம்பதியர் தொடர்ந்துள்ள வழக்கு ரத்து செய்யப்படுகிறது. கதிரேசன் தம்பதியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட துணை மனுக்கள் முடிக்கப்படுகின்றன" என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.  விகடன்

கருத்துகள் இல்லை: