பார்பரா ஹாரிஸ் வொயிட், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியையாக பணியாற்றியவர். மேலும் இந்தியாவின் முறைசாரா பொருளாதாரம் குறித்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர். இந்தியாவின் முதல் பத்திரிகையாக கருதப்படும் ‘மெட்ராஸ் கூரியர்’ இவரிடம் ஒரு நேர்காணலை நிகழ்த்தியுள்ளது. அதில் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் வெளியான டிமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பழிப்பு நடவடிக்கையானது, நாட்டின் ஜனநாயம், விவசாயம், கறுப்புப் பணம் மற்றும் சமூகம் ஆகியவற்றில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று விளக்குகிறார் பார்பரா ஹாரிஸ் வொயிட்.
டிமானிடைசேஷன் குறித்து உங்களது பார்வை என்ன?
இதை டிமானிடைசேஷன் என்று குறிப்பிடாதீர்கள். இது நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சட்டத்துக்கு புறம்பானவையாக மாற்றுவது. தமிழில் பணமதிப்பழிப்பு, ரூபாய் நோட்டுத் தடை என்றும் இந்தியில் நோட் பண்டி என்றும் குறிப்பிடுகின்றனர். இது தவறாக செயல்படுத்தப்பட்ட தவறான நடவடிக்கை. யாரை குறி வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அவர்களை இது ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம்.
இந்தியா இது போன்ற கடுமையான பரிசோதனை முயற்சிகளுக்கு தயாராக இருக்கிறதா?
ஒருவேளை மக்கள் அனைவரும் அதற்கு தயாராக இருந்து, அதை செயல்படுத்துவதற்கான முன்தயாரிப்புகள் செய்வனே செய்யப்பட்டிருந்தால் இந்த திட்டம் எந்த பிரச்னைகளுமின்றி நிறைவேற்றப்பட்டிருக்கும். பணமதிப்பழிப்பு நடவடிக்கையை கடுமையான பரிசோதனை முயற்சி என்று நீங்கள் குறிப்பிடுவதிலிருந்தே இந்தியா இதற்கு தயாராக இல்லை என்பது உறுதியாகிறது.
2.4 கோடி புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணிகள் மிக மெதுவாக நடந்து கொண்டிருப்பதே மற்றொரு பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு சமமானது. மேலும் புதிய ரூபாய் நோட்டுகளின் சிறய வடிவம் மிக முக்கியமான பிரச்னை. நாட்டிலுள்ள 2.2 லட்சம் ஏ.டி.எம்-களிலும் இந்த புதிய ரூபாய் நோட்டை வைப்பதற்கான வடிவமைப்பு செய்யப்படவில்லை. இது புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகத்தின் வேகத்தை கடுமையாக கட்டுப்படுத்தியது. வங்கிகளை திணறச் செய்தது. இதனால் 100 ரூபாய் நோட்டுகளின் தேவை அதிகரித்தது. சில நகர்ப்புற பெட்ரோல் நிலையங்களில் பணத்தை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. எனினும் கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணம் மாற்றும் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. வங்கிகளில் பணம் மாற்றுவதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் விதிக்கப்பட்டன. அவை அடிக்கடி மாற்றத்திற்கும் உள்ளாயின. இது அனைத்து தரப்பு மக்களையும் – குறிப்பாக கிராமப்புற மக்களை – பெரும் சிரமத்துக்குள்ளாக்கியது. அதேபோல பணத்தை டெபாசிட் செய்வதிலும், மாற்றித் தருவதிலும் முறைகேடுகள் நடந்துள்ளன.
இந்த திட்டம் கடுமையனதா? பரிசோதனை முயற்சியா? என்று பார்ப்பதற்கு முன்னர், முதலில் இது ஒரு சட்ட விரோதமான, அரசியலமைப்பிற்கு எதிரான, சர்வாதிகார, ஒழுங்கற்ற, நம்பிக்கைக்கு மாறான ஒரு திட்டமாக கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது. சிறந்த மார்க்சிஸ்ட் பொருளாதார நிபுணர் பிரபாட் பட்நாயக் முதல், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் வரை, மற்றும் முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் முதல் அமெரிக்காவின் பொருளாதார இதழான ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் தலைமை பதிப்பாசிரியர் ஸ்டீவ் ஃபோர்ப்ஸ் வரை இந்த திட்டத்துக்கு எதிராகவே கருத்து கூறியுள்ளனர். (ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ஜனவரி 2017 இதழில் ஸ்டீவ் ஃபோர்ப்ஸ் இது குறித்து எழுதியுள்ளார்). இப்படி அனைத்து தரப்பிலிருந்தும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு வரும்போது, சந்தேகத்துக்கு இடமின்றி எங்கேயோ மிகப்பெரிய பிழை நேர்ந்துள்ளது என்றுதானே பொருள்.
இந்திய ஜனநாயகம் மற்றும் அதன் குடிமக்களுக்கு இது எத்தகைய மாற்றத்தை வழங்கியுள்ளது ?
இங்கு பொருளாதரத்துக்கு முன்பாக அரசியலைக் குறிப்பிடுவதுதான் சரியானது. ஏனெனில் இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஒன்றும் ஏதோவொரு பொருளாதார புத்தகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதல்ல என்பதை நாம் அறிவோம்.
அரசியல் கட்சிகள் பெரிய தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக, தேர்தல் செலவுகளுக்கான உச்ச வரம்புகளைத் தாண்டி, செலவு செய்வது பல ஆண்டு காலமாகவே நடந்து வருகிறது. எனவே இந்திய ஜனநாயகம் இதுபோன்ற முறைகேடான நிதிகளை ஆதரித்தே வந்துள்ளது. 2004 – 2011 வரையிலான காலகட்டத்தில் இந்திய அரசியல் கட்சிகள் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட 75 சதவிகித நிதிக்கான ஆதாயம் எதுவென தெரியாமல் இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு, இந்த ஆதாயமற்ற பணமானது, கள்ளச் சந்தை மற்றும் ஜனநாயக முறைகேடுகள் மூலமாக திருப்பி செலுத்தப்படுகிறது.
பணமதிப்பழிப்பு அறிவிப்பு இது போன்றவற்றை மாற்றுமா என்பதுதான் கேள்வி.
பணத்தை பதுக்கி வைத்திருக்கும் எதிர்கட்சியினரிடம் வேண்டுமானால் இத்திட்டம் லேசான அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். ஆனால் பாஜக-வினர் எந்த பிரச்னையுமின்றி அதன்போக்கில் செயல்படுவர். இந்த திடீர் அறிவிப்பு ஆளும் கட்சியினருக்கு எந்தவித அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியாவதற்கு சில தினங்கள் முன்பாகவே, பாஜக-வின் முக்கிய புள்ளிகள் சிலர் மிகப்பெரிய முதலீட்டில் நிலம், வீட்டு மனை போன்றவற்றை வாங்கியுள்ளனர். குஜராத் உள்ளிட்ட நகரங்களில், வருங்கால ஸ்மார்ட் சிட்டிகளாக கருதப்படும் இடங்களில் பெருமளவு தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது. கட்சி நிதியில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்கான எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.
பெரும்பாலான வாக்காள பெருமக்கள் ரூ.3,500 முதல் ரூ.7,500 வரை ஊதியம் பெறுபவர்களாக இருக்கிறார்கள். பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய இவர்கள், பணமதிப்பழிப்பு அறிவிப்பால் ஊழல்வாதிகள் வெளிச்சத்துக்கு வருவார்கள் என்றும் பாதிக்கப்படுவார்கள் என்றும் நம்ப வைக்கப்பட்டனர். அதுதான் சமீபத்திய உள்ளாட்சி மற்றும் இடைத் தேர்தல்களில் பாஜக-வின் வெற்றிக்கு காரணம். மோடியின் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகளாக சித்தரிக்கப்பட்டார்கள். இந்தியா போன்ற சமத்துவமின்மை அதிகமுள்ள நாடுகளில் ஒரு திட்டத்துக்கு எதிரான மனோபாவத்தை சீராக கொண்டு செல்வது கடினமானது.
இது இந்தியாவின் முறைசாரா பொருளாதாரத்தின் மீது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?
எது முறைசாரா பொருளாதாரம்? முறைசாரா பொருளாதாரம் என்பது இன்னமும் பல்வேறு அர்த்தங்களை கொண்ட குழப்பமான ஒன்றாகவே உள்ளது. ஒரு சிலருக்கு வரிவிதிப்பின் ஆரம்ப நிலையான ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு கீழ் நடக்கும் வர்த்தகம் என்றும், வேறு சிலருக்கு 10க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டு நடத்தப்படும் அமைப்பு சாரா வர்த்தகம் என்றும் பொருள்படுகிறது. இது பதிவு செய்யப்படாத (அ) பதிவு செய்யப்பட்டும் குழுமமாக்கப்படாத நிறுவனங்களை உள்ளடக்கியது. இவை தொழிலாளர் சட்டத்துக்கு உட்படாத சிறு நிறுவனங்களாகும். இது இந்தியாவின் 93 சதவிகித மனிதவளத்தை கொண்டுள்ளது. அதற்கான எந்தவித எழுத்துப்பூர்வ ஒப்பந்தமோ, பணி உரிமங்களோ இருப்பதில்லை.
முறைசாரா பொருளாதாரம் என்பது வறுமையான ஒன்றாவகவே நீண்ட காலத்துக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறைசாரா பொருளாதாரத்தின் பங்கு 25 முதல் 70 சதவிகிதம் வரை இருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஒருபுறம் நாட்டின் முறைசார் பொருளாதாரம் வேலையின்மையால் பாதிக்கப்பட்டு வருகையில், மறுபுறம் முறைசாரா பொருளாதாரம் அதிக வேலைவாய்ப்பை வழங்குவதோடு, நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.
முறைசாரா பொருளாதாரம் ரொக்கப் பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்டது. இதன் 80 – 90 சதவிகித தொழிலாளர்கள் தங்களது வருமானம் (அ) ஊதியத்தை ரொக்கமாகவே பெறுகின்றனர். 95 சதவிகித இந்திய நிறுவனங்கள் 5க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டே இயங்கி வருகின்றன. 1990க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்நிறுவனங்களில் பணிபுரியும் சராசரி தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 (அ) 3 ஆகக் குறைந்தது.
முறைசாரா நிதி என்பது 70 - 80 சதவிகிதம் கிராமப்புற கடன்களாக உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவிகிதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. முறைசாரா பொருளாதாரத்தை முறைசார் பொருளாதாரமாக மாற்றுவதில் வங்கிகளும் சிறிதளவு பங்காற்றி வருகின்றன. ஒரு சில சிறு வணிக நிறுவனங்களின் முதலாளிகள் 10 வங்கிக் கணக்குகளைக் கூட வைத்திருக்கின்றனர். எனினும் அவர்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு இன்னும் தயாராக வில்லை. எனவே இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை முறைசாரா பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயத்தில் ஐந்து மடங்கு பாதிப்பு :
பணமதிப்பழிப்பு நடவடிக்கை விவசாய உற்பத்தியாளர்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. விலைவாசி சரிவு, வருவாய் இழப்பு போன்றவை நேரடி பாதிப்புக்குக்கான காரணிகள். இவை தவிர, பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய பரிட்சையமற்ற வங்கிகளுக்கு அலைந்ததில் நேரமும் பணமும் இழப்பு, முறைசாரா இடைத் தரகர்கள் மூலம் பணத்தை மாற்றியதில் அவர்களுக்கு கமிஷன் என்ற பெயரில் 20 -30 சதவிகிதம் செலுத்தியது என, ஏகப்பட்ட இழப்புகளை விவசாயிகள் சந்தித்துள்ளனர்.
அழுகக்கூடிய/அழுகாத உற்பத்திப் பொருட்கள், வேளாண் துறை சார்ந்த மூலப் பொருட்கள் போன்றவற்றின் மொத்த விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதேபோல் சில்லறை வர்த்தகத்திலும் பண நெருக்கடியால் விற்பனை பாதிப்பு ஏற்பட்டது.
அதேபோல இந்த அறிவிப்பு வெளியான நேரம் முக்கியமானது. பண்டிகை காலமாகக் கருதப்படும் நவம்பர் டிசம்பர் மாதத்தில் அனைத்து பொருட்களின் விற்பனையும் அமோகமாக இருக்கும். அப்படியான நேரத்தில் இந்த பண மதிப்பழிப்பு அறிவிப்பு வெளியாகி, விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில் கடனுக்கு விற்பது, வந்த விலைக்கு விற்பது, விற்பனையாகாதவற்றை குப்பையில் வீசுவது என்பதாகவே விவசாய விளைபொருட்களின் விற்பனை நடந்துள்ளது.
போக்குவரத்து காரணமாக மீன் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடரும்.....
தமிழில் : பீட்டர் ரெமிஜியஸ் மினம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக