வியாழன், 2 பிப்ரவரி, 2017

தேஜ்பகதூர் யாதவ் விஆர்எஸ் ரத்து! ... எல்லை பாதுகாப்புப் படை வீரரின் விஆர்எஸ் ரத்து!


மின்னம்பலம் : எல்லை பாதுகாப்புப் படை வீரர் தேஜ்பகதூர் யாதவை கைது செய்து கொடுமைப்படுத்துவதாக அவரின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த மாதம், எல்லை பாதுகாப்புப் படையின் 29வது பட்டாலியனில் பணியாற்றிவரும் தேஜ்பகதூர் யாதவ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தினமும் குளிரில் 11 மணி நேரம் கால்கடுக்க தாங்கள் நிற்பதாகவும், பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்கச்செல்வதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தங்களுக்கு அரசு வழங்கும் உணவுப் பொருட்களை, உயர் அதிகாரிகள் சட்ட விரோதமாக விற்பனை செய்து பணமாக்கிக் கொள்கிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, தேஜ்பகதூர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர்மீது பலமுறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது என்றும் குடிகாரர் எனவும் பாதுகாப்புப் படை கருத்து தெரிவித்தது.

அதற்குப் பதிலளித்த அவரது மனைவி ஷர்மிளா, மனநலம் பாதிக்கப்பட்டவரை எப்படி பாதுகாப்புப் பணிக்காக எல்லைக்கு அனுப்பிவைத்தீர்கள்? உயர் அதிகாரிகளின் ஊழலை வெளிக்கொண்டு வந்த தனது கணவரை திங்கட்கிழமை முதல் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்துள்ளது. இதுகுறித்து அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். வீரர்கள் நலனுக்குத்தான் அவர் அவ்வாறு செய்ததாகத் தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர், ராணுவ வீரர்கள் குறை தீர்க்க புகார் பெட்டி, வாட்ஸ் அப் எண் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேஜ்பகதூரின் மனைவி, ‘எனது கணவர் தனக்கு விஆர்எஸ் வேண்டும் என கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அவர் சமூக வலைதளங்களில் உயர் அதிகாரிகள் குறித்து வீடியோ வெளியிட்டதால் அவரது விண்ணப்பத்தை உயர் அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர். பின்னர், அவரை கைது செய்து மனதளவில் கொடுமைப்படுத்தி வருகின்றனர்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர், ‘கடந்த ஜனவரி 31ஆம் தேதியுடன் தேஜ்பகதூர் யாதவ் ஓய்வு பெறவேண்டியது. ஆனால் அவருக்கு எதிராக உள்ள விசாரணை நிலுவையில் உள்ளதால், அவரது விஆர்எஸ் ரத்து செய்யப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: