வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

ஸ்டாலின் கேள்வி :சர்க்கரை மானிய இழப்பு! பன்னீர்செல்வம் வாயை திறக்காமல் இருப்பது ஏன்? டயபெட்டீசை கட்டுப்படுத்தவோ?

சர்க்கரை மானிய இழப்பு குறித்து மத்திய அமைச்சரே எதிர்த்திருக்கின்ற சூழலில் அதிமுக அரசு வாய் திறக்காமல் இருப்பது கவலையளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: “மத்திய நிதி நிலை அறிக்கையில் சர்க்கரை மானியத்திற்கு வெறும் 200 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டு இருப்பதால், இனி மாநில அரசுகளுக்கு சர்க்கரைக்கு வழங்கும் மான்யத்தை மத்திய அரசு நிறுத்தி விடும்” என்று வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு சர்க்கரை வழங்கும் திட்டத்திற்கு எதிர்காலத்தில் மாபெரும் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்தியாவிலேயே சிறந்த முறையில் பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்தும் மாநிலம் தமிழகம் என்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது உச்சநீதிமன்றமே பாராட்டியது. அப்படியொரு சிறந்த பொது விநியோகத் திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியாக இந்த “மான்ய ரத்து அமைந்து விடக்கூடாது” என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.


இன்று சர்க்கரை மான்யம் ரத்து என்று ஆரம்பித்து, பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, கெரோசின் போன்றவற்றுக்கும் ஆபத்து ஏற்பட்டு, ஒட்டுமொத்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் “பொது விநியோகம்” எட்டாக் கனியாக ஆகிவிடக்கூடாது. ஏனென்றால், இப்போதே 01.01.2017 முதல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மற்றும் பாமாயில் ஆகியவற்றை பொது விநியோகத் திட்டத்தில் வழங்க அரசு ஆணை வழங்காமல் காலதாமதம் செய்வதால், மக்களுக்கு கொடுக்கப்படும் பொருள்கள் ஏதும் நியாய விலைக் கடைகளில் கிடைக்காமல் தவிக்கிறார்கள் என்பதையும் அதிமுக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழகத்தில் உள்ள 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 386 குடும்ப அட்டைகளில், 10 லட்சத்து 79 ஆயிரத்து 387 குடும்ப அட்டைகள் சர்க்கரை மட்டுமே பெறும் “வெள்ளை” நிற குடும்ப அட்டைகளாக இருக்கின்றன. இதுதவிர காவல்துறையினருக்கு வழங்கப்படும் “காக்கி கார்டுகள்”, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட வேண்டிய அட்டைகளாக இருக்கின்றன. இப்போதுள்ள நடைமுறையின் படி, பொது விநியோகத் திட்டத்தில் “வெள்ளை நிற” சர்க்கரை கார்டுகளுக்கு மாதம் 2 கிலோ சர்க்கரையும், அரிசிக்கு பதிலாக கூடுதலாக 3 கிலோ சர்க்கரையும் வழங்கப்படுகிறது. இந்த அளவுகோலின்படி பார்த்தால், மாதத்திற்கு 35 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் சர்க்கரை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சர்க்கரை ஒரு கிலோ 13 ரூபாய் 50 பைசாவிற்கு வழங்கப்படுவதால், மத்திய அரசு ஒரு கிலோவிற்கு 18 ரூபாய் 50 பைசா மான்யத்தை மாநில அரசுக்கு வழங்குகிறது. இப்போது இந்த மான்யத் தொகயைத்தான் மத்திய அரசு ரத்து செய்யப் போகிறது என்றும், அதற்கு மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இது மட்டுமின்றி, “உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைகள் என்று வகைப்படுத்துதல் இல்லை” என்பதால் உணவு பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்திட்ட மாநிலங்களுக்கு, இந்த சர்க்கரை மான்யம் ரத்து செய்யப்படும் என்றும் அந்த செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு பாதுகாப்புச் சட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்துப் போட்டதால் இந்த ஆபத்து தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கிறதோ என்று அஞ்சுகிறேன். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் உரையில் உணவு பாதுகாப்புச் சட்டத்தில் ஏன் கையெழுத்திட்டோம் என்று விவரித்துள்ள அதிமுக அரசு, உணவு பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டதால் இப்படியொரு சர்க்கரை மான்ய இழப்பு பற்றி பேரவைக்கே தெரிவிக்காமல் இருந்தது மிகுந்த மனவருத்தத்தை தருகிறது. இதனால் தான் “முதலில் மறுத்து விட்டு பிறகு ஒப்புதல் அளித்த மத்திய அரசின் திட்டங்களால் தமிழகத்திற்கு என்ன பலன் என்பதை விளக்கி ஒரு வெள்ளை அறிக்கை தாருங்கள்” என்று தொடர்ந்து நான் ஆரம்பம் முதலாகவே அதிமுக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால் பிடிவாதமாக அதற்கு அதிமுக அரசு மறுத்து வருகிறது. அது மட்டுமின்றி, மத்திய உணவு அமைச்சரே எதிர்த்து இருக்கின்ற சூழ்நிலையில், இந்த “சர்க்கரை மான்ய இழப்பு” குறித்து ஏன் இதுவரை அதிமுக அரசு வாய் திறக்காமல் இருக்கிறது என்பதும் மர்மமாக இருக்கிறது.
மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய மான்யம் பறிபோகும் சூழ்நிலையில் கூட முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அமைதி காப்பது பெரும் கவலையளிக்கிறது. ஆகவே மீண்டும் ஒரு முறை அதிமுக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், “உதய் திட்டம்” “உணவு பாதுகாப்புச் சட்டம்”, “சரக்கு மற்றும் சேவை வரி சட்டம்” போன்றவற்றிற்கு சம்மதித்துள்ள அதிமுக அரசு இப்படி என்னென்ன மாநில நலன்களை, உரிமைகளை தாரை வார்த்துள்ளது என்பது பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் மத்திய அரசு சர்க்கரை மான்யத்தை ரத்து செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த அதிமுக அரசு அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் “மான்யம் நீக்கும்” காரணத்தைக் காட்டி, பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் சர்க்கரை விலையை ஏற்றியோ, சர்க்கரையின் அளவை குறைத்தோ மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தி விடக் கூடாது. உணவு பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்துப் போட்ட ஒரே காரணத்திற்காக தமிழகத்தை தண்டிக்கும் இந்தப் போக்கை கைவிட்டு, சர்க்கரைக்கு இதுவரை வழங்கி வந்த மான்யத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.tamilthehindu

கருத்துகள் இல்லை: