செவ்வாய், 31 ஜனவரி, 2017

Marx Anthonisamy : விசாரணைக் கமிஷன் : நாடகத்தின் அடுத்த காட்சி..

ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை, பாதிக்கப்பட்ட குப்பத்து மக்களுக்கு இழப்பீடு முதலியவற்றைச் சற்று முன் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார்.
கடந்த ஒருவாரமாக "சமூக விரோதிகள் ஊடுருவல்" என்றெல்லாம் நேரடியாகவும் தன் எடுபிடியாக இருக்கும் காவல்துறையின் மூலமாகவும் தீவிரமாகப் பேசித் திரிந்து தோற்றுப்போன தமிழக அரசு இந்தப் பிரச்சினையை அமுக்கி மூட அடுத்த ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மூலம் மூன்று மாதத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கப்படுமாம்.
எத்தனை விசாரணைக் கமிஷன்களைப் பார்த்துள்ளோம். உங்கள் ஜெயலலிதா அரசு 2011ல் பரமக்குடியில் கடைத்தெருவில் நின்றிருந்த ஆறு அப்பாவி பட்டியல் சாதி மக்களைச் சுட்டுக் கொன்று விட்டு ஓய்வு பெற்ற நீதி பதி சம்பத் தலைமையில் கமிஷன் அமைத்த கதையை நாங்கள் மறந்து விடவில்லை. சுட்ட போலீசைப் புகழ்ந்த அந்த ஆணையம் சுடுப்பட்ட மக்களைக் கேவலப்படுத்தி அளித்த அறிக்கையை நாங்கள் மறக்கவில்லை.

பதவியில் உள்ள ஒரு நீதிபதி, அவரோடு இந்திய அளவில் மதிக்கப்படும் மனித உரிமைச் செயலாளிகள் அடங்கிய ஒரு ஆணையத்தை அமைக்குமா தமிழக அரசு?
இல்லை ஓய்வு பெற்ற நீதிபதிதான் என்றால் போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது அவர்களை சமாதானப் படுத்த முயன்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் தலைமையில் அந்த ஆணையத்தை அமைக்க ஓ.பி.எஸ் அரசு முன்வருமா?
ஒன்று உறுதி. தமிழக அரசு, அதன் காவல்துறை உயரதிகாரிகள், அதன் எடுபிடி ஊடகங்கள் மூலம் போராட்டத்திற்கு எதிராகப் பசப்பிய பொய்களைத் தமிழக மக்கள் நிராகரித்ததைக் கண்டு அரசு சற்றே பின்வாங்கத் தொடங்கியுள்ளது.
இத்தகைய தருணங்களில் வழக்கமாக அரசுகள் தம் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரு தந்திரம்தான் இந்த விசாரணை ஆணையம் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது

கருத்துகள் இல்லை: