வியாழன், 2 பிப்ரவரி, 2017

முன்னாள் மத்திய அமைச்சர் அகமதுவின் மரணம் கிளப்பியுள்ள பட்ஜெட் சர்ச்சை

முன்னாள் வெளியுறவு இணையமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவருமான இ.அகமது (78), தில்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை காலமானார்.
கேரள மாநிலத்தின் மலப்புரம் மக்களவை தொகுதியின் எம்.பி.யான அவர், பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அகமதுவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்சைச் சுவாசம் அளிக்கப்பட்டது.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக, மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

தலைவர்கள் இரங்கல்: அகமதுவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது சுட்டுரைப் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
""கேரள மாநிலத்தின் முன்னேற்றத்துக்காகவும், மேற்காசிய நாடுகளுடன் இந்தியாவின் உறவை வலுப்படுத்துவதற்கும், முஸ்லிம்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் அரும்பாடுபட்டவர் அகமது'' என்று பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து, தில்லியில் அகமதுவின் உடல் வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்துக்குச் சென்று பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, அனந்த் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் செளகதா ராய் என பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இவர்களைத் தவிர, ஏ.கே.அந்தோணி, வயலார் ரவி, ரமேஷ் சென்னிதலா போன்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் அகமதுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மக்களவை இன்று செயல்படாது: மறைந்த அகமதுவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மக்களவை வியாழக்கிழமை (பிப்.2) செயல்படாது என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.  தினமணி

கருத்துகள் இல்லை: