வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

2-2-2000 இல் தர்மபுரியில் எரிக்கப்பட்ட மூன்று வேளாண் பல்கலை கழக மாணவிகள்


மெரினா மாணவ புரட்சியாளர்களும்” அவர்களின் அதி தீவிர ஆதரவாளர்களும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய மூன்று முக்கிய தேதிகள்.
2-2-2000: முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து, அந்த கட்சிக்காரர்கள் மாநிலம் தழுவிய அளவில் “ஆர்பாட்டங்கள்” செய்யவேண்டுமென கட்சித் தலைமை பிறப்பித்த அவசர உத்தரவைத் தொடர்ந்து, அதிமுகவினர் மாநிலம் முழுவதும் நடத்திய மாபெரும் வன்முறையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் மூன்றுபேர் பேருந்தில் வைத்து உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்டனர். அதற்காக அந்த பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஜெயலலிதா கொடும்பாவி கொளுத்தப்பட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின.

10-05-2001 அன்று நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் “கொங்கு மண்டலம்” ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு வாக்களித்து அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்குவர முக்கிய பங்காற்றுகிறது. அதைத் தொடர்ந்து ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதால் தேர்தலில் நிற்கவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெ ஜெயலலிதா தமிழக முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்கிறார்.

25-06-2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 24 ஆவது பட்டமளிப்பு விழாவில் அன்றைய தமிழக முதல்வராக இருந்த ஜெ ஜெயலலிதா தமிழக விவசாய வளர்ச்சியில் ஆற்றிய மாபெரும் பங்களிப்பை பாராட்டி “பெருமைசேர் அறிவியலாளர்” என்கிற கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் மூவர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டதற்கும் அதே பல்கலைக்கழகம் அந்த மரணத்துக்கு காரணமானவராக பரவலாக விமர்சிக்கப்பட்டவரை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்ததற்குமான கால இடைவெளி வெறும் மூன்று ஆண்டுகள்.
“புரட்சி சாமியாடிகளும்” அவர்களின் உடுகையடி சித்தர்களும் உணர்ச்சிவசப்படாமல் இந்த பதிவின் முதல் வாக்கியத்தை மீண்டும் ஒருமுறை படிக்கவும். முகநூல்பதிவு 

கருத்துகள் இல்லை: