சனி, 4 பிப்ரவரி, 2017

கனிமொழி: டிஜிடல் இந்தியாவில் வாளியால் கடலை தூய்மையாக்கும் கொடுமை !


இரண்டு சரக்கு கப்பல்கள் நேருக்குநேர் மோதியதால் கடலில் கச்சா எண்ணெய் கொட்டிய பகுதியான எண்ணூர் பகுதியில் திமுக-வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., கனிமொழி நேரில் சென்று இன்று ஆய்வு செய்து, அங்குள்ள மீனவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கடலில் இருந்து எண்ணெய்யை அகற்ற பல வாரங்கள் ஆகும். சில வெளிநாடுகளில் பல மாதங்கள்கூட ஆகியிருக்கிறது. அதனால் இதை 2 அல்லது 3 நாட்களில் அகற்றப்பட்டுவிட்டது என்று சொல்லிவிட்டுப்போனால் அது நியாயம் இல்லை.
இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு என்ன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு வந்தால் அதை வாங்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் அவர்களுடைய எதிர்காலம் மற்றும் அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே, அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும்.
பல பிரச்னைகள் இதில் உள்ளது. இந்தப் பிரச்னையை ஒரே கோணத்தில் அணுக முடியாது. அதனால் அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் அந்த ஒற்றுமை இங்கு இல்லை. கடலோர காவல்படையினருக்கும், துறைமுக அதிகாரிகளுக்கும் இடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பே இல்லை. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் எண்ணெய்க் கழிவை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படவில்லை. இன்றுதான் பலருக்கு கை உறையும், கால் உறையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால்கூட, நச்சுக்காற்றை சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுடைய உடலை பாதுகாப்பதற்கு எதுவும் இல்லை.
வாளியாலும் கையாலும்தான் இந்த எண்ணெய்க் கழிவை அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களது உடல் நலம் பாதிக்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா பற்றி பேசும் நாட்டில், எண்ணெய்க் கழிவுகள் வாளியில்தான் அள்ளி அகற்றப்படுகிறது. அரசு வழங்கியுள்ள அறிக்கையில்கூட வாளி வழங்கப்பட்டுள்ளது என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது நாம் எந்தநிலையில் இருக்கிறோம் என்பது தெரிகிறது. முறையான தொழில்நுட்ப வல்லுநர்கள் யாரும் இங்கு இல்லை. இதச் சரிசெய்யக்கூடிய அனுபவம் வாய்ந்தவர்களும் இங்கு இல்லை. இந்தப் பிரச்னை குறித்து திமுக தொடர்ந்து பேசி வருகிறது. நாடாளுமன்றத்தில் நான் பேசியிருக்கிறேன். அதற்கான பதிலையும் அவர்கள் அளித்திருக்கிறார்கள். மேலும், இன்று பார்வையிட்டபின்னர் உள்ள நிலையை மீண்டும் நாடாளுமன்றத்திலும், மத்திய அமைச்சர்களிடத்திலும் எடுத்துக் கூறவுள்ளோம்’ என்று கனிமொழி கூறியுள்ளார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: