திங்கள், 9 ஜனவரி, 2017

மக்களின் பணத்தை பலாத்காரமாக மோடி புடிங்கி விட்டார் .. சீதாரம் யெச்சுரி கடும் தாக்குதல்

setharamanரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தின் மூலம் மக்களின் பணத்தை பிரதமர் நரேந்திர மோடி பலவந்தமாக பறித்துக் கொண்டுவிட்டார் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சாடினார்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த நடவடிக்கை ஊழலற்ற பொருளாதாரத்துக்கு வழிவகுக்கும் புனிதமான நடவடிக்கையாகும் என்றும் ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்தபோதிலும் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என்றும் ஆளும் பாஜக பெருமிதத்துடன் சனிக்கிழமை தெரிவித்திருந்தது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மூலம் கருப்புப் பணம் வைத்திருப்போரிடம் உள்ள பணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்காக மோடி உதவி செய்து வருகிறார். மேலும் பொருளாதார வளர்ச்சி எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று கூறுவதன் மூலம் மத்திய அரசு மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகை குறித்து விவரங்கள் ஏதும் மத்திய அரசு வெளியிடாதபோது கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் பாஜக வெற்றி கண்டுள்ளதாக எப்படி கூறிக் கொள்ள முடியும்?
பிரதமர் மோடி மக்களின் பணத்தை பலவந்தமாக வங்கிகளில் டெபாசிட் செய்ய வைத்துவிட்டு, மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிக்கிறார்.
பொருளாதார வளர்ச்சி வீதத்தை கணக்கிடும்போது அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களை கணக்கிடாமல் முதல் 6 மாதங்களை மட்டுமே கணக்கிட்டுவிட்டு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கவில்லை என்று பாஜக அரசு பெருமிதத்துடன் கூறுகிறது என்று யெச்சூரி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  தினமணி

கருத்துகள் இல்லை: