செவ்வாய், 10 ஜனவரி, 2017

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிப்பு- தற்கொலை செய்த 17 விவசாயிகள் குடும்பங்களுக்கு ரூ3 லட்சம் நிதி உதவி

சென்னை: தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் பொய்த்து போனதால் தற்கொலை செய்து கொண்ட 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாத வகையில் விவசாயம் பொய்த்து போனதால் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோயுள்ளனர். இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் குழு மாநிலத்தின் பல பகுதிகளில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு அறிக்கை இன்று முதல்வர் பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக இன்று முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சியில் இருந்து மக்களைக் காப்பாற்ற பெரும் பொருட்செலவு ஏற்படும். இதற்காக மத்திய அரசிடம் விரைவில் வறட்சி நிவாரணநிதி கோரப்படும். கூட்டுறவு வங்கி கடன்கள் அனைத்தும் மத்திய கடன்களாக மாற்றப்படும்.

விவசாய தொழிலாளர்களுக்கு வேலை தர ரூ3,400 கோடியில் ஏரி, குளங்கள் தூர் வாரப்படும். தற்கொலை செய்து கொண்ட 17 விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா ரூ3 லட்சம் வழங்கப்படும். விவசாயம் பொய்த்த அதிர்ச்சியால் உயிரிழந்தோர் விவரங்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நிலவரி தள்ளுபடி செய்யப்படுகிறது. கிராமப்புற ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 100 நாட்கள் என்பது 150 நாட்களாக உயர்த்தப்படும். கால்நடை தீவனப் பற்ற்றாக்குறையை போக்க ரூ78 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார் tamiloneindia.com

கருத்துகள் இல்லை: