வெள்ளி, 13 ஜனவரி, 2017

பணமில்லா வர்த்தகம் : மக்களை நச்சுக் கூண்டுக்குள் தள்ளிய மோடி !

முழுவதும் ரொக்கமற்ற பொருளாதார பரிவர்த்தனையே இந்தியா போன்ற ஏழை நாடுகளில் சாத்தியமில்லை என்பதை வளர்ந்த பணக்கார நாடுகளின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.
ணமதிப்பழிப்பு குறித்த அறிவிப்பு வெளியான சமயத்தில் அது கருப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழித்து விடும் என மோடியும் அவரது பக்தர்களும் சொல்லிக் கொண்டனர். நவம்பர் 8 அறிவிப்பிற்கு முன் சுழற்சியில் இருந்த 15.44 லட்சம் கோடியில் சுமார் மூன்றிலிருந்து ஐந்து லட்சம் கோடி வரை திரும்ப வராது என்றனர். அதே போல் சுழற்சியில் இருப்பதாகச் சொல்லப்பட்ட கள்ளப் பணமும் திரும்ப வராது என்றும் பீற்றிக் கொண்டனர்.


பணமதிப்பழிப்பு குறித்த அறிவிப்பு வெளியான சமயத்தில் அது கருப்புப்பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழித்து விடும் என மோடியும் அவரது பக்தர்களும் சொல்லிக் கொண்டனர்.
ஆனால், இவையெல்லாம் வெற்றுச் சவடால்கள் என்பது தற்போது சர்வ நிச்சயமாக நிரூபணமாகியுள்ளது. டிசம்பர் 30-ம் தேதி வரை சுழற்சியில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்களில் 97 சதவீதம் (சுமார் 15 லட்சம் கோடி) வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் சில பத்தாயிரம் கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட ரூபாய்த் தாள்கள் நேபாள் மற்றும் பூடான் நாடுகளின் மத்திய வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கவுள்ளது.
கருப்புப் பண ஒழிப்பு என்கிற ஊத்தைப் பீற்றல் எதார்த்தத்தில் காலை வாரி விட்டவுடன், மோடி பக்தர்கள் வேறு சில வாதங்களைத் தூக்கிக் கொண்டு வந்தனர்.
முதலாவதாக, சுழற்சியில் இருந்த பணம் மொத்தமும் வங்கியின் கட்டுப்பாட்டில் வருவது ஒரு வகையில் நல்லது தான் என்றும் அவ்வாறு வந்த பின் ஒவ்வொரு வங்கிக் கணக்கையும் ஆராய்ந்து யாரெல்லாம் கணக்கில் காட்டாத, வருமான வரி கட்டாத பணத்தைச் செலுத்தினர் என்பதைக் கண்டறிந்து விடுவோம் என்கிற வாதத்தை வைக்கின்றனர்.
மோடி பக்தர்களின் சிறப்பே தங்கள் முகத்தில் அப்பிக் கிடக்கும் சாணியைக் குறித்து கிஞ்சித்தும் வெட்கப்படாமல் அடுத்தவன் முதுகில் ஒட்டியிருக்கும் சுண்ணாம்பைப் பார்த்து கூச்சலிடுவது தான். வங்கிக்குள் வராது என்று சொன்ன பணம் வந்துள்ளதற்கு எந்த விளக்கத்தையும் சொல்லாமல் இந்தப் புதிய வாதத்தை முன்வைக்கின்றனர். அதாவது பூ விழுந்தால் உனக்குத் தோல்வி, தலை விழுந்தால் எனக்கு வெற்றி என்பது தான் இதன் சாரம்.
jaitley-modi
மோடி, ஜேய்ட்லி உள்ளிட்டவர்கள் தமது உண்மையான நோக்கமே ரொக்கமற்ற பரிவர்த்தனை தான் என்பது போல் பேசத் துவங்கினர்.
ஒரு வாதத்திற்காக இதை ஒப்புக் கொள்வோம். 2015 நவம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்குகள் இருந்ததாகச் சொல்கிற உலக வங்கியின் கணக்கெடுப்பு ஒன்று (World bank – gallup survey). இந்த ஓராண்டில் திருவாளர் 56 இன்சு அறிவித்த ஜன்தன் திட்டத்தின் மூலம் குறைந்தது மூன்று சதவீத அளவுக்கு வங்கிக் கணக்குகள் அதிகரித்துள்ளதென எடுத்துக் கொண்டால், இன்றைய தேதிக்கு சுமார் 70 கோடி வங்கிக் கணக்குகள் உள்ளன. நவம்பர் 8 அறிவிப்பிற்குப் பின் இதில் ஒரு சதவீத கணக்குகளில் அதிக வைப்பு நிதி செலுத்தப்பட்டதாக எடுத்துக் கொண்டாலும் 70 லட்சம் என்றாகிறது.
எழுபது லட்சம் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து, அதன் உரிமையாளரின் வருமானத்தை ஆராய்ந்து, அவரிடம் விளக்கம் கேட்டு, அந்த விளக்கத்தை பரிசீலித்து, அவர் செலுத்தியது வருமானத்திற்கு அதிகமானதா இல்லையா என்பதைக் கண்டறியும் அளவுக்கு நம்மிடம் அரசு இயந்திரமோ, நிர்வாக வசதிகளோ, தொழில்நுட்ப வசதிகளோ இல்லை என்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம். கோடிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்ட (தோராயமாக) சில ஆயிரம் கணக்குகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்றால், அவ்வாறு செலுத்தியவர்கள் விவரங் கெட்டவர்களாக இருக்கப் போவதில்லை. அப்படியே கடும் சிரமங்களுக்கிடையே சலித்து எடுத்து சில பத்து பேர்களை பிடித்தாலும் நீதிமன்றம், வழக்கு நடைமுறைகள் என வருடக்கணக்கில் இழுத்துக் கொண்டு போகும் வாய்ப்பும் வசதியும் அவர்களுக்கு உண்டு. இதை வாய்தா ராணியின் வழக்கிலேயே பார்த்து விட்டோம். அதையும் மீறி பல வருட போராட்டங்களுக்குப் பின் அபராதத்தை வசூலித்தால் அது பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்பின் முன் வெறும் பொறியுருண்டையாகவே இருக்கும்.
இரண்டாவதாக, பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் பின் ரொக்கமில்லாப் பொருளாதாரப் பரிவர்த்தனை முறைகள் வளர்ச்சி பெறும் என்றும், இவ்வகையான பரிவர்த்தனைகளே வெளிப்படையானவைகள் என்றும், எல்லோருடைய வருமானமும் வெளிப்படையாக இருக்கும் போது வரி கட்டுவோரின் எண்ணிக்கையும் கூடுமென்றும், இதன் மூலம் வரி ஏய்ப்பை தடுத்து விட முடியும் என்றும் சொல்லிக் கொண்டனர். சொல்லப் போனால், கருப்புப்பணம் மற்றும் கள்ளப்பண ஒழிப்பு என்கிற பல்லவியோடு துவங்கிய ஒப்பாரி, தனது சரணத்தில் ரொக்கமற்ற பரிவர்த்தனையை நோக்கி நகர்ந்தது. மோடி, ஜேய்ட்லி உள்ளிட்டவர்கள் தமது உண்மையான நோக்கமே ரொக்கமற்ற பரிவர்த்தனை தான் என்பது போல் பேசத் துவங்கினர்.
சொல்லி வைத்தாற் போல் ரொக்கமற்ற பரிவர்த்தனைச் சேவையை வழங்கும் ரிலையன்சின் ஜியோ மணி குறித்த அறிவிப்பும் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியானது. ஒருபக்கம் உச்சநீதிமன்றத்தில் பணமதிப்பழிப்பு தொடர்பாக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், 500 ரூபாய்த் தாள்களை அச்சிட ஏற்படும் தாமதமானது அரசின் முடிவின் படியே ஏற்படுகிறது என தெரிவிக்கிறார். நாடெங்கும் திட்டமிட்ட ரீதியில் பணத்தாள்களை புழக்கத்தில் இருந்து நீக்கும் வெறியோடு மத்திய அரசு செயல்பட்டு வந்த நிலையில், கிட்டத்தட்ட 125 கோடி மக்களையும் கழுத்தைப் பிடித்து ரொக்கமற்ற பரிவர்த்தனைக்குள் தள்ளி விட்டனர்.
ஆனால், நடந்தது என்ன? மக்கள் ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டனரா?
ரொக்கமற்ற பரிவர்த்தனையின் வளர்ச்சி குறித்து தொகுப்பான புள்ளி விவரங்களை ரிசர்வ் வங்கியே வெளியிடும் என்றும், அப்போது தான் மோடியின் வெற்றியை உலகம் அறிந்து கொள்ளும் என்றும் பக்தர்கள் கூத்தாடிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய தேதி வரை ரிசர்வ் வங்கியிடம் இருந்து அப்படி எந்த தொகுப்பான விவரங்களும் வெளி வரவில்லை. மாறாக வழக்கமாக வெளியிடும் தனித் தனி வங்கிகளின் பரிவர்த்தனை விவரங்களை மட்டுமே வெளியிட்டுள்ளது. அந்த விவரங்களை ப்ளூம்பர்க் பத்திரிகை தொகுத்துள்ளது. அது பற்றிய ஒரு சித்திரம் கீழே
Digital-Transactionsஇதில் 7 மடங்காக அதிகரித்துள்ள UPI பரிவர்த்தனையின் மொத்த மதிப்பே வெறும் 700 கோடி தான். 2 லட்சத்துக்கும் அதிகமான தொகை பரிமாறிக் கொள்ளப்படும் முறையான RTGS 15 சதவீதம் வீழ்ந்துள்ளது. 2 லட்சத்துக்கும் குறைவான தொகை பரிமாறிக் கொள்ளப்படும் முறையான IMPS மட்டும் கணிசமாக (32 சதவீதம்) அதிகரித்துள்ளது. ஈ-வாலட்டுகள் உள்ளிட்ட முறைகளில் பரிவர்த்தனையின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருந்தாலும், அந்தப் பரிவர்த்தனைகளின் சராசரி பண மதிப்பு குறைவு என்பதால் மொத்த மதிப்பும் குறைவாகவே உள்ளது. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, ரொக்கமற்ற பரிவர்த்தனை 12 சதவீதம் வீழ்ந்துள்ளது.
தடை செய்யப்பட்ட ரூபாய்த் தாள்கள், தடை செய்யப்படாத ரூபாய்த் தாள்கள், வங்கிகளிடம் இருப்பில் இருந்தவை, அரசு கஜானாவின் இருப்பு, ரிசர்வ் வங்கியின் இருப்பு என அனைத்தையும் சேர்த்து நவம்பர் 4ம் தேதி சுழற்சியில் இருந்த மொத்த ரூபாய்த் தாள்களின் மதிப்பு 17.97 லட்சம் கோடிகள். இதே மோடியின் அறிவிப்புக்கும் பிந்தைய முதல் வங்கி வேலை நாளான நவம்பர் 11ம் தேதி 17.88 கோடியாக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த டிசம்பர் 28-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, டிசம்பர் 23-ம் தேதியன்று சுழற்சியில் இருந்த மொத்த பணத்தாள்களின் மதிப்பு வெறும் 8.55 லட்சம் கோடியாக சுருங்கியுள்ளது. இது புதிதாக அச்சிட்ட 2000 மற்றும் 500 தாள்களின் மதிப்பையும் உள்ளடக்கியது.
departmental-store
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, ரொக்கமற்ற பரிவர்த்தனை 12 சதவீதம் வீழ்ந்துள்ளது.
ஆக, அச்சிட்ட ரொக்கத்தின் புழக்கம் சரிபாதியாக சுருங்கியுள்ள அதே நேரம், மோடி பக்தர்கள் பீற்றிக் கொண்டதைப் போல் ரொக்கமற்ற பரிவர்த்தனையும் சொல்லிக் கொள்ளும்படி உயரவில்லை. சுருக்கமாகச் சொன்னால் மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துள்ளது. தற்போது வேறு வழியின்றி ரொக்கமற்ற பரிவர்த்தனைக்குள் பிடித்துத் தள்ளப்பட்டவர்களும் கூட நாளை ரொக்கத் தாள்கள் புழக்கத்திற்கு வந்தபின் மீண்டும் பழைய பாணியிலான பரிவர்த்தனை முறைகளுக்கே திரும்பிச் சென்று விடுவார்கள் என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
இது வரை மோடியும் அவரது அடிமைகளும் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் லட்சிய நோக்கங்கள் என்பதாகச் சொன்ன எந்தக் காரணங்களும் நாளது தேதி வரை நிறைவேறவில்லை – அவ்வாறு நிறைவேறும் என்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்பது பட்டவர்த்தனமாக நிரூபணமாகியுள்ளது. எனினும், தனது கோமாளித்தனமான நடவடிக்கையில் ஏதாவது ஒரு ‘வெற்றியை’ காண்பித்தே தீர்வது என்கிற வெறியில் உள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு.
கள்ளப்பணம் குறித்த தமது அலப்பறைகளின் சாயம் வெளுத்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் வசம் வந்துள்ள தாள்களை மீண்டும் சோதித்து அதில் கள்ளப்பணம் இருக்கிறதாவென ஆராய்ந்து வருவதாக அறிவித்துள்ளனர். ஒருவேளை இந்த மறுசோதனையில் சில கோடி கள்ளப்பணம் இருப்பது தெரிய வந்தாலும் கூட, இவைகளுக்குச் சமமான நல்ல நோட்டுகளை ஏற்கனவே வங்கிகள் மாற்றிக் கொடுத்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு மாற்றிச் சென்றவர்களைப் பிடிப்பதும் வைக்கோல் போரில் ஊசியைத் தேடும் சமாச்சாரம் என்பதே எதார்த்தம்.
அடுத்து, ஆங்காங்கே வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைகளில் பிடிபடும் கணக்கில் காட்டாத கருப்புப் பணத்தை ஆரவாரமாக விளம்பரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் மக்களிடையே கருப்புப் பணம் ஒழிகிறது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 500 கோடிகள் பிடிபட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. இந்நடவடிக்கைகள் துவக்கத்தில் அவர்கள் எதிர்பார்த்தது போன்ற பொதுக்கருத்தை உண்டாக்கினாலும், பிடிபட்ட தொகையில் கட்டுக்கட்டாக இருந்த 2000 ரூபாய்த் தாள்களை பத்திரிகைகளில் பார்த்த மக்கள் சீக்கிரம் விழித்துக் கொண்டனர்.
இரண்டாயிரம் ரூபாய்க்கு ஏ.டி.எம் இயந்திரங்களின் முன்னே வரிசையில் தாம் நிற்கும் போது கருப்புப்பண முதலைகளோ கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்துடன் பிடிபடுவதைப் பார்க்கும் மக்கள், பணமதிப்பழிப்பு நடவடிக்கை எந்த வகையிலும் கருப்புப் பணத்தை ஒழிக்காது என்பதை உணரத் துவங்கினர்.
அடுத்து முழுவதும் ரொக்கமற்ற பொருளாதார பரிவர்த்தனையே இந்தியா போன்ற ஏழை நாடுகளில் சாத்தியமில்லை என்பதை வளர்ந்த பணக்கார நாடுகளின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் ரொக்கமற்ற பரிவர்த்தனை எந்த அளவுகளில் நடக்கிறது என்பதை கீழே உள்ள படத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்:
cashless
(Source : Bloomberg)
இந்நாடுகளில் தடையற்ற மின்சாரம், தடையற்ற இணைய இணைப்பு, பரவலான கல்வி அறிவு, இணைய அறிவு ஆகியவை உள்ளன. ஒரே ஒரு வார்தா புயலுக்கு ஒரு மாதமாக இணையத் தொடர்பு அறுபட்டுப் போகும் நாட்டைக் குறித்து நாம் பேசுகிறோம். சுமார் 25 சதவீதம் பேருக்கு கல்வியறிவே இல்லை. இணையப் பயன்பாட்டின் அளவும் பாதிக்கும் குறைவு. இவ்வாறிருக்க மக்களை ரொக்கமற்ற பரிவர்த்தனைக்குள் நெட்டித் தள்ளுவதை மூடத்தனம் என்றும் சொல்லலாம் – பாசிசம் என்றும் சொல்லலாம்.
125 கோடி மக்களின் பொருளாதார நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, உளவு பார்ப்பது, கட்டுப்படுத்துவது, அம்பானி போன்ற ஒருசில தனிப்பட்ட முதலாளிகளின் கையில் ஒப்படைப்பது, வங்கி வலைப்பின்னலுக்குள் வந்த லட்சக்கணக்கான கோடியை முதலாளிகளுக்குத் தாரைவார்ப்பது, முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் அறிவிப்பது மற்றும் பரந்துபட்ட மக்களிடம் வரிபிடுங்குவது – இவை தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் மோடி அடைய நினைக்கும் லட்சியங்கள். இந்த பாசிச உள்நோக்கங்களைக் நிறைவேற்றுவதற்கே ரொக்கமற்ற பரிவர்த்தனைக்குள் அதற்கு எந்த வகையிலும் தயாரில்லாத மக்களை வலுக்கட்டாயமாக திணிக்க முயல்கிறார் மோடி.
கிட்டத்தட்ட மொத்த பொருளாதாரத்தையும் நாட்டையும் மக்களையும் ஹிட்லரின்  நச்சுப்புகைக் கூண்டுக்குள் தள்ளி விட்டுள்ளார் மோடி.
– சாக்கியன்.  வினவு
செய்தி ஆதாரம்:
In India bank account penetration surges, but 43% dormant
Cashless Economy Still a Fantasy for India
Demonetisation complete failure? 97% of banned notes back in banks: Report
Value Of Online Payments Falls In December Despite Government’s Digital Blitz
Across the aisle | Cashless economy: A distracting mirage

கருத்துகள் இல்லை: