வியாழன், 12 ஜனவரி, 2017

7 காங்கேயம் காளைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்திய நாம் தமிழர் கட்சி:

வீரர்கள், காளைகளுக்கு பரிசுகள் உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடலூர் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றதையடுத்து அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடலூர் அடுத்த திருவந்திபுரம் கெடிலம் ஆற்றின் அருகே நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் இருந்து 7 காங்கேயம் காளைகள் கொண்டுவரப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வீரர்களும், கடலூரைச் சேர்ந்த 5 வீரர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றிபெற்ற திண்டுக்கல் நகரைச் சேர்ந்த பிரபாகரன், தமிழ்மாறன் ஆகியோருக்கு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் 5 காளைகளின் உரிமையாளர்களுக்கும் கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு நடந்து முடிந்த பின்னர் அங்கு வந்த காவல்துறையினர், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு உள்பட இரண்டு பேரை கைது செய்தனர். இதற்கு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டவர்கள், நாம் தமிழர் கட்சியினர், ஜல்லிக்கட்டை பார்வையிட வந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். சினிமா சூட்டிங் என கூறியதால் அந்த இடத்திற்கு வரவில்லை என்றும், பின்னர் ஜல்லிக்கட்டு நடப்பது அறிந்து போலீசார் வந்ததாகவும் கூறப்படுகிறது. சுந்தரபாண்டியன்  நக்கீரன்


கருத்துகள் இல்லை: