கலைஞர் முகநூல் பக்கம்.:
வெள்ளப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக தமிழக அரசு இனியும் சுணக்கம்
காட்டாமல் உடனடியாக சுறுசுறுப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக
தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அடையாறு மீண்டும்
பெருக்கெடுத்தால், அங்கே வாழும் மக்களுக்கு தப்பிக்க வழியே இல்லை. மற்றொரு
வெள்ளம் வந்தால், மாநகரைப் பாதுகாப்பதற்கு அரசால் எந்தவிதமான
முன்னேற்பாடும் செய்யப்படவில்லை என்று மக்கள் அஞ்சுகிறார்கள் என்ற
தலைப்பில், 'தி இந்து' ஆங்கில நாளிதழில் செய்தி வந்துள்ளது.
ஜெயலலிதா அரசின் நிர்வாகத்தில், மிகப் பெரிய சோதனையாக கடந்த ஆண்டு
தமிழகத்தில், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும், குறிப்பாக
சென்னை மாநகரிலும் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கும் - அந்த வெள்ளத்தை
எதிர்கொள்கிற வகையில் அரசின் சார்பில் எந்தவிதமான முன்னேற்பாடுகளும்
செய்யவில்லை.
வானிலை ஆய்வுத் தரப்பினரால் தரப்பட்ட எச்சரிக்கை அறிவிப்புகளையும் லட்சியம்
செய்யாமல் இருந்ததால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழக்கவும்,
லட்சக்கணக்கானோர் உடைமைகளை இழக்கவும், நடுத்தெருவில் நாடோடிகளாகத்
திரியவுமான நிலைக்கு ஆட்பட்டு, சொந்த ஊரிலேயே குழந்தைகள் மற்றும் பெட்டி
படுக்கையுடன் அகதிகளைப் போல் அலைந்து அல்லல்படவுமான நீங்கா சோகம் கப்பிக்
கொண்டது.
மேலும், நிர்வாகக் கோளாறுகளுக்கிடையே ஜெயலலிதாவின் அலட்சியமும், அதிமுக
அரசிலே பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள் உருவாக்கிய நிர்வாகச் சிக்கல்களும்
இணைந்து, மாபெரும் உயிர் மற்றும் உடைமை இழப்புக்கு அடிப்படைக் காரணமாக
அமைந்து விட்டதை இந்த நாடே நன்கறியும்.
மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் உரிய நேரத்தில் தண்ணீரைத் திறக்க,
அனுமதியை வழங்காமல் தாமதப்படுத்தி, அதன் காரணமாகத் தான் சென்னையில்
மாபெரும் வெள்ளம் ஏற்பட்டு, மனித இழப்புகளும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்து
இழப்புகளும் ஏற்பட வழி வகுத்தது என்பதை பல்வேறு அரசியல் கட்சித்
தலைவர்களும், வல்லுநர்களும் விடுத்த அறிக்கைகள் தெளிவாக்கியுள்ளன.
இது குறித்து முறையான நீதி விசாரணை வேண்டுமென்று நானே தமிழக ஆளுநரைச்
சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன். ஆளுநரும், அந்தக் கோரிக்கை மீது உரிய
நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அந்தக் கோரிக்கை மீது எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மாத்திரமல்ல, இந்த அரசின் சார்பாக வெள்ள
நிவாரண உதவித் தொகை வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்படுவதாகவும்,
அதிமுகவினர் கொடுக்கின்ற பட்டியலிலே உள்ளவர்களுக்கே நிவாரணம்
வழங்கப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்தன. பாதிக்கப்பட்ட
நான்கு லட்சம் குடும்பங்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை .
இனியாவது ஆட்சிக் கட்டிலிலே வீற்றிருப்போர், கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்
பேரிடரை நினைவிலே கொண்டு, மக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில்
இப்போதிருந்தாவது முனைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று
எதிர்பார்க்கிறேன்.
இந்தச் செய்தி வந்துள்ள இதே நேரத்தில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி
சஞ்சய் கிஷன் கவுலும், நீதியரசர் மகாதேவனும் 10-9-2016 அன்று அளித்துள்ள
இது சம்பந்தமான தீர்ப்பு ஒன்றும் முக்கியமானதும் நினைவில் கொள்ளத்
தக்கதுமாகும். சென்னையில் திடீரென ஏற்பட்ட வெள்ளம் குறித்து தொடர்புடைய
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், வெள்ளச் சேதங்களைத் தடுக்க
நடவடிக்கை எடுக்கக் கோரியும் வழக்கறிஞர் சூரியபிரகாசம் உள்ளிட்ட பலர் உயர்
நீதிமன்றத்திலே ஒரு வழக்கு தொடுத்தனர்.
அதை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசிடம் பதில் கேட்டுப் பெற்றனர். அந்தப்
பதிலில் அடையாறு மற்றும் கூவம் நதிக் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புககளை அகற்ற
நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்குப் பின், நேற்றையதினம் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், 'அடையாறு
மற்றும் கூவம் நதிக் கரையோரமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக பொதுப்பணித்
துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை
ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அளவிலான
பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை இதுவரை செயல்படுத்தவில்லை.
கடந்த 2010ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில்
பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைப்பதற்கான வழிவகை செய்யப் பட்டுள்ளது. ஆனால்
கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ஆலோசனைக் குழுவை அமைக்க எந்த நடவடிக்கையையும்
மாநில அரசு எடுக்கவில்லை. இந்தக் குழுவை 15 நாட்களுக்குள் அமைக்க வேண்டும்.
நீராதாரங்கள் உள்ள பகுதிகளுக்குப் பாதுகாப்பு தர வேண்டுமென்று அதிகாரி
கொடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையும் மாநில அரசு செயல்படுத்தி ஒரு
மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று
தெரிவித்திருக்கிறார்கள்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துகள் அதிமுக அரசுக்குப்
பெருமை சேர்ப்பன அல்ல. மேலும் சென்னை மாநகரிலும், வெள்ளம் பாதிக்கும்
மாவட்டங்களிலும் வாழும் மக்களின் உயிரைப் பாதுகாப்பது குறித்த பிரச்சினை.
இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு இனியும் சுணக்கம் காட்டாமல் உடனடியாகச்
சுறுசுறுப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் ஒரு செயற்கைப் பேரிடரை
சென்னை மாநகரமோ, மற்ற மாவட்டங்களோ நிச்சயம் தாங்காது'' என்று கருணாநிதி
கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக