சனி, 27 ஆகஸ்ட், 2016

பச்சமுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்..

மின்னம்பலம்.காம் :‘பச்சமுத்துவை கைது செய்தாலும் சிறையில் அடைக்கக் கூடாது என்பதில் காவல்துறை அதிகாரியொருவர் ரொம்பவே ஆர்வம் காட்டினார் என்பதை, நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருந்தேன். ஆனால், அவரது முயற்சிகள் பலிக்கவில்லை. நேற்று மாலை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பச்சமுத்துவுக்கு முதலில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த மருத்துவர்களோ, ‘இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு இங்கே டெஸ்ட் எடுக்க முடியாது’ என்று சொல்லிவிட, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பச்சமுத்து. அங்கே பரிசோதனைகள் முடிந்தபிறகு, ரகசியமாகவே வெளியில் அழைத்துவரப்பட்டார். காத்திருந்த மீடியா கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மூன்று போலீஸ் வண்டிகள் வெவ்வேறு திசைகளில் பறந்தன.
எப்படியும் சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்குத்தான் அழைத்துவருவார்கள் என மீடியா அங்கே காத்திருந்தது. ஆனால் இரண்டு மணிநேரம் பச்சமுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை’ என்பதுதான் அந்த மெசேஜ்.
‘அப்படியானால் எங்கே போனார் பச்சமுத்து? சென்ட்ரலில் இருந்து சைதாப்பேட்டைக்கு வர இரண்டு மணி நேரம் ஆகுமா? என்று கேட்டது ஃபேஸ்புக்’

‘சொல்றேன். ராஜீவ் காந்தி மருத்துவமனையிலிருந்து கிளம்பிய போலீஸ் வண்டி, நேராக அடையாரில் உள்ள ஒரு பிரபல ஸ்டார் ஹோட்டலுக்குள் போயிருக்கிறது. மீடியாவுக்குத் தெரியாமல் அந்த ஹோட்டலுக்கு பச்சமுத்துவை அழைத்து வர வேண்டும் என்பது காவல்துறை உயர் அதிகாரியின் உத்தரவாம். அந்த ஹோட்டலில்தான் காவல்துறை உயரதிகாரியும் மஃப்டியில் வந்து காத்திருந்திருக்கிறார். கிட்டத்தட்ட, அரை மணி நேரத்துக்குமேல் பச்சமுத்துவுடன் அந்த காவல்துறை உயர் அதிகாரி பேசியிருக்கிறார். அப்போது, பச்சமுத்துவின் குடும்பத்தினர் சிலரும் உடன் இருந்திருக்கிறார்கள்.
‘நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனா, மேலிடத்தில் இருந்து பிரஷர் கொடுக்குறாங்க. என்னால எதுவும் செய்ய முடியல. தப்பா நினைச்சுக்காதீங்க’ என்றெல்லாம் அந்த காவல்துறை உயர் அதிகாரி பேசியதாகச் சொல்கிறார்கள். அப்போதுதான் பச்சமுத்து கண்கலங்கிவிட்டாராம். அவரது குடும்பத்தினர்கள்தான் அவரை சமாதானம் செய்திருக்கிறார்கள். பிறகு, அங்கேயே பச்சமுத்துவை சாப்பிடவைத்து போலீஸாருடன் அனுப்பிவைத்திருக்கிறார்கள். இப்படியான சம்பிரதாயங்களுக்குப் பிறகே, பச்சமுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்’ என்று, பதில் மெசேஜ் அனுப்பியது வாட்ஸ் அப்.
சற்று நேரத்துக்குப்பிறகு பேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது.
‘பச்சமுத்து விவகாரத்தைப் பொருத்தவரை, ஆளும் கட்சி ஆரம்பத்தில் பெரிதாக ஆர்வமும் காட்டவில்லை, தலையிடவும் இல்லை. நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கடுமை காட்டியபிறகே அரசின் கவனம் பச்சமுத்துவின் பக்கம் திரும்பியது. ஆளும்கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் இதுதொடர்பாக சில நாட்களுக்குமுன்பு பச்சமுத்துவுடன் பேசியிருக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையெல்லாம் உடனடியாக செட்டில் பண்ணுங்க. இல்லைன்னா தேவையில்லாத சிக்கல்களை சந்திக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்தாராம். அதற்கு பச்சமுத்து தரப்பிலோ ‘ஏங்கிட்ட பணம் கிடையாது. மதன் வரட்டும். வந்தபிறகு அதைப்பத்தி பேசுறோம்’ என்று சொல்லிவிட்டார்களாம். இந்தத் தகவல் மேலிடத்துக்குப் போயிருக்கிறது. பச்சமுத்து தரப்பில் சொன்ன தகவல்களைக் கேட்டு ஆளும்கட்சித் தரப்பில் செம கோபம் ஆகிவிட்டார்களாம். இனி வெயிட் பண்ணவேண்டாம் பச்சமுத்துவை உடனடியாக விசாரிக்கச் சொல்லுங்க. தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் தயக்கம்காட்ட வேண்டாம் என்று உத்தரவு வந்திருக்கிறது. அதன்பிறகே காவல்துறை ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறது’ என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது.

கருத்துகள் இல்லை: