சனி, 27 ஆகஸ்ட், 2016

கல்விக் கொள்ளையன் பச்சமுத்து – வீடியோ.. வினவு.காம்


ஏதாவது கைது செய்து கணக்கு காட்டவேண்டிய நிலை என்று வந்த பிறகு முதல்வர் அலுவலகத்தில் அனுமதி கேட்டிருக்கின்றனர். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு போன்று இந்த அனுமதியும் பல மணி நேரங்களுக்கு பிறகு வந்திருக்கிறது. ஒரு கொள்ளையரை கைது செய்ய எதற்கு முதல்வர் அனுமதி?
டந்த பத்து – பதினைந்து ஆண்டுகளில் எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பச்சமுத்துவிடம் தானாகவே பணத்தை பறிகொடுத்தவர்கள் பல பேர். அதில்  112 மாணவர்கள் தற்போது புகார் கொடுத்திருக்கின்றனர். இவர்களிடம் மதன் மூலமாக பச்சமுத்து கொள்ளையடித்த பணம் சுமார் 72 கோடி ரூபாய். இந்தக் கொள்ளைப் பங்கில் ஏற்பட்ட தகராறு காரணமாக மதன் தலைமறைவாக பச்சமுத்து தனக்கும் மதனுக்கும் தொடர்பில்லை என்று அலட்சியமாக கைவிரித்தார்.

பச்சமுத்துவின் புதிய தலைமுறை ஊடக செல்வாக்கு, பா.ஜ.க கூட்டணியின் பாதுகாப்பு, அ.தி.மு.கவிற்கு கப்பம் கட்டுவதால் உள்ள சலுகை காரணமாக பாரிவேந்தர் தரணியெல்லாம் ஜென்டில்மேனாக உலா வந்தார். இத்தகைய பெரும் பண மோசடி குறித்த புகாரை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் செய்தால் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வார்கள். ஆனால் மதனைத் தேடுகிறோம், காசி யாத்திரை போகிறோம் என்று போங்காட்டம் ஆடினார்கள். தெருவில் துப்பினாலே துப்பியவனை என்கவுண்டர் செய்ய வேண்டுமென்று குதிக்கும் ஊடகங்களோ இதில் கள்ளமவனம் சாதித்தன. இந்நிலையில் பல்வேறு தயக்கங்கள், தடைகள், ஆலோசனைகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை 26.08.2016 அன்று மதியம் போலிசார் பச்சமுத்துவை கைது செய்திருக்கின்றனர்.
இந்தக் கைதும் ஒரு பெற்றோர் தரப்பினருக்கான புகார் மட்டுமே. மீதி 111 புகார்களுக்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அதிலும் இறுதி வரை பச்சமுத்துவைக் கைது செய்யக் கூடாது என்று உயர் போலீஸ் அதிகாரிகளும், தமிழக அரசின் உயரதிகாரிகளும் கடைசி வரை பெரும் பிரயத்தனம் செய்திருக்கின்றனர். விசாரணையின் போது வீட்டிலிருந்து உணவு,படுக்கை, ஊடக காமராக்களிடமிருந்து பாதுகாப்பு என்று ஏகப்பட்ட வரவேற்பு. பிறகு வேறு வழியில்லை, ஏதாவது கைது செய்து கணக்கு காட்டவேண்டிய நிலை என்று வந்த பிறகு முதல்வர் அலுவலகத்தில் அனுமதி கேட்டிருக்கின்றனர். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு போன்று இந்த அனுமதியும் பல மணி நேரங்களுக்கு பிறகு வந்திருக்கிறது. ஒரு கொள்ளையரை கைது செய்ய எதற்கு முதல்வர் அனுமதி?
தற்போது ஏமாற்றுதல், மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீதிபதி முன்னிலையில் நாங்கள் நிரபராதி என்றே பச்சமுத்து தரப்பு கடைசை வரை பகிரங்கமாக பேசியிருக்கிறது. அரசு தரப்பும் இது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யலாம் என்று கூறிவிட்டது. இறுதியில் வேறு வழியின்றி பச்சமுத்து பாதுகாப்பாக சிறைக்கு அனுப்பப்படுகிறார். அதுவும் இதய நோய், சி.டி.ஸ்கேன், மருத்துவர் அறிக்கை என்று அந்த புகழ்பெற்ற நெஞ்சு வலி நாடகத்தின் படி கடைசி வரை தப்பிக்க முயற்சித்திருக்கிறார்கள்.
இந்த கைது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி தனது முதலாளி பச்சமுத்துவுக்காக வாதாடும் வழக்கறிஞர்களின் கருத்தை ‘செய்தியாக’ வெளியிட்டு வருகிறது. அதன் படி மதன் சதி செய்தார், பண மோசடி செய்தது அவர், தானில்லை என்று கூறுகிறார்கள். தொழில்போட்டி காரணமாக சன், தினகரன் மட்டும் பச்சமுத்துவின் வண்டவாளங்களை முழுமையாக வெளியடுகின்றன. மற்ற ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன. இறுதியில் சில நாட்களுக்குப் பிறகு பச்சமுத்து மீண்டும் கல்வி வள்ளலாக வெளியே வருவார். தமிழ் அறிஞர்களுக்கு விருது கொடுப்பார். தமிழ் நடிகர்களுக்கு பொன்னாடை போர்த்துவார். சாதனை தமிழர்களுக்கு பதக்கமளிப்பார். புதிய தலைமுறையோ ஓனரின் இமேஜுக்குகாக ஹாலிவுட் இயக்குநர்களையே வரவழைத்து ஆவணப் படமெடுப்பார்கள். பத்திரிகையாளர் மாலனோ உப்பிட்டவரை  உயிருள்ளவரை நினை என்று தத்துவம் எழுதுவார். தனியார் கல்விக்கு இத்தகைய சோதனை வந்தால் மக்கள் பாதிப்பு அடைவார்களா, அதிர்ச்சி அடைவார்களா என்று பாண்டே தந்தி டி.வியில் வாதம் புனைவார்.
பாசிச மோடிக்கும், ஜெயாவுக்கும் சொம்படிக்கும் புதிய தலைமுறையை நடுநிலை ஊடகம் என்று நம்பிய அப்பாவிகளும், ஒவ்வொரு முறையும் பச்சமுத்துவின் கொள்ளையை கூறி புதிய தலைமுறையை விமரிசக்க கூடாது என்று ஆவேசப்பட்ட அறிஞர்களும், பச்சமுத்துதான் தமது பணியை பாராட்டி விருதளித்தார் என மோகம் கொண்ட தமிழ் எழுத்தாளர்களும் இனியாவது திருந்துவார்களா?
மதன் – பச்சமுத்து மோசடி கூறுவது என்னவென்றால் இந்நாட்டில் எந்த சட்டமும், நீதிமன்றமும், அரசும் ஒரு கார்ப்பரேட் கொள்ளையனை எதுவும் செய்ய முடியாது என்பதே.
மாணவர்களும்,பெற்றோர்களும் நேரடியாக பச்சுமுத்துவின் மாளிகை, பல்கலை கழகம், தொலைக்காட்சி வளாகங்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு கைப்பற்ற வேண்டும். இந்த அமைப்பு பச்சமுத்துவை பாதுகாக்கவே செய்யும் என்பதால் இதைத்தவிர எந்த வழியும் இல்லை.
புதிய ஜனநாயகத்தில் (ஜூலை 2016 இதழ்) வந்த மதன் ‘காணாமல்’ போனார் ! பச்சமுத்துவுக்கு அரசு பாதுகாப்பு  எனும் கட்டுரையை வைத்து இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. பரப்புங்கள்!
அவசரமாக செய்திருப்பதால் வீடியோ உ ரையில் ஒரு சில தவறுகள் உள்ளன, பொறுத்தருளுங்கள்!

கருத்துகள் இல்லை: