புதன், 24 ஆகஸ்ட், 2016

பெரியார் மீது விமர்சனம் இல்லை! - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 1

andhimazhai.com :  ஒரு திரைப்பட இயக்குநர் இந்த அளவுக்குப் பேசப்படுவது இதுவே முதல்முறை என்கிற அளவுக்கு கபாலி பட இயக்குநர் ரஞ்சித் மீது கவனம் குவிந்திருக்கிறது. ரஜினியின் படத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலைப் பேசும் படமாக எடுத்துவிட்ட ரஞ்சித் மரபான தமிழ்ச் சமூகத்தில் நிச்சயம் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறார். அவருடன் அந்திமழைக்காக நிகழ்த்திய நேர்காணல் இது.
ரஞ்சித் யார்? எங்கிருந்து வந்தீர்கள். உங்கள் பயணத்தின் துவக்கம், பாதை இவற்றை பகிர்ந்துகொள்ள முடியுமா? நான் கரலப்பாக்கத்தைச் சேர்ந்தவன். எங்கள் குடும்பம் அங்குள்ள கீழ்க்கொண்டையார் காலனியில் இருந்தது.  இப்போது அதற்கு அம்பேத்கர் நகர் என்று பெயர்.  அப்பா  பாண்டுரங்கன், அம்மா  குணவதி,  அண்ணன் பிரபு   தம்பி சரவணன். எங்கள் ஊரில் ஐம்பது அறுபது தலித் குடும்பங்கள் உண்டு.  தள்ளேறி என்றழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர் வேலையில் இருந்தார் தாத்தா. அங்குள்ள பள்ளியில்தான் படித்தேன். பாண்டீஸ்வரம், வெங்கலூர், ஆவடி என்று மாறி மாறிப் படித்தேன்.

நான் ஏழாவது படிக்கும்போது முதன்முறையாக ஒரு நாடகம் நடித்தேன்.
எனக்கு அப்போது நடிப்பு சுத்தமாக வரவில்லை. ஆகவே நடனமாடச் சொனார்கள். ‘ஆட்டமா பாட்டமா’ பாட்டுக்கு ஒன்ஸ்மோர் கேட்கும் அளவுக்கு  குழுவினரில் ஒருவனாக ஆடினேன். அதுதான் என் முதல் மேடை நிகழ்கலை அனுபவம்.

என் இரண்டு மாமாக்களும் ஓவியர்கள். அவர்களின் பெயிண்ட், பிரஷ் போன்றவற்றைத் திருடி எடுத்துவந்து வைத்து வரைந்து பார்ப்பேன். என் அப்பா என் ஓவிய முயற்சிகளுக்கு உறுதுணையாய் இருந்தார்.  பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது ஊரில் ஒரு திருவிழாவில் போடுவதற்காக நாடகம் எழுதினேன். ஒத்திகை எல்லாம் பார்த்தாயிற்று. ஆனால் ஊரில் ஒரு பிரச்சனையாகி நாடகம் மேடையேறாமல் போனது.  நாடகம் எப்படி வருமோ என்று பயந்துகொண்டிருந்த எனக்கு அது இல்லை என்றவுடன் கொஞ்சம் நிம்மதியானது. ஆனாலும் நாடகம் எழுதியது அதுவே முதல்முறை. அப்போதெல்லாம் சினிமாவுக்கு வரப்போகிறேன் என்று தெரியாது. ஆனால் இயக்குநர்களின் பேட்டிகள் எனக்குப் பிடிக்கும். ‘நாமும் இயக்குநரானால் இப்படியெல்லாம் பேசலாம்’ என்று நினைத்துக்கொள்வேன்.


இளம் வயதில் தனியே அமர்ந்து எதையாவது யோசித்துக்கொண்டிருப்பதை வழக்கமாக்கி இருந்தேன். என் அம்மா கூட ‘மூலையில் முட்டை போட்டுக்கிட்டிருக்காதடா’ என்று சொல்வதுண்டு. அந்த சமயத்தில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினேன்.  தனியாக அமர்ந்து கிறிஸ்தவ பாடல்களை எழுதுவேன்.


நீங்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினீர்கள் என்பது புதிய செய்தி. இப்போது கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?


என் சான்றிதழ்படி நான் இந்து ஆதிதிராவிடர்.  என் அப்பா தன் இளமைக்காலத்தில் கிறிஸ்தவராக இருந்திருக்கிறார். என் சித்தப்பா கிறிஸ்தவர்தான்.  கிறிஸ்தவ மதத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு மதம் மாறியவுடன் நான் ஒரு தீவிர கிறிஸ்தவனாகவே இருந்தேன்.   அப்புறம் எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு வெளியேறி இப்போது மதமற்றவனாகத்தான் இருக்கிறேன். கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனது.
கடவுள் நம்பிக்கை அற்றுப்போய் மதமற்றவவராய் உங்களை மாற்றியது எது?
சினிமா குறித்தெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தாலும் ஒருபக்கம் நன்றாகப் படிப்பவனாகத்தான் இருந்தேன். ஆனால் ஆங்கிலம் வராது. பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலப்பாடத்தில் தோல்வி அடைந்தேன். என் அப்பா ஓ.ஏ. எனப்படும் அலுவலக உதவியாளராக இருந்தார். அம்மா வீட்டில் இருந்து பாடுகளைச் சுமப்பவர். அப்பாவுக்கு என்னை இன்ஜினியராக்கிப் பார்க்கவேண்டுமென ஆசை. என் அண்ணன் புதுக்கல்லூரியில் பூவை மூர்த்தியாரின் உதவியுடன் கல்லூரிக்குள் நுழைந்தான். அவன்தான் எங்கள் தலைமுறைக்கு முதல் பட்டதாரி. எங்கள் ஊருக்கும் கூட. பூவை மூர்த்தி மிக நல்ல மனிதர்.  எங்கள் பெரியப்பா மகன் ஒருவருக்கும் அவர் முயற்சி செய்துதான் ஒரு கல்லூரியில் இடம் வாங்கித் தந்தார்.  இந்த நிலையில் நான் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்ததை அப்பாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் பணியாற்றிய அரசாங்க அலுவலகத்தில் எல்லோருடைய பிள்ளைகளும் டாக்டர், இன்ஜினியர் என்று படிக்கையில் அதுபோலவே நானும் ஆகவேண்டும் என ஆசைப்பட்டவர்.  ஆங்கிலத் தேர்வை மீண்டும் எழுத நேர்கையில் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்.  கேள்வித் தாளை திறக்குமுன்னும் கூட ஜெபித்தேன். நன்றாகவே எழுதியது போலத் தெரிந்தது. ஆனால் 68 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மதிப்பெண்களில் மீண்டும் தோல்வி. எதற்குமே அழாத எனக்கு அழுகை வந்தது. அப்போது  பல பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைகளை எல்லாம் ஏன் கடவுள் தீர்க்கவில்லை என்று கேள்வி வந்தது. இன்றிலிருந்து கடவுள் இல்லை என்று நினைப்போம். நம் வேலையைப் பார்ப்போம். என்னதான் நடக்கிறதென்று பார்ப்போம் எனத் தோன்றியது. எனக்கு ஆங்கில இலக்கணம் வராது. ஆகவே அடுத்த முறை எப்படியாவது கல்லூரியில் சேரவேண்டுமென்றால் ஆங்கிலம் பாஸ் செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் முழு புத்தகத்தையும் அப்படியே மனப்பாடம் செய்துகொண்டு போனேன். அப்படியும் 105 மதிப்பெண்கள்தான் பெற்று பாஸானேன்.  அப்போது தோன்றியது. கடவுள் எல்லாம் சும்மா. ஒன்றுமில்லை. நான் முயற்சி செய்து படித்தால் நான் ஜெயிப்பேன். கடவுளால் ஒன்றும் முடியாது. கடவுள் கிடையாது என்று தோன்றியது. அத்தோடு ஒரு முழுக்கு போட்டுவிட்டேன். அப்போதுதான் அம்பேத்கரை வாசித்தேன். தினம் சாதிப் பிரச்சனை.
ஒரு மரத்தடியில் கீழ் உட்கார்ந்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தாலும் இறுதியில் அது சாதி குறித்த பேச்சோடுதான் முடியும். அவன் அப்படிச் சொன்னான், இப்படிச் செய்துவிட்டான் என்று நண்பர்கள் பேசிக்கொள்வோம். எதைத் தொட்டாலும் அது சாதியில் முடிந்தது. இன்றுவரை என்னைத் தொடர்வதும் அதுவாகவே இருக்கிறது. மொத்தமாக சாதி, மதம் எல்லாவற்றிலிருந்தும் வெளியேறினேன். அப்போதுதான் பெரியாரைப் படித்தேன்.  கல்லூரியில் என் ஜூனியரான அனிதாவைத்தான் மணந்திருக்கிறேன். காதலித்த காலத்தில் நானும் அனிதாவும் எழும்பூர் மியூசியத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது போலீஸ் வந்து எங்களை அழைத்துக்கொண்டு போனது. என் கையில் அப்போது பெரியாரின் புத்தகம் இருந்தது. அதைப் பார்த்த போலீஸ்காரர். ‘இவரைப் படிக்கிறியா? அப்போ நீ உருப்பட்டுடுவே’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்.



சென்னை கவின்கலைக்கல்லூரியில் சேர்ந்ததுதான் உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை எனச் சொல்லலாமா?

அப்போது இரண்டே இலக்குதான். ஒன்று ஆர்ட் டைரக்டராகவேண்டும் அல்லது அனிமேட்டராகவேண்டும்.  எங்கள் கல்லூரியில்  நவீன நாடகமொன்றை பார்த்தபோது இப்படியெல்லாம் கூட நாடகம் இருக்குமா என்று வியப்பாக இருந்தது. அந்த சமயத்தில்தான் கல்லூரியில் திரைப்பட விழா அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் நான் பார்த்த முதல் படம் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’.  எனக்கு ஆங்கிலத்தில் சப் டைட்டில் பார்த்தாலும் அப்போது புரியவில்லை. வெறும் திரைமொழி என்னை அப்படி பாதித்து கண்கலங்க வைத்தது. இப்படியும் படம் பண்ணலாமா என மிரண்டுவிட்டேன். அதன்பின் ‘ரொஷமான்’, ‘சினிமா பாரடைஸோ’, ‘பொடம்கின்’ என மூன்று நாட்களில் நான் பார்த்த படங்கள் வேறு உலகைக் காட்டின. கல்லூரிக்கு ஆவடியிலிருந்து ரயிலில் வரும் இடைவெளியில் வேறு வழியின்றி படிக்கப் பழகியபின், இலக்கியப் பத்திரிகைகளில் ஆர்வம் வந்தது. அந்த சமயத்தில்  ‘நானும் சினிமாவும்’ என்கிற மகேந்திரனின் புத்தகத்தை வாசித்த பின் சிறுவயதில் பார்த்த  ‘உதிரிப்பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’ எல்லாம் திரும்பவும் பார்த்தேன். அப்படங்கள் எப்படிப்பட்டவை எனப் புரிந்தது. அகிரகுரோசாவின் வாழ்க்கை வரலாறு வாசித்தது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நிறைய கற்றுக்கொண்டேன்.  சினிமாவுக்குள் நுழைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, புரட்டிப் போட்டு, நாட்டையே திருத்தவேண்டும் என்றெல்லாம் கனவு. மூன்றாம் ஆண்டில் ‘உணர்வுகள்’ என்று ஒரு நாடகமும் நான்காம் ஆண்டில் ‘கடவுளும் மிருகமும்’ என்று நாடகம் போட்டோம். கல்லூரிப் படிப்பு இப்படி நிறைய என்னை மாற்றிவிட்டது. கலையும் இலக்கியமுமே முக்கியம் என்று இறங்கிவிட்டேன்.



சினிமா முயற்சிகளை எப்போது துவக்கினீர்கள்?


கல்லூரி படிக்கும்போதே மூன்றாம் ஆண்டிலேயே இயக்குநர் வேலு பிரபாகரனிடம் சென்றேன். ‘காதல் கதை’ எடுத்துக்கொண்டிருந்தார். இரண்டு மாதங்கள் அதில் ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்தேன். அவர் கடவுள் மறுப்பு எல்லாம் பேசியவர் என்பதால் என்னால் மிக எளிதாக அவரோடு பணிபுரிய முடிந்தது. கல்லூரி முடித்தபின் அனிமேட்டர் ஆக வேண்டி ஒரு நிறுவனத்திற்கு நேர்காணலுக்குச் என்றேன். எடுத்தவுடன் ‘சம்பளம் ஒழுங்கா குடுப்பீங்களா?’ என்று கேட்டுவிட, இவன் ரொம்ப கேள்வி கேட்பான் போல என்று எனக்கு வேலை தரவில்லை. நல்லவேளை அப்படியானது. அதன் பின் பிலிம் சேம்பரில் சேர்ந்தேன்.  லிங்குசாமி, சேரன் ஆகியோரிடம் சென்றேன்.  இருவரும் என்னை சேர்த்துக்கொள்ளவில்லை. பின் இயக்குநர் சசியிடம் சென்றேன். அவர் தான் முதலில் என்னிடம் நிறையப் பேசினார். ஆலோசனைகள் சொன்னார். ‘நீ நினைப்பது போலில்லை சினிமா’ என்று பல விஷயங்கள் சொன்னார். அந்த உரையாடல் எல்லாமே மிக நல்ல உரையாடல்கள். ‘இவர் இப்படி இருக்காதே என்கிறார். ஆனால் நாம் இப்படித்தான் இருக்கவேண்டும். என்னதான் ஆகிறதென்று பார்ப்போம்’ என்று முடிவு செய்தேன். என் ஸ்கிரிப்ட், கவிதைகள் இன்னபிற இத்யாதிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் ஓர் இயக்குநரைப் பார்த்தேன். அவர் என்னிடம் பேசிவிட்டு ‘ உன்னைப் பார்த்தால் சமூக சீர்திருத்தவாதி போல் தெரிகிறாய். உனக்கு சினிமா செட்டாகாது. தயவுசெய்து போயிடு’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். கோடம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு வரை அழுதுகொண்டே சென்றேன். ஆனால் சினிமாதான் நமக்கு என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு முடிவுக்கு வந்தேன். தினமும் படிப்பது, யாரையாவது சந்திப்பது. சந்தித்த நபர் குறித்து கவிதை எழுதுவது என்று தொடங்கினேன். அப்புறம் அதையும் நிறுத்திவிட்டேன்.  ‘மனசெல்லாம்’ சந்தோஷிடம் ஸ்டோரி போர்ட் ஆர்டிஸ்டாக சேர்ந்தேன். ஆவடியிலிருந்து தினமும் சென்னை வந்துபோக முடியவில்லை என்பதால் ஒரு பெட்டியோடு அம்மா என்னை சென்னையில் அறை எடுத்துத் தங்க, கட்டிப்பிடித்து அழுதபடி’பெரிய ஆளாகணும்பா’ என்று சொல்லி விடைகொடுத்தார். ஊரையும் சேரியையும் பிரிக்கும் கழனி வரப்பில் என் தம்பி உடன்வர நான் சென்னைக்குப் புறப்பட்டது ஒரு திரைப்படக் காட்சி போல எனக்கு நினைவிலிருக்கிறது. அம்மாவின் அந்த அழுகைதான் இன்றைக்கு நான் நன்றாக இருப்பதற்குக் காரணம். ஆர்ட் டைரக்டர் கதிர் என்னை ‘தகப்பன்சாமி’ இயக்குநர் சிவசண்முகத்திடம் சேர்த்துவிட்டார். ஷூட்டிங் செல்ல இரண்டு நாட்களே இருந்த நிலையில் அவர் சேர்த்துக்கொண்டது அதிசயம். ஒரு அசிஸ்டண்ட் டைரக்டராக அங்கே இருந்தாலும் எல்லா வேலைகளையும் செய்வேன். செட் டிபார்ட்மெண்ட் ஆள் போல மூட்டையைத் தூக்கி அங்கே போடுவது, உயரத்தில் ஏறி ஒரு வேலை செய்வது என்று எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வேன்.  வெறும் 2 மணி நேரம் தூங்கிய நாட்கள் உண்டு. ஆனால் வீட்டில் ஒரு வேலை செய்தவனில்லை நான். அந்த வேலைகளை அவ்வளவு சந்தோஷமாகச் செய்தேன்.  அதன் பின் வெங்கட் பிரபுவை நண்பர் பிலிப் மூலமாக தொடர்புகொண்டேன். அவர் ஒரு ஆல்பம் செய்தார். அதற்கு ஸ்டோரி போர்ட் செய்துகொடுத்தேன். லிங்குசாமியிடம் என்னைச் சேர்த்துவிடச் சொல்லி அவரிடம் கேட்டிருந்தேன். திடீரென்று ‘நானே படம் பண்ணப் போறேன். என்கிட்டயே இரு’ என்றார். அவரிடமே அசிஸ்டண்டாக இருந்தேன். சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் பணியாற்றினேன். இதற்கிடையில் அனிதாவை திருமணம் செய்தேன். படம் பண்ணியபிறகுதான் கல்யாணம் என்றெல்லாம் குழப்பாமல் வாழ்க்கையை அமைத்தாயிற்று. இப்போது மகிழினி என்கிற மகள் இருக்கிறாள். என் உதவி இயக்குநர் வாழ்க்கையில், அனிதாதான் எனக்கு முழு ஆதரவு. எனக்கு அனிமேட்டர் வேலை கிடைக்காமால் போனதென்று சொன்னேனில்லையா? அதே நேர்காணலில் அனிதாவுக்கு வேலை கிடைத்து முழுதாகக் குடும்பத்தை நிர்வகித்தார்.  அவர் ஓவியக் கலைஞர்.

நீங்கள் சினிமா மூலம் சாதிக்க எண்ணியதை சாதிக்க முடியும் என்று ஆரம்பத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்ததா?



இத்தனை ஆண்டுகளில் நாம் நினைத்து வந்த சினிமா வேறு. இங்கிருக்கும் சினிமா வேறு என்பதையும் உணர்ந்திருந்தேன். ஒரு தலித் என்று தன்னை வெளிப்படுத்தும் கலைஞனுக்கு இங்கு என்ன நேரும் என்பதை அறிந்திருந்தேன்.  நான் பார்த்த
சினிமாக்களில் எளிய மக்களின் வாழ்வியலை எப்படி காட்டியிருக்கிறார்கள் என்று பார்த்தால், ஒன்று காட்டவே இல்லை. அப்படியே காட்டினாலும் தப்பாகத்தான் காட்டி இருக்கிறார்கள் என்பது புரிந்தது. வில்லனாக அல்லது காமெடியனாகத்தான் அவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.  கொடூரர்களாக, கொலைகாரர்களாக, பிக்பாக்கெட்காரர்களாகவும்  நகரம் சார்ந்த படங்களில் அவர்களை காண்பிக்கின்றனர். கிராமம் சார்ந்த படங்களில் அவர்களை அஞ்சி அஞ்சி பிழைக்கிறவர்களாகக் காண்பிக்கின்றனர். பொதுவாக தமிழர் அடையாளம் என்பதற்குள் இவர்கள் வருவதில்லை. தமிழர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் என்றாக்கிவிட்டிருந்தது தமிழ் சினிமா. இவ்வளவு பிரச்சனைகள் இருக்கையில் நாம் யாருக்காக படம் பண்ணவேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினேன். பெரும்பான்மைச் சமூகம் அப்படி இருக்கையில், நான் சொல்லும் கருத்துக்கள் கதையளவிலேயே நிராகரிக்கப்படலாம் என்று அச்சம் வந்தது. முதலில் ஒரு காதல் கதை எழுதி வைத்திருந்தேன். சில தீவிரமான கதைகளும் எழுதி வைத்திருந்தேன். அதையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு ‘அட்டகத்தி’யை கையில் எடுத்தேன். அதில் எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் குடியிருப்பு, உணவு, குறியீடாக கதை எப்பகுதியில் நிகழ்கிறது என்பதெல்லாம் மிகவும் முக்கியமாகப் பட்டது. இதுவரை தமிழ்ச்சமூகம் மறந்த அல்லது மறுத்த தமிழ்க்குடிகளை காட்சிப்படுத்தி அடையாளப்படுத்துவது முக்கியம் எனத் தோன்றியது. வெளிப்படையாகப் பேசாமல், உளவியலாக பார்வையாளர்களை படத்தோடு ஊடாட வைக்கவேண்டும் என்றும் அதன் மூலம் இது யாருடைய கதை என்று கதைமாந்தர்கள் குறித்து
யோசிக்கவைக்கவேண்டுமென்று தோன்றியது.  தலித் என்று சொன்னாலே அதற்கு எதிராக நிற்கிற, கோபப்படுகிற, கிளர்ந்துழுகிறவர்களைப் பார்க்கிறோம். அந்த ஆட்களையும் விரோதியாக்காமல்,  அவர்களையும் ரசிக்கவைக்கவேண்டுமென யோசித்து எடுத்த படம்தான் ‘அட்டகத்தி’. அதை வெறும் காமெடி படமாக எடுத்துக் கொண்டால் அது பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. அதற்குள் அத்தனை விஷயம் இருக்கிறது. அதனால்தான் என் தாத்தா பாடிய ‘அடியே கான மணிக்குயிலே’  என்கிற சாவுப்பாட்டை வைக்க முடிந்தது. மற்ற கலாச்சார விஷயங்களையும் உள்ளே கொண்டுவர முடிந்தது.  படம் பார்த்தவர்கள் அப்படத்தில் காண்பிக்கப்படும் வாழ்வியலைப் பேசினார்கள். மாட்டிறைச்சி தலித்துகளின் உணவு. அதுகுறித்து அதில் பேச முடிந்தது.



அட்டகத்தியில் உங்களுக்கு பிரச்சனைகள் வந்ததா?

அம்பேத்கர் படத்தை மாட்டக்கூடாதென பிரச்சனை வந்தது. எங்கள் வீடுகளில் ஒருபக்கம் கலைஞர் போட்டோ இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆர் போட்டோவும் இருக்கும். கூடவே அம்பேத்கர் போட்டோவும். என் அப்பா திமுகவில் இருந்தார். ஆனால் எம்ஜிஆர் ரசிகர். இப்படித்தான் இருக்கும். ஆகவே அட்டகத்தியில் மூன்று பேரின் போட்டோவையும் வீட்டுச் சுவரில் மாட்டியிருந்தேன். ஆனால் அம்பேத்கரின் படம் இருந்தால் மதுரை பக்கம் படம் ஓடாது என்று சொல்லி எடுக்கச் சொன்னார்கள். அம்பேத்கரோடு நான் அடிக்கடிப் பேசுவதுண்டு. அன்றும் பேசினேன். ‘உங்கள் புகைப்படத்தை எடுக்கிறேன் என்று கோவிச்சுக் காதீங்க. உங்க மக்கள் பத்தின படத்தைத்தான் நான் எடுக்கிறேன்’ என்று அவரிடம் சொல்லிவிட்டு போட்டோவை எடுத்தேன்.  அப்புறம் மாட்டிறைச்சி குறித்து வசனத்தைப் படமாக்கும்போது உள்ளூற இக்காட்சியை படமாக்க வேண்டாம் என்று
சொல்வார்களோ என்று பயமாக இருந்தது. அதைப் படமாக்கியவுடன் அத்தனை திருப்தியாக இருந்தது. படத்தில் நிறைய பேசியிருந்தோம். நிறைய எடிட் செய்து தூக்கிவிட்டார்கள். இக்காட்சியும் போய்விடுமோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  நல்லவேளையாக இக்காட்சி மட்டும் தப்பித்தது. முதன்முறையாக தலித்துகள் தங்களைப் பொருத்திப்பார்த்துக்கொண்ட படமாக அது இருந்தது. அப்போதே தொடங்கிவிட்டனர் சிலர். ‘தலித் வாழ்க்கையை ரஞ்சித் கொச்சைப்படுத்திவிட்டார்’ என்று. ஆக ஆரம்பத்திலேயே ஒரு முத்திரை விழுந்துவிட்டது. அடுத்தப் படம் கிடைக்கவேண்டுமே என்கிற கவலை இருந்தது. பெரும்பான்மையினர் சாதியோடு இருப்பதால் ஒரு பயம் இருந்தது. ஆனால் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தினர், சி.வி.குமார் போன்றோருக்கு நான் யார், என்ன சாதி, என்ன செய்கிறேன் என்று அறிந்தேதான் எனக்கு படம் தந்தனர். அதற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். ஜனவரியில் முடிந்த அட்டகத்தி ஆகஸ்டில்தான் வெளியானது. ஏழு மாதங்கள் முடங்கி இருந்தது.அட்டகத்தி பெரியளவில் பேசப்பட்டது. சில இலக்கியக் கூட்டங்களுக்கு அழைத்தார்கள். ஆனால் அட்டகத்தி சினிமாத்துறையில் விருதுகளுக்கெல்லாம் புறக்கணிக்கப்பட்டது. மற்ற சில படங்களுக்கு விரும்பிக் கொடுக்கும்போது இதற்கு ஏன் இந்தப் புறக்கணிப்பு என்கிற கேள்வி எழுந்தது. அதே சமயம் ஒரு ஹாரர் படத்திற்கு விருது கொடுத்தனர். இது ஒரு முக்கியமான படைப்பு என்று ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை என்று எனக்குக் கவலையாக இருந்தது. சில கோபங்கள் இருந்தன. பின் அவற்றைக் கடந்துவிட்டேன்.  அட்டகத்தி வெளியாவதற்குக் காத்திருந்த சமயத்தில்தான் ‘சார்பட்டா பரம்பரை’ ஸ்கிரிப்ட் எழுதினேன். ‘சார்பட்டா பரம்பரை’ ஒரு பாக்ஸிங் ஸ்கிரிப்ட் . அப்புறம் ‘மஞ்சள்’ என்று ஒன்று. காமெடிப் படமாக உருவாக்கச் சொன்னபோதும் அதன் கரு சமூக அக்கறையாக இருந்தது. அதைத்தாண்டி நான் கதையை யோசிக்கவில்லை. அப்புறம் வேறு கதை செய்து அதற்கு ரஜினி என்று தலைப்பு வைத்து, பின் கபாலி என்று மாற்றி, பின் காளி என்றாகி பின் அது மெட்ராஸ் ஆனது. தயாரிப்பாளருக்கு மெட்ராஸின் அரசியல் தெரியும். ‘கொஞ்சம் ஓவரா இல்லாமப் பார்த்துக்கோங்க’ என்று மட்டும் சொன்னார்கள்.  மக்களின் பிரச்சனையைப் பேச வேண்டும் என்று நினைத்து செய்ததுதான் மெட்ராஸ். வறுமையைத்தாண்டிய மகிழ்ச்சி, கொண்டாட்டத்தோடு அதன் வலியையும் காண்பிக்க எண்ணித்தான் மெட்ராஸ் செய்தேன். அது அவ்வளவு பெரிய விவாதத்தைக் கிளப்பியது சந்தோஷமாக இருந்தது. கேள்விகளைத் தூண்டி எதிர்த்தரப்பையும் யோசிக்கவைக்கவேண்டும் என்று தோன்றியது. அது நடந்தது. ஆனால் மெட்ராஸ் பல எதிரிகளை உருவாக்கித் தந்தது. அட்டகத்தியில் கூட ‘அது ஒரு பிஅண்ட் சி படம். அதையா நல்ல படம்னு சொல்றீங்க?’ என்கிற பிரச்சாரமெல்லாம் நடந்தது. ஆனால் இப்பிரசாரம் பரவலாக கவனம் பெறவில்லை. மெட்ராஸில் ஒரு படி மேலே போய் திட்ட ஆரம்பித்தனர். பாராட்டும் திட்டும் சமமாக வந்தது. இரண்டையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சில விரோதிகளும் உருவானார்கள். அவர்கள் என்னை கொலை செய்துவிடுவேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினார்கள். எல்லாம் நம் நண்பர்கள்தான்.  நம்மதான் கீரைமுள்ளு பரம்பரையாச்சே? அதை டீல் பண்ணிட்டேன். மெட்ராஸ் பார்த்துத்தான் ரஜினிசார் அழைத்தார். இப்போது கபாலிக்கும் பெரும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன.



கபாலியின் அடிநாதமான தலித் அரசியலும், வசனங்களும் பேசுவதற்காக ரஜினியை ஒப்புக்கொள்ள வைக்க நீங்கள் எப்படியெல்லாம் முயன்றீர்கள்?


அவர் மெட்ராஸ் பார்த்துத்தான் என்னை அழைத்தார். மெட்ராஸின் அரசியல் அவருக்குப் புரிந்திருந்தது. கபாலி தலித் சமூகத்தின் அரசியலாக நான் நினைக்கவில்லை. தமிழ்ச் சமூகத்தின் அரசியல்தான் இது. தமிழர்களே தமிழர்களுக்குப் பிரச்சனையாக இருப்பதைப் பேசுகிறோம். அதைப் புரிந்துகொண்டார் ரஜினி.

(நேர்காணல்: கவின்மலர். அந்திமழை ஆகஸ்ட் 2016 இதழில் வெளியானது)

கருத்துகள் இல்லை: