செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா


தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா 2016
20-08-2016 அன்று சென்னையில் தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 400 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து்கொண்ட இந்நிகழ்வில் இயக்குனர் அனுராக் காஷ்யப் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இயக்குனர் தீபா தன்ராஜுக்கு 2016 ஆம் ஆண்டுக்கான லெனின் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆய்வாளர் வ.கீதா, இயக்குனர் லீனா மணிமேகலை, சாரு நிவேதிதா, ஒளிப்பதிவாளர் நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்நிகழ்வை பிரம்மாண்டமான விழாவாக மாற்றியமைத்த பார்வையாளர்கள், பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், நன்கொடையளித்த நண்பர்கள் (நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை இங்கே அறிவித்தால், அவர்களிடம் மற்றவர்களும் நன்கொடை கேட்டு தொந்தரவு செய்வதாக புகார் வருகிறது.
எனவே நன்கொடை அளித்த நண்பர்கள் பொருத்தருளவும்), இரண்டு நாட்களும் விருந்தினர்களை அழைத்து வர, போக்குவரத்திற்கு பெரிதும் உதவியாக, இரண்டு நாட்களும் கார் வசதி செய்து கொடுத்த பீகேபி உரிமையாளர் நண்பர் குமரேசன் அவர்களுக்கும், அமெரிக்காவில் இருந்து பியூர் சினிமா புத்தகக் கடைக்கு வருகை புரிந்து, 200 டாலர்களை நன்கொடையாக கொடுத்த நண்பர் திருமூர்த்தி அவர்களுக்கும், நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த வைஷ்ணவி அவர்களுக்கும், விழா தொடர்பான வடிவமைப்புகளை சிறப்பாக கொடுத்த நண்பர் ரவீந்திரனுக்கும் தமிழ் ஸ்டுடியோவின் நன்றி. தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது என்பது தமிழ்நாட்டில் சுயாதீன கலைஞர்களை கொண்டாடும் பெரும் கொண்டாட்டம். இரண்டு நாட்களும் இதற்காக எங்களோடு தோள் கொடுத்து ஒத்துழைத்த நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் தமிழ் ஸ்டுடியோவின் நலன் விரும்பிகள். அவர்களுக்கு தனியாக நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இல்லையேல் தமிழ் ஸ்டுடியோ இல்லை. லெனின் விருது விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி உரித்தானது. குறிப்பாக பெருந்திரளாக கலந்துக்கொண்ட பார்வையாளர்களுக்கும்.
நிகழ்வில் பங்கேற்ற விருந்தினர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட மற்ற விருந்தினர்கள் குறித்து நிறைய எழுத வேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் அனுராக் ஒரு பெரும் கலைஞன். திரைப்பட உருவாக்கத்தில் மட்டுமல்ல, சக மனிதர்களிடத்தில் பழகுவதில் மிக எளிமையானவர். இந்தியாவில் தற்போது உயிர்ப்புடன் பெரும் வீச்சுடன் செயல்படும் மிக முக்கியமான இயக்கம் என்று தமிழ் ஸ்டுடியோவை குறிப்பிட்டுப் பேசினார். தமிழ் ஸ்டுடியோவிற்கு நன்கொடை கொடுங்கள் என்று பலமுறை மேடையிலேயே அறிவித்தார். பியூர் சினிமா புத்தகக் கடையில் ஆறாயிரம் ரூபாய்க்கும் மேல் புத்தகங்களையும், டி.வி.டி க்களையும் வாங்கி சென்றார். சென்னை வந்தபோது நான் பார்த்த அதே சிரித்த முகத்துடன்தான் இன்று காலை விமானம் ஏறும் வரை இருந்தார். எந்த இடத்திலும் முகத்தில் ஒரு சிடு சிடுப்போ, அயற்சியோ, கோபமோ தெரியவில்லை. இந்தியாவின் மிக புகழ்பெற்ற இயக்குனர்,வழிமறித்து அத்துணை தொந்தரவு செய்து செலஃபீ எடுத்துக் கொண்ட ரசிகர்கள், பார்வையாளர்களிடம யாரிடமும் மறுப்பு தெரிவிக்காமல், சிரித்த முகம் மாறாமல் இருந்தார். இப்படி ஒரு மனிதரை பார்ப்பதே அரிது. அனுராக் காஷ்யப்புடன் பழகிய இந்த நாட்களை என் வாழ்நாளில் பெரும் கொண்டாட்ட நாட்களாகவே கருதுகிறேன். இதனை சாத்தியப்படுத்தியது லீனா மணிமேகலை. என்னை விட தமிழ் ஸ்டுடியோவை பெரிதும் கொண்டாடும் பெரும்கலைஞர். கடந்த மூன்று வருடங்களாகவே லெனின் விருது பெரும் அத்துணை சிறப்புகளுக்கும் லீனா உறுதுணையாக இருந்து வருகிறார். லீனா இல்லாமல் இதெல்லாம் சாத்தியமே இல்லை. அனுராக் சென்னை வந்திருந்து உருவாக்கிய இந்த பெரும் அதிர்வுக்கு தமிழ் சமூகம் லீனாவிற்கு கடமைப்பட்டுள்ளது. இரண்டு நாட்களும் சாரு நிவேதிதா எங்களுடனே இருந்தார். சாருவின் வாசகர்கள் பலரும் அவர் தமிழ் ஸ்டுடியோவிற்காக நன்கொடை கேட்டு எழுதிய பிறகே நன்கொடை கொடுத்தார்கள். இரண்டு நாட்களுக்கும் ஒரு பைசா வாங்காமல் போக்குவரத்து உதவி செய்த நண்பர் குமரேசன் சாருவின் தீவிர வாசகர். சாருவுக்காகவே இந்த உதவியை தமிழ் ஸ்டுடியோவிற்கு செய்து கொடுத்தார். தமிழ் ஸ்டுடியோ நிகழ்வுகளை பரவலாக கொண்டு சேர்ப்பதில் சாருவுக்கு பெரும் பங்குண்டு. கடைசி நேரத்தில் அழைத்தபோதும், தயங்காமல் தீபாவின் படங்களை பார்த்துவிட்டு கூட்டத்திற்கு வந்து பேசிய ஒளிப்பதிவாளர் நடராஜ் எப்போதும் என் நன்றிக்குரியவர். தீபாவிற்கு ஏன் லெனின் விருது கொடுக்கிறோம் என்பதை வ. கீதா தன்னுடைய பேச்சில் நிறுவினார். அவருக்கும் பெரும் நன்றி.
ஐந்தாயிரம் ருபாய் நன்கொடையாக கொடுத்த நண்பர் பெலிக்ஸ், இயக்குனர் அம்ஷன் குமார் ஆகியோருக்கு தமிழ் ஸ்டுடியோவின் நன்றி எப்போதும் உரித்தானது.
 அனுராக் காஷ்யப்: https://www.youtube.com/watch?v=v7NGqMU76zQ
சாரு நிவேதிதா: https://www.youtube.com/watch?v=_3GzYbCKG-Y
லீனா மணிமேகலை: https://www.youtube.com/watch?v=g2CB-_OREhk    
முகநூல் பதிவு அருண் மோ

கருத்துகள் இல்லை: